Friday, December 5, 2014

எதிலப்பா நாயக்கர், தளி பாளையக்காரர்: ஆங்கிலேயத் தூதனைத் தூக்கிலிட்ட கல்வெட்டு

The tomb of the Englishman on which the early epitaph dating back to 1801 was discovered, in Coimbatore | Express
தளி பாளையப்பட்டில் உள்ள ஆங்கிலேயாதூதனின் சமாதி, தமிழ்க் கல்வெட்டு
பொதுவாக ஆங்கிலேயர்கள் நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்து தூக்கில் போடுவது வழக்கம். ஆனால் இந்திய அரசர்களின் யாரேனும் ஒருவர், ஒரு ஆங்கிலேயாரையாவது தூக்கில் போட்டிருக்கிறார்களா? ஆமாம் கொங்கு நாட்டில் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு பாளையப்பட்டு கிராமத்தில் இந்த சம்பவம் 1801 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.
 
டாக்டர் எஸ்.ரவி பிரபலமான தொல்லியல் அறிஞர், சிறந்த கல்வெட்டாய்வாளர். இவர் உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு கிராமத்தில் இருந்த ஒரு தமிழ்க் கல்வெட்டைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.  இப்பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இப்பகுதியின் பாளையக்காரகளால் நிகழ்ந்த கிளர்ச்சி பற்றிப் பேசுகிறது. ஒரு ஆங்கிலேயத் தூதன் எதிலப்பா  நாயக்கர் எனும் தளி பாளையக்காரரால் தூக்கிலிடப்பட்டது பற்றிய சரித்திரம் இக்கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது.  இது பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம்

மதுரையில் 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர் ஆட்சி மலர்ந்தது. பெரும்பான்மையான பாளையங்களில் தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர். இவர்கள் வடுகர் என்றும் தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பூர்விகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். இப்பகுதி கம்பளம் என்றும் கம்பள நாடு என்றும் அறியப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்த பாளையக்காரர். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்.

எதிலப்பா நாயக்கர் தளி பாளையப்பட்டை ஆண்டு வந்த பாளையக்காரர். இவரும் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தில் பிறந்தவர். கட்டபொம்மனின் வம்சாவளியைச் சேர்ந்தவர். 

உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பழையப்பட்டு என்பது வீரபாண்டிய கட்டபொம்மனால் நிறுவப்பட்ட சண்டை பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இராணுவ முகாம். இது பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
எதிலப்பா நாயக்கர், 1797 – 1798 இல் நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் இணைந்து  ஆலன்துரையின் ஆங்கிலேயப்படைக்கு எதிராகப் போராடியவர். பானர்மென் எனும் ஆங்கிலேயத் தளபதி செப்டம்பர் 5, 1799 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். கடும் போர் நடைபெற்று பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். என்றாலும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறவே செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

1799 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட பிறகு பல பாளையக்காரர்கள் ஏதிலப்பா நாயக்கரின் தலைமையில் ஒன்றிணைந்தனர். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர் 1801 இல் நிகழ்வதற்கு இவர் தலைமையில் அமைந்த கூட்டணி காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி படை வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை புத்துயிர் பெற்றது. ஊமைத்துரையைக் கைது செய்வதற்கு வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றார். பின்னர் இவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு 24.05.1801 இல் கோட்டையைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.

ஆங்கிலேய அதிகாரிகள் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு உதவிய பாளையக்காரர்களின் பட்டியலைத் தயார் செய்தனர். எதிலப்பா நாயக்கர் தான் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு மூல காரணம் என்று தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், தூதர்களை நாயக்கரின் கோட்டைக்கு அனுப்பினர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது பற்றி அறிந்து கொதித்துப் போயிருந்த நாயக்கர், ஆன்ட்ரே கட்டி என்ற அந்த ஆங்கிலேய தலைமைத் தூதனைப் பிடித்து சாகும்வரை தூக்கில் தொங்கவிட்டாராம். சடலத்தை அங்கிருந்த தோட்டாத்தில் புதைத்து விட்டாராம்.  இந்தச் சம்பவம் நடந்தது  வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு. இந்த ஆங்கிலேய தூதனின் சமாதியில் உள்ள தமிழ்க் கல்வெட்டு, தூதன் பெயர் ஆன்ட்ரே கட்டி என்றும் மரணித்த தேதி வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை நகரத்திலிருந்த
ஆங்கிறாய் கேத்தி பரங்கி
இருபத்தேழு வயதில்
தெய்வீகமாகி அடங்கின சமாது

 (Angirai Kethi, a twentyseven year old Englishman from Tanjore "attained divinity and buried here")

தேவராய நாயக்கர் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் இது. தூதனை தூக்கில் தொங்குவித்த மரம்கூட இந்தத் தோட்டத்தில் இருக்கிறதாம். இந்த சமாதி உள்ள தோட்டம் 'தூக்குமரத்தோட்டம்' என்று இந்த கிராமத்தவர்களால் அழைக்கப்படுகிறது. காலகாலமாய் கம்பளத்து நாயக்க மக்களிடம் பேச்சு வழக்கில் புளங்கி வந்த இக்கதை அரங்கசாமி கவுண்டரால் தொகுக்கப்பட்டு 'எதிலப்பன் வரலாறு' என்று நூல் வடிவம் பெற்றுள்ளது.

மேற்கோள்
  1. 19th century epitaph reveals new history. The New Indian Express.  05th August 2013
  2. The Kongu Chieftain who hanged a British Messenger. The New Sunday Express. 19 October 2014
  3. வீரபாண்டியகட்டபொம்மனின் 255 வது பிறந்த நாள். தமிழ் மீடியா, டிசம்பர் 05, 2014

Wednesday, December 3, 2014

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ் தூது இலக்கியம்



கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்ற இரண்டு நூற்கள் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய தூது இலக்கியங்களாகும்இந்த இரண்டு நூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17 ஆம்   நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி மலர்ந்தது. நாயக்க மன்னர்கள் தஞ்சை, மதுரை போன்ற பகுதிகளை விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக ஆளத் தொடங்கினார்கள். இவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சரியாக ஆதரிக்கவில்லை.

நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் போதிய ஆதரவு அளிக்காவிட்டாலும் பொதுமக்கள், ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவு போதிய அளவில் தமிழ் சிற்றிலக்கியங்களுக்கு  இருந்தது எனலாம். இப்படி சில ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவில் 17 ஆம் நூற்றாண்டில் காதல், மடல், தூது, நொண்டிநாடகம் போன்ற காமச்சுவை ததும்பும் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டன. நிலக்கோட்டை (இன்று ஜமீன் என்று அறியப்படுகிறது) நாயக்க சிற்றரசரான கூளப்ப நாயக்கர்  விரலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியத்துக்கு ஆதரவு தந்துள்ளார்.
 
உயர்திணை மாந்தர்களான புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, தாய் மற்றும்
எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது செல்லும்படி ஏவிவிடுவது போன்று அமைக்கும் இலக்கியம் தூது இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. தலைவி தலைவனிடத்தேயும், தலைவன் தலைவியிடத்தேயும் அனுப்புகின்ற தூது அகத்தூது என்றும்; அரசன் பகைவரிடத்தேயும், புலவர் வள்ளலிடத்தேயும் அனுப்புகின்ற தூது புறத்தூது என்றும் வகைப்படுத்துகிறார்கள். தூது நூல்கள் கலிவெண்பா என்ற யாப்பில் இயற்றப்பட வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு அனுப்பும் பல அகத்தூதுகள் காதலால் கட்டுண்டு பின் பிரிவுத் துயரால் துன்புறும் தலைவன் மற்றும் தலைவியரிடையே நிகழ்ந்தன. ஒருவர்
தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்க புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, பூவை, தாய் போன்ற மனிதர்களையும், எகினம், மயில், கிளி,   குயில், வண்டு அன்னம், மான், பூநெல் போன்ற பிற உயிரினங்களையும், மழை, மேகம், தென்றல் போன்ற அஃறிணைப் பொருட்களையும் தூதாக அனுப்பினார்கள். முதன்முதலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நெஞ்சுவிடு தூது என்ற தமிழ் தூது இலக்கியம் தோன்றியது. தொடர்ந்து அன்னம் விடு தூது, காக்கை விடு தூது, கிள்ளை விடு தூது, மான் விடு தூது, மேகம் விடு தூது போன்று பல தூது இலக்கியங்கள் தோன்றின.

சில சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவியரிடையே தூது அனுப்பும் செய்தி காணப்படுகிறது. பிற்காலத்தில் தோன்றிய சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் கடவுளர்களைத் தலைவனாகப் பாவித்து தூது அனுப்பும் செய்தி வருகிறது. தூது என்ற சிற்றிலக்கிய வகை தூது பற்றிய அடிப்படையில் அமைந்தது. பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகை வடமொழியில் உள்ளது. வடமொழியில் தூது இலக்கியம் சந்தேசம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுமகாகவி காளிதாசன் இயற்றிய மேக சந்தேசம் (மேகத்தைத் தூது விடுவது) பிரபல தூது இலக்கியமாகும்.

கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது 

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது  1728 இல் நிலக்கோட்டையை ஆண்ட 1728-ல் நிலக்கோட்டையை ஆண்ட கூளப்பநாயக்கன் என்னும் நாயக்க சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்ததுஇத்தலைப்பில் கவிஞர் கண்ணதாசனின் கிளுகிளுப்பான உரையுடன் இணைந்த கூளப்ப நாயக்கன் காதல் என்னும் நூல் வெளிவந்துள்ளது.

விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் காமம் துய்க்க தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும் நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளைவிட்டு வெளியேறுதலும் இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். எனவே விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் கிளுகிளுப்பான சிற்றின்ப வருணனையுடன் கூடிய பாடல்களுடன் கதை சொல்லப்படுகிறது. இறுதியில் நல்லின்பம் பெற ஆண்மக்களுக்கு அறிவுறுத்துவது. என்றாலும்  புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி விலாவரியாகச் சொல்வதுதான். 

விறலி விடு தூது இலக்கியங்களில் கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது விரகம், காமம், காதல், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இயற்றப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிப் பெண்களின் ஆடையணிகளான  ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றியெல்லாம் விலாவரியாக தெரியவருகிறது.

எனவே இதற்கு அந்தக்காலத்திலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது. சிற்றின்பப் பிரியர்களான சிற்றரசர்களும், பாளையக்காரர்களும் ஒன்றாகக் கூடி கேட்டுச் சுவைப்பார்களாம். காமம் பற்றிப் பேசினாலும் இவ்விலக்கியங்களில் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் அரசியல் பற்றிய அரிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. 
Related Posts Plugin for WordPress, Blogger...