Saturday, July 25, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 5

நரம்பியல் அறிவியல் (Neuro science), உளவியல் (Psychology), கற்பிக்கும் கலை (pedagogy): காலவரிசை / மைல்கல் நிகழ்வுகள்


Source: Interpretation of Tokuhama-Espinosa’s transdisciplinary fieldby Nakagawa, (2008), redrawn by Bramwell 2010.

நமது மூளையைப் பற்றிய பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்கு மிகுந்த ஆச்சர்யத்தைத் தருகின்றன. கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு கிரேக்க இலத்தீனிய தத்துவ ஞானிகள் பலவாறான யூகங்களை வெளிப்படுத்தினார்கள். கி.பி. ஆறு மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில் மூளைபற்றிய ஆய்வுகள் மந்த கதியில் நடந்தன. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆய்வுகள் துரித கதியில் நிகழ்ந்தன. இருபதாம் நூற்றாண்டு நவீன மருத்துவம் கம்ப்யூட்டர் நுட்பங்களை உள்ளடக்கிய பலகருவிகளைப் பயன்படுத்தி வாழும் மூளையின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டன.    மேலை நாடுகளில் பல ஆராய்சி நிறுவனங்களில் , பல்கலைக்கழகங்களில், ஆய்வுத் திட்டங்களில்  நடைபெற்ற மூளை ஆராய்சியில் பல சிக்கலான கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளன.  இப்பதிவில் நமது மூளையைப்பற்றி கடந்த காலத்தில் மேற்கொண்ட சுவையான ஆய்வுகள் பற்றிக் காண்போமா?

Source: Tokuhama-Espinosa, 2010 based on Hideaki Koizumi (1999) and Boba Samuel’s (2009) concepts of transdisciplinary studies. Graphic by Bramwell (2009).
‘தேவையற்ற சதைப் பிண்டம்’ இது  Braegen ‘பிரேன்’ என்ற லத்தீன் சொல்லின் பொருள். உங்களுக்கு தெரிந்த ('brain') பிரைன் ஆங்கில வார்த்தையின் வேர்ச்சொல் பிரேன் என்ற லத்தீன் வார்த்தையாகும். லத்தீனியர்கள்  மூளையை தேவையற்ற சதைப்பிண்டம் என்று நம்பி வந்துள்ளனர். சீன மொழியில் கூட மூளை என்ற வார்தைக்கினையான சீனச்சொல் இல்லை.  

அரிஸ்டாட்டில்

கி.மு. 350 வரலாற்றுக்கு முந்திய காலத்தில்  கிரேக்க சிந்தனையாளர்கள் உயிர் மற்றும் ஆன்மா பற்றி நிறைய சிந்தித்தார்கள்.  கிரேக்க  தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மா உருவமற்ற ஒன்று என்றும் அது அழிவில்லாதது என்றும் விளக்கினார்கள். கிரேக்கர்கள் உயிருடன் இருப்பதை ஆன்மாவுடன் இருப்பதாக நம்பினார்கள். கி.மு. 350இல் அரிஸ்டாட்டில் ஆன்மாவின் இயல்புகள் (டி அனிமா) (Latin, De anima) என்ற தலைப்பில் உயிர் மற்றும் ஆன்மா பற்றி  ஒரு தனிப் புத்தகமே எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை அரிஸ்டாட்டில் எவ்வாறு தொடங்குகிறார் தெரியுமா?  ”உலகில் இதுவரை கேட்கப் பட்ட கேள்விகளிலேயே மிகவும் கடினமானது உயிர்/ஆன்மா என்றால் என்ன என்ற கேள்விதான்” என்று தொடங்குகிறார். என்றாலும் உடல் இல்லாமல் ஆன்மாவால் இயங்க முடியும் என்று பிளாட்டோ தெரிவித்த கருத்தை அரிஸ்டாட்டில் ஏற்கவில்லை. எனவே உளவியலின் முதல் நூல் அரிஸ்டாட்டிலால் எழுதப்பட்ட De Anima  'ஆன்மாவின் இயல்பு' என்பதாகும்.    

மனித மூளை பற்றி முதன் முதலில் ஆராய்ந்தவர் அரிஸ்டாட்டில். அவர் மூளை பற்றி கூறுகையில் 'இதயம் செலுத்தும் இரத்தத்தை குளிர்விக்கும் வேலையையே மூளை செய்கிறது' என்று நம்பினார்.    

கி.பி. முதலாம் நூற்றாண்டு அலெக்சான்றியன், கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர், 'மனித எண்ணமானது இதயத்தை விட மூளையாலேயே கட்டுபடுத்தப்படுகிறது' என்று நம்பினார்

கேலன் (Galen) (120-200 AD)
மருத்துவ அறிஞர்களின் வரிசையில் முன்னணி இடம் வகித்த கேலன் (Galen) என்ற கிரேக்க அறிஞர் மருத்துவ அறிவியல், உடற்கூறியல் (anatomy) ஆகிய துறைகளில் அரும்பணியாற்றியவர். மனிதக் குரங்குகள் மற்றும் சில விலங்குகளைத் தமது ஆய்வுக்கு உடற்கூறியல் ஆய்வில் ஈடுபட்ட முதல் ஆய்வாளர்.இவர் 'எல்லா நரம்புகளும் மூளைக்குத் தண்டுவடம் (spinal cord) வழியே செய்திகளைத் தெரிவிக்கின்றன' என்றார். 

லியானார்டோ டாவின்சி
கிறித்துவமத வழக்கப்படி இறந்த உடலைத் தோண்டுவதும், அதுபற்றி ஆய்வதும் கொடூர குற்றம் ஆகும். அப்படி தடையை மீறி செய்தால் மரண தண்டனை என்ற நடைமுறை பதினாறாம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் கடைபிடிக்கப்பட்ட காலத்தில், எடின்பரோ நகரில் லியானார்டோ டாவின்சி (1452 – 1519 A.D.) மனித உடல் பற்றி மிகவும் ரகசியமாக ஆராய்ந்து வந்தார். மத நெருக்கடிகளால் இவர் தனது ஆராய்ச்சியை தொடர  இயலவில்லை.  இரு திருடர்கள் உதவியால் ஒரு பிணத்தைத் திருடி மண்டையோட்டின் உட்பகுதியை பிளந்து பார்த்தபோது அவரது இடப்புற மூளை அனைத்தும் சிதைந்து காணப்பட்டது. பிணத்தின் பெயர், முகவரி, அவர் எந்த வியாதிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்ற தகவல்களை ஒப்பிட்டபோது அவருக்கு வலப்புறப் பக்கவாத நோய் இருந்ததைக் கண்டு டாவின்சி வியப்படைந்தார். உலகில் மனித மூளையின் செயல்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்டு  வெளியான முதல் ஆய்வு இது. தொடர்ந்து உடலின் இயக்கத்திற்கும், மூளைக்கும் பெரும் தொடர்பு உள்ளது கண்டு மேலை நாட்டு மருத்துவர்கள் மூளையின் செயல்பாடு பற்றிய முழு ஆராய்ச்சியில்  இறங்கினர்.

1536 நிக்கொல மாஸ்ஸா (Nicolo Massa) என்பவர் ஸெரிப்ரோ ஸ்பைனல் திரவம் (cerebro spinal fluid) பற்றி விவரித்தார்.

1543 அன்றியாஸ் வெஸலியஸ் (Andreas Vesalius) என்பவர் பினியல் சுரப்பி (pineal gland) பற்றி விளக்கினார்   

1573 கான்ஸ்டான்சோ வரோலியோ (Constanzo Varolio) என்பவர் போன்ஸ் (pons) என்னும் உறுப்புக்குப் பெயர் சூட்டினார். இவர் தான் மனித மூளையை முதன் முதலில் அதன் அடிப்பகுதியிலிருந்து வெட்டி எடுத்தவராவார்.

1586 ஏ பிக்கோலோமினி என்பவர் கார்டெக்ஸ் மற்றும் வொய்ட் மேட்டர் (வெள்ளை வஸ்து) ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்தார்.

1649 ரெனி டெஸ்கார்ட்டிஸ் (Rene Descartes)  என்பவர் பினால் சுரப்பி (pineal gland) உடல் மற்றும் உள்ளத்தின் கட்டுப்பாட்டு மையம் (control center) என்றார்  

1664 தாமஸ் வில்லிஸ், கிறிஸ்டோபர் ரென் படங்களுடன்,  ஸெரிப்ரி அனாட்டமி என்ற நூலை வெளியிட்டார். மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்கிய புத்தகம் இது.

1681 தாமஸ் வில்லிஸ் ந்யூராலாஜி (நரம்பியல்) என்ற சொல்லாக்கத்தை முதலில் பயன்படுத்தினார்

1749 டேவிட் ஹார்ட்லி (David Hartley) என்பவர் சைக்காலஜி (psychology) என்ற சொல்லாக்கத்தை தாம் எழுதிய Observations of Man என்ற ஆங்கில நூலில் முதலில் பயன்படுத்தினார்.

சைகாலஜி என்ற வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? மனிதனின் ஆன்மா அல்லது ஆவியின் இயல்பு மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கும் அறிவியல் என்பதாகும். எனவே உளவியல் என்பது ஆன்மாவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்யும் பிரிவாகவே முதலில் தோன்றியது.  ஆதிமனிதன் தன் உடலுக்குள் ஆன்மா என்னும் உருவமற்ற ஸ்தூலப்பொருள் இருப்பதாக நம்பினான். இந்த ஆன்மாதான் மனித உடலை இயக்குகின்றது என்ற முடிவில் திடமாயிருந்தான்.

1760 அர்னி சார்லஸ் லாரி (Arne-Charles Lorry) என்பவர் ஸெரிபெல்லதில் (cerebellum) ஏற்படும் சேதம் (damage) மோட்டார் (இயக்கும் சக்தி) ஒருங்கிணைப்பைப் (motor coordination) பாதிக்கும். என்பதை செயல்விளக்கம் செய்தார்.

1786 உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்றும் இது  மனது பற்றியது என்றும் கூறியவர் இம்மானுவேல் கான்ட் Immanuel Kant (1724-1804) என்ற ஜெர்மானிய தத்துவ மேதை ஆவார்.

1791 லூகி கால்வானி (1737 – 1798 A.D.) என்னும் இத்தாலிய விஞ்ஞானி போலக்னா பல்கலைக்கழகத்தில் தவளையைப்  பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டார். தவளையின் கால்களை கூறிய கத்தியால் வெட்டியபோது விலங்குகளின் நரம்புகளிலும் தசைகளிலும் மின்சார தூண்டல்கள் இருக்கிறது என்று கண்டார்.   

1808 பிரான்ஸ் ஜோசஃப் கால்  (1758 -1828 A.D.) என்ற ஜெர்மன் நரம்பு உடற்கூறியலாளர் மற்றும் அமைப்பியலாளார் (phrenologist) குறிப்பிட்ட மூளைப் பகுதிகள் குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன என்று கண்டறிந்தார். க்ரே மேட்டர் என்னும் சாம்பல் வஸ்து ந்யூரான்களாலும் வொய்ட் மேட்டர் என்னும் வெள்ளை வஸ்து நரம்பு இழைகள் என்னும் ஆக்ஸான்ககளாலும் அமைந்துள்ளன என்றும் கண்டறிந்தார்.

1844 ராபர்ட் ரிமார்க் என்பவர் ஆறடுக்கு கார்ட்டெக்ஸ் (6 layered cortex) பற்றி விளக்கம் கொடுத்தார்

1853 வில்லியம் பெஞ்சமின் கார்பெண்டர் (William Benjamin Carpenter) என்பவர் தலாமஸ் (thalamus) என்ற உணர்ச்சி மண்டல முடிச்சு (sensory ganglion) நனவு நிலையின் அமைவிடம் (seat of consciousness) என்று விளக்கினார்.

1861 பால் ப்ரோகா (Paul Broca) (1824 – 1880) என்ற பிரெஞ்சு மருத்துவர் மனிதனின்முன் மூளையின் இடது பக்க மடல் (left frontal lobe) மொழி மேம்பாட்டில் ( language development) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று கண்டறிந்தார்.

1874 கார்ல் வெர்நிக்கி (Carl Wernicke) (1848 – 1905)) என்ற ஜெர்மானிய மருத்துவர் மனிதனின்முன் மூளையில் (frontal lobe) குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் சேதம் (damage) மொழியினைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் பேசும் திறன்களைப் பாதிக்கிறது என்று விவரித்தார்.

1879 வில்ஹெம் ஊண்ட் (Wilhelm Wundt) (1832-1920) என்ற ஜெர்மானிய உளவியல் அறிஞர் தத்துவம் (philosophy), உடற்கூறியலிலிருந்து (biology) உளவியலை (psychology) தனியே பிரித்து அதன் கோட்பாடுகளை (theories) சிறப்பாக நிறுவினார். கட்டமைப்பியல் (Structuralism or the analysis of the basic elements that constitute the mind) குறித்த இவருடைய முதல் கோட்பாடு சிறப்புடையது. நடத்தையியலில் (behaviorism)) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவைதான் இன்றளவும் உளவியல் மருத்துவ சிகிச்சையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் முதல் உளவியல் பரிசோதனைக் கூடத்தை (first formal laboratory of Psychology) நிறுவியவரும் இவரே. இவர் சோதனை உளவியலின் தந்தை ("father of experimental psychology") என்று போற்றப்படுகிறார். 

1891 பேராசிரியர் வில்ஹெம் ஃவான் வால்டேயர் ஹார்ட்ஸ் (1836 – 1921 A.D.) என்னும் உடற்கூறியல் மற்றும் திசுவியலாளர் குரோமோசோம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.  ந்யூரான் என்ற வார்த்தையும் முதன்முதலில் இவரால் பயன்படுத்தப்பட்டது.

1896 - 1900 உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே (உள்மனம்) (unconscious mind) எனக் கூறியவர் - சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud - 1856 – 1939) என்ற ஆஸ்திரிய உளநோய் மருத்துவர்.  சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். உளப்பகுப்புக் கொள்கை என்பது நனவற்ற மனதில் ஒரு மனிதனால் அறிய இயலாத பல மனவெழுச்சிகளும், எண்ணங்களும்,  சிக்கல்களும், நோக்கங்களுமே உள்ளன. இந்த உணர்வுகள், முன்னால் நனவு மனநிலையிலிருந்து பின்பு நனவிலி மனதுக்குள் நசுக்கப்பட்டவையாகும். நனவிலி மனத்துள்ளே காணப்படும் ஊக்கிகளை சிக்மண்ட் ப்ராய்ட்  பாலுணர்ச்சியுடன்  தொடர்புபடுத்தியுள்ளார்.

1897 இவான் பெட்ரோவிக் பாவ்லவ் - - Ivan Petrovich Pavlov (1849 - 1936) என்ற ருஷ்ய உளவியல் அறிஞர் 'சிறப்பு ஒருமைப்படுத்துதல்' (classical conditioning), 'ஊக்கப்படுத்துதல்' (transmarginal inhibition). 'நடத்தை மாறுபாடுகளை சரி செய்தல்' (behavior modification) போன்ற கொள்கைகளை வகுத்தமைக்காகப் போற்றப்படுகிறார்.  1904 ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசினை இவர் பெற்றார்.

1897 சார்லஸ் ஷெரிங்க்டன் (1857 – 1952) என்னும் ஆங்கிலேய மருத்துவர் 'ந்யூரானின் செயல்பாடுகளைக்' கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றார். ந்யூரான் மற்றும் சிநாப்ஸ் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தினார்.

1906 அலாய்ஸ் அல்ஸீமியர் (1864 – 1915) என்னும் ஜெர்மானிய உளவியல் மற்றும் நரம்பு நோயியல் மருத்துவர்  டிமென்ஷியா என்னும் முதுமை மறதி நோயின் நோய்குறியாய்வு நிலைகளைக் (pathological conditions) கண்டறிந்தார். இந்த நோய் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

1910 முழுமைக்காட்சிக் கோட்பாடு ('whole form' approach) அல்லது கெஸ்டால்ட்  கொள்கை. கேஸ்டால்ட் என்பது  ஒரு ஜெர்மன் சொல் (Berlin School of experimental psychology) உளவியல் அறிஞர் பெயர் அல்ல. மனித நடத்தையின் உண்மை இயல்புகளை அறிய வேண்டுமாயின் , அதனைச் சிறு சிறு  கூறுகளாகப் பகுத்து ஆராயாமல், அந்த நடத்தையை  முழுமையாக உற்று நோக்கி ஆய்வு செய்யும் முறையே  முழுமைக்காட்சிக் கோட்பாடு ஆகும்.

1910 மாக்ஸ் வெர்தீமியர் (Max Wertheimer) (1880 - 1943) செக்கொலோவாக்கிய உளவியலறிஞர். பிராங்க்பர்ட்டில் வுல்ப்காங் கோலார் (Wolfgang Kohler) மற்றும் குர்ட் கோப்க்கா (Kurt Koffka) ஆகியோருடன் இணைந்து கெஸ்டால்ட் என்ற கொள்கையை நிறுவினார்.

1913 உளவியல் என்பது மன அறிவியல் (Science of Mind) அல்ல என்றும் இது "நனவு நிலை" (consciousness) பற்றியது என்றும்  வலியுறுத்தியவர் அமெரிக்க உளவியல் ஞானியும் நடத்தையியல் துறையின்  (psychological school of behaviorism)  பிதாமகருமான ஜான் பி. வாட்சன்  (John  Broadus. Watson)      (1878 – 1958) ஆவார். "உளவியல்: ஒரு நடத்தையியலாளரின் பார்வை," ("Psychology as the Behaviorist Views It"- sometimes called "The Behaviorist Manifesto") என்ற கட்டுரையை 1913இல் வெளியிட்டார். மனிதனது வெளிப்படையான, புறத்திலிருந்து பிறரால் பார்த்து ஆராயக்கூடிய நடத்தைக் கோலங்களே நடத்தைக் கொள்கையின் அடிப்படை. மனித நடத்தையின் அடிப்படையாய் அமைவன மறிவினை போன்ற இயற்கையான தூண்டல் - துலங்கல் தொடர்புகள் தான். நாளடைவில் இத்தொடர்புகள்  கற்றல்   காரணமாக பல்வேறு சிக்கலான மாறுதல்களையடைந்து முதிர்ச்சி பெற்ற மனிதனிடம் காணப்படும் பலதரப்பட்ட நடத்தைக் கோலங்களாகப்  பரிணமிக்கின்றன. 'மனம்,' 'உள்ளம்,' 'நனவு நிலை' போன்ற பரிசோதனைக்கு உட்படுத்த இயலாத உளவியல் கொள்கைகளில் நடத்தைக் கொள்கையினருக்கு நம்பிக்கையில்லை.

1913 கார்ல் குஸ்டாவ் யுங் (1875 - 1961) என்ற சுவிஸ் உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவர்.பகுப்பாய்வு உளவியலை (analytic psychology) நிறுவினார். இவர் அயல்வய நோக்கினர் (extravert) மற்றும் அகமுக நோக்கினர் (introvert) போன்ற ஆளுமைத் தன்மைகளையும், மூலப்பிரதி (archetypes), கூட்டு மயக்கம் (collective unconsciousness) போன்ற கொள்கைகளையும்  முன்மொழிந்தது மட்டுமின்றி பேணிக் காக்கவும் செய்தார்.   

1932 உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - வில்லியம் மக்டூகல் (William McDougall) (1871 – 1938).  மனிதனின் செயல்கள் அனைத்தும் ஒரு இலக்கினை நோக்கிச் செயல்படுகிறது என்று கூறும் கொள்கை - ஹார்மிக் உளவியல் கொள்கை. (Hormic psychology). 

1932 ஜீன் பியாஜெட்  (Jean Piaget 1896-1980) என்ற ஸ்விஸ் நாட்டு உளவியல் நிபுணர் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியானது பல நிலைகளில் நிகழ்கிறது என்று கருதினார். படிப்படியான இந்த வளர்ச்சி நிலைகளையும் அதற்கேயுரித்தான நடத்தை மாற்றங்களையும் குறிப்பிட்ட   நான்கு  நிலைகளாக்கி தந்திருக்கிறார்:
 
1. புலன் இயக்க நிலை (Sensory motor stage) (பிறப்பு முதல் 24 மாதம் வரை)
2. செயலுக்கு முற்பட்டநிலை (Pre-operational stage) (2 வருடம் முதல் 7 வருடம் வரை)
3. புலனீடான செயல் நிலை (Concrete operational stage) (7 வருடம் முதல் 12 வருடம் வரை)
4. முறையான செயல் நிலை (Formal operational stage) (12 வருடம் முதல் 18 வருடம் வரை)

பியாஜெட்டின் இந்தப் பாகுபாடு குழந்தையின் அறிதிறன் வளர்ச்சி மற்றும் புறச்சூழல் ஆகியவற்றை மட்டும்தான் தீவிரமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

1947 மார்க் ரோஸன்வ்ச் (Mark R. Rosenzweig) (1922 – 2009) என்ற பெர்க்லி நகரைச் சேர்ந்த விஞ்ஞானி ஏணிகள், சக்கரங்கள் போன்ற பொம்மைகளை எலிகளின் சுற்றுப்புறத்தில் வைத்து அறுபதுகளில் ஆராய்ந்த போது  இவற்றின் மூளையில் ஏற்பட்ட பற்பல மாற்றங்களைக் கண்டறிந்தார்.   நல்ல சுற்றுப்புறத்தில் வாழும் எலிகள் நல்ல மூளை வளர்ச்சி அடைந்ததை சாதாரண சுற்றுப்புறத்தில் வளர்ந்த எலிகளுடன் ஒப்பிட்டு நிறுவினார்.
 
1948 பி.எஃப்.ஸ்கின்னர் என்கிற அமெரிக்க நடத்தையியல் உளவியல் வல்லுநர் 1948ஆம் ஆண்டு நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க ஆய்வின் மூலம் புறாக்களுக்கு மூடப்பழக்கங்கள் இருப்பதாகக் காட்டினார்.
 
1949 டொனால்ட் ஹெப் (1904 – 1985) என்ற கனடாவின் உளவியலாளர் உள்ளம் (mind) மற்றும் மூளையைத் (brain) தொடர்புபடுத்தி கல்வி முறைமைகளை (educational methods) ஆராய்ந்தார். ஹெப்பியன் கற்றல் விதிகள் (Hebbian synapse), ஹெப்பியன் சினாப்ஸ் போன்றவை இவர் பெயரால் பிரபலம் அடைந்தன.

1950 எரிக் எரிக்சன் (Erik Erikson) (1902-1994) என்ற ஜெர்மனி உளவியல் அறிஞர் (developmental psychologist) உளவியல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகள் (theory on psycho-social development of human beings) குறித்த ஆய்வினை மேற்கொண்டார். இனம் காணலில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வினை மேற்கொண்டார்.

1954 ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) (1908 – 1970) என்ற அமெரிக்க உளவியலாளர் தேவை படியமைப்பு கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்னும் ஐந்து படிகள் கொண்ட உளவியல் சார் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார்.  தனது கொள்கையை ஒரு பிரமிட் படமாக மாஸ்லோ வரைந்தார்.

1957 ப்ரெண்டா மில்னர் கனடாவின் நரம்பியல் உளவியலாளர். இவருடைய ஹெச்.எம் என்ற நோயாளி ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின் குறுகிய கால நினைவாற்றலை நீண்ட கால நினைவாற்றலாக மாற்றுவதற்குச் சிரமப்பட்டாராம். இவர் இது பற்றி மேற்கொண்ட ஆய்வில் மனித மூளை பல நினைவாக அமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும் இவை மோட்டார் திறன் மற்றும் மொழி போன்ற பலதரப்பட்ட செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றன என்பதை செயல்விளக்கம் மூலம் நிறுவினார்.

1970s பாசிட்றான் எமிசன் டோமோக்ராஃபி (Positron Emision Tomography (PET) மூளையின் செயல்பாடுகளைப் படம்வரையும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

1983 ஹோவர்டு கார்ட்னர்  என்னும் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மேம்பாட்டு உளவிலாளர் மற்றும் கல்வியாளர் தான் 1983ல் எழுதிய, 'பிரேம்ஸ் ஆப் மைண்ட்: தி தியரி ஆப் மல்டிபிள் இன்டெலிஜென்சஸ்' என்ற புத்தகத்தில், மனிதனின் அறிவு ஏழு வகையானது என்ற கொள்கையை  முன்வைத்தார். பின்னர், அவரே அதை மேலும் மேலும் பிரித்து ஆராய்ந்து இறுதியாக வந்த, 'பிரேம்ஸ் ஆப் மைண்ட்' பதிப்பில், ஒன்பது வகை அறிவுகள் இருப்பதாக வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.  'இந்த ஒன்பது வகை அறிவுகள், திறன்கள், எல்லா மனிதர்களுக்குள்ளும் உண்டு. சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எனவே ஒருவருக்கு இன்னது தான் வரும்; இன்னது வராது என்று கட்டம் கட்டுவதற்காக, யாரும் தன் வரையறையை பயன்படுத்தக் கூடாது' என்பது தான் வைத்த வேண்டுகோள்.

1986 ஆர்.பி என்னும் நோயாளி மூலம் மனித நினைவகத்துக்கு (human memory) ஹிப்போகாம்பாஸின் (Hippocampus) முக்கியத்துவம் நிறுவப்பட்டது.

1990 செகி ஒகாவா மற்றும் சகாக்கள் மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங் (காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல்) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

Reference:

  1. Why Mind, Brain, and Education Science is the "New" Brain-Based Education. Tracey Tokuhama-Espinosa. In John Hopkins School of Education. 

Saturday, July 11, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 4




இது தான் என் படம். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொளகொளன்னு இருக்குல்லையா?  இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?  முதலில் முன் மூளை, நடு மூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோமா?  

front brain mid brain க்கான பட முடிவு


உங்கள் கபாலத்தில் நெற்றி எலும்புகளுக்குள் ஸெரிப்ரம் என்னும் பெருமூளை பத்திரமாக உள்ளது. இதனை முன் மூளை என்று வைத்துக்கொள்வோம்.  பெரு மூளையில் (Cerebrum) மடிப்பு மடிப்பாக ஆறு அடுக்குகள் உள்ளது.  ஸெரிப்ரல் கார்டக்ஸ் என்பது சாம்பல் நிற வெளிப்புற அடுக்கு. ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்பது ஸெரிப்ரத்தின்   கண்ணாடி பிம்பம் போன்ற இரண்டு அரைக்கோளங்கள்உங்கள் முன் மூளை பகுதியில் ஸெரிப்ரம் தவிர தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் நரம்பு முடிவுகள் என்று எல்லாம் இரட்டை இரட்டையாக இருக்கின்றன. நடு மூளை என்பது முதுகுத் தண்டுவடத்திலிருந்து வரும் மூளைத் தண்டின் மேற்பகுதி. நடுமூளைக்குக் கீழ்ப்பகுதியில் பின் மூளை அமைந்துள்ளது. லிம்பிக் சிஸ்டம் பல முக்கிய மூளை பாகங்களின் தொகுதி. பின் மூளையில் சிறுமூளை என்னும் ஸெரிபெல்லம் (Cerebellum), முகுளம் என்னும் மெடுலா, ஆப்ளாங்கேட்டா (Medulla Oblongata) எல்லாம் இருக்கிறது.

ஸெரிப்ரம் (Cerebrum) பெருமூளை
 

உங்களுடைய மண்டை ஓட்டுப் பெட்டியின் மேற்புறத்தையும், பின்புறத்தையும் ஒருங்கே அடைத்துக்கொண்டு அமைந்துள்ள ஸெரிபரல் கார்டெக்ஸ் என்னும் இப்பகுதியே என்னுடைய அங்கத்தில் (மூளையின்) மிகப் பெரிய பகுதி எனலாம். எனது மொத்த எடையில் என்பது சதவிகிதம் பெருமூளையில்தான் இருக்கிறது. பெருந்திரளான இப்பகுதி கொளகொளவென்று ஜெல்லி போன்று இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா! 

ஸெரிபரல் கார்டெக்ஸ் என்னும் பெரு மூளை ஆறு அடுக்குகளுடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள நரம்பு ஸெல்களை 10,000 மைல்கள் நீளம் வரைகூட நீட்டலாமாம்.   பெரு மூளையின் வெளிப்பகுதி சாம்பல் நிறம் கொண்டதாகவும், மடிப்புகள் மிகுந்தும், ஆழமான மேடு பள்ளங்களுடன் தோற்றமளிக்கிறது. ஆழமான பள்ளங்கள் பிளவுகள் (fissures) என்றும் அழமற்ற பகுதிகள் சல்கிகள் (sulci - singular sulcus) என்றும் பெயர்.  மேடான பகுதிக்கு கைரி (gyri - singular gyrus)  என்று பெயர். ஸெரிபரல் கார்டெக்ஸை கிரே மேட்டர் (சாம்பல் நிற வஸ்து) என்றும் குறிப்பிடுகிறார்கள். கட்டளைகள் உருவாகும் இடம் இது.




முன் புறமிருந்து பின் பகுதிக்குச் ஒரு பெரிய சல்கஸ்,  ஸெரிப்ரல் கார்டெக்ஸை (Cerebral cortex) இரண்டு அரைக்கோளங்களாகப்  பிரிக்கின்றன. கண்ணாடி பிம்பம் போன்று தோன்றும் இந்த இரண்டு அரைக்கோளங்களுக்கு  பெருமூளை அரைக்கோளங்கள் (Cerebral Hemispheres) (ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர்) என்று பெயர்.  பெருமூளை அரைக்கோளங்கள் வலது அரைக்கோளம் (Right Hemisphere) இடது அரைக்கோளம் (Left Hemisphere) என்று பிரிக்கப்பட்டு அளவில் மட்டுமல்லாது என்னுடைய (மூளையின்) செயல்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எண்ணம், சிந்தனை, பேச்சு, தசைகளை இயக்கும் திறன் எல்லாம் ஸெரிபரம் என்னும் பெருமூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதிதான் உங்கள் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். 



வலது அரைக்கோளத்திலிருந்து இடது அரைக்கோளத்திற்கும், இடது அரைக்கோளத்திலிருந்து வலது அரைக்கோளத்திற்கும் சில மெல்லிய நரம்புகள் கடந்து செல்லும். காரணம் சற்று புதிரானதுதான் என்கிறார்கள்.

கார்பஸ் கலோசம் (corpus callosum) (இலத்தீனில் பெரிய பொருள் (large body) என்று அர்த்தம்) என்பது 200 மில்லியன் அக்சான்ஸ் (axons) என்னும் நரம்பு நார்களாலான தடிமனான கயிறு.  இக்கயிறு பெருமூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இணைக்கிறது.  இந்த 10 செ .மீ. 'C' வடிவ நரம்பு நார் (nerve fibers) கயிறு அறைக்கோளங்களிலிருந்து வெளிப்படும் மின் அலைகளைக் (electric signals) கடத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொள்கின்றன. வொய்ட் மேட்டர் என்னும் வெள்ளை வஸ்து மிகுந்து காணப்படும் பகுதி கார்பஸ் கலோசம் ஆகும். 

மரப்பட்டையைப் போன்று வலுவான அரைக்கோளங்களின் மேற்பகுதியை லாமினேடெட் கார்டெக்ஸ் என்று அழைக்கிறார்கள். இதனுடைய தடிமன் ஒரு அங்குலத்தில் பதில் ஒரு பகுதி மட்டும்தான்.  இப்பகுதியில் மட்டும் 800 கோடி நரம்புச் ஸெல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. மடிப்புகளை விரித்தால் இரண்டு மீட்டர் பரப்பளவுள்ள லாமினேடெட் கார்டெக்ஸை ஒரு பெரிய மேசை விரிப்புடன் ஒப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு  ஸெரிப்ரல் ஹெமிஸ்பியரும் (அரைக் கோளமும்) நான்கு மடல்களாக உடற்கூறு வல்லுநர்களால் பிரித்தறியப்படுகின்றன. இம்மடல்கள் முறையே 1. முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe) என்று இப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு பெயரிடப்பட்டுள்ளன. உடற்கூரியலாளர்கள் பெருமூளையில் மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர்.




முன் மடல் (frontal lobe)

முன் மடல் (frontal lobe) முன் மூளையில் உள்ளது.  நெற்றிக்குப் பின்னல் உள்ள முன் மடல் பகுதிக்கு  pre-frontal கார்டெக்ஸ்  என்று பெயர். நிர்வாக கட்டுப்பாட்டு மையம் (Executive control center) என்றழைக்கப்படும் இப்பகுதியில் பகுத்தறிதல் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது; இங்கே  சிந்தனை (thought) மற்றும் திட்டமிடல் (planning) எல்லாம் நடக்கின்றன. மேம்பட்ட சிந்தனை (advanced thinking), வழிநடத்தும் திறன் (leadership skill) மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் (problem solving skill) போன்றவற்றைக் கண்காணிக்கவும், மிகுதியான மனவெழுச்சிகளை (emotion) கட்டுப்படுத்தவும் இப்பகுதியால் முடியும்.  இப்பகுதியில் தான் உங்கள் சுய-விருப்பப்-பகுதி (self-will-area) என்னும் ஆளுமை (personality) உள்ளது. இப்பகுதி மெதுவாகவே முதிர்ச்சி (mature) அடைகிறது. 

பக்க மடல் (temporal lobe)

காதுகளுக்கு மேல் அமைந்துள்ள பக்க மடல் (temporal lobe) பகுதியில் சப்தம் (sound), இசை (music), முகமறிதல் (face recognition) மற்றும் பொருளறிதல் (object recognition),   நீண்டகால நினைவுத் திறன்கள் (long term memory), எல்லாம் கண்காணிக்கப்படுகின்றன.   பேச்சு மையம்கூட (speech center)  இங்கே இடப்பகுதியில்தான் அமைந்துள்ளது. 

பிடரி மடல் (occipital lobe)

ஒரு ஜோடி பிடரி மடல் (occipital lobe) பின் பகுதியில் அமைந்து பார்வை செயலாக்கங்களைக் (visual processing) கண்காணிக்கின்றன.   

சுவர் மடல் (parietal lobe)

சுவர் மடல் (parietal lobe) பகுதியில் இடம் சார்ந்த நோக்குநிலை (spatial orientation), கணக்கீடு (calculation), சில வகை அடையாளம் காணல் (certain types of recognition) எல்லாம் கண்காணிக்கப்படுகின்றன (monitored).   

உங்களுடைய  ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியகவோ தண்டுவடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

செரிபெல்லம் (Cerebellum) - Wikipedia

செரிபெல்லம் (Cerebellum)

சிறு மூளை. என்னும் ஸெரிபெல்லம் (Cerebellum) என்னுடைய மற்றொரு பாகமாகும். இலத்தீன் மொழியில்  ஸெரிபெல்லம் என்றால் சிறு மூளை (liitle brain) என்று அர்த்தமாம். இரட்டை அரைக்கோளங்களுடன் அமைந்த ஸெரிபெல்லம், மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் ஸெரிப்ரத்துக்குப் பின்னால்  சற்று கீழே, மூளைத் தண்டின் (brain stem) மேல்பகுதியில் அமைந்துள்ள சிறுமூளையை நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் எடை உங்களுடைய மொத்த மூளையின் எடையில்  வெறும் பதினோரு சதவிகிதம் (11%) மட்டுமே. எனினும் உங்கள் மொத்த மூளையில்  அடங்கியுள்ள ந்யூரானில் ஐம்பது சதவிகிதம் (50%) சிறு மூளையிலேயே அடங்கியுள்ளது. சிறு மூளையின் மேற்பரப்பில், கிடைவாக்கில் வரிவரியாக  பல மேடுபள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த மேடுபள்ளங்கள் மூளையின் மற்ற பகுதிகளிலிருந்து சிறுமூளையை தோற்றத்தில் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

ஸெரிபெல்லம் தசை இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த உறுப்பு உங்கள் உடலின் சமநிலை (balance), இருக்கும் நிலை (posture) குறித்து உங்கள் தசைகளில் தேவையான மாற்றங்களைச் சீரமைக்க (adjustments) உதவுகிறது. உங்கள் இயக்க தசைகளின் அசைவுகளை ஒத்திசைத்து (muscle groups acting together) ஒருங்கிணைப்பதால்தான் (coordination) உங்களால் படுக்கவோ (lay down), உட்காரவோ (sit), நடக்கவோ (walk), ஓடவோ (run) முடிகிறது. யோகாசனம் (yogasana) போன்ற ஆசனங்களைத் திறம்படச் செய்வதற்கு உங்களுடைய உடலின் அசையும் தசைகள் சிறு மூளையால் மட்டுமே இயக்கப்படுகின்றது.  கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க தங்கள் உடலை வாகாக வளைத்து, கால்களை மடக்கி, கைகள் மற்றும்  கண்களையெல்லாம் ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே சிக்சர் ஷாட் அடிப்பது சாத்தியமாகிறது. பட்டர் ஃப்ளை ஸ்டைல் நீச்சல் அடிப்பது, ஹை ஜம்ப் தாண்டுவது  போன்ற விளையாட்டுகளுக்கான மோட்டார் லேர்னிங் என்னும் பயிற்சி மூலமாகவே விளையாட்டு வீரர்கள் தசை இயக்கங்களை ஒருங்கிணைக்கிரார்கள். இது போல ஒரு நடனமாடும் பெண் தகுந்த பயிற்சிக்குப்பின் உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது நிகழ்த்தும் 'அடவையும்' 'முக பாவனை'   மூலம் நவரசங்களையும் அபிநயம் செய்கிறார்.  டைப் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற தனியியங்கு இயக்கங்களை (automated movements) ஸெரிபெல்லம் தன் நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்கிறது. ஸெரிபெல்லம் பாதிப்படைந்த நபருடைய இயக்கங்கள் மந்தமடைவதுடன் சுருங்கிவிடுவதுமுண்டு. இவர்களால் பந்தைக் கேட்ச் பிடிக்கவோ, பேனா பிடித்து எழுதவோ முடியாது.  

இயக்க சக்தி (மோட்டார்) பற்றிய கட்டளைகள் (commands) சிறு  மூளையிலிருந்து தொடங்கவில்லை (initiated) என்றாலும் இக்கட்டளைகள் சிறு மூளையில் தகவமைப்புக்கேற்ப (adaptive) துல்லியமாய்த் (accurate) திருத்தி அமைக்கப்படுகின்றன (modified).

ஸெரிபெல்லம் அறியும் ஆற்றல் செயலாக்கங்களுக்கு (Cognitive processing) துணைபுரியும் அமைப்பு (support structure) என்பதை சமீபகாலத்தில் ஆய்வாளர்கள் தெளிவாக உணர்ந்துள்ளர்கள். உங்களுடைய மொழித் திறன் (language skill) மேம்படவும் உங்கள் மோட்டார் கண்ட்ரோல் உதவுகிறது. உங்கள் வாய் (mouth), நாக்கு (tongue), தொண்டை (nasal), உதடு (lips), பற்கள் (teeth) போன்ற உறுப்புகளை (organs) முறையாக ஒத்திசைத்து (muscle groups acting together) ஒருங்கிணைப்பதன் (coordination) மூலம் உங்களுடைய உச்சரிப்பு (pronunciation) திருத்தமாக அமைகிறது. 
மூளைத் தண்டு

மூளைத் தண்டு என்னுடைய முக்கிய பாகமாகும். ஊர்ந்து செல்லும் ஜந்துக்களின் மூளை (reptilian brain) என்றும் இதனைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் ஊர்வனவற்றின் மூளையைப் போலவே இப்பகுதி அமைந்துள்ளது. மூளைக்குச் செல்லும் 12 நரம்புகளில் 11 நரம்புகள் மூளைத் தண்டிலேயே முடிவடைந்து விடுகின்றன. மிகமுக்கிய செயல்பாடுகளான இதயத் துடிப்பு, சுவாசம், உகந்த உடல் வெப்பம், செரிமானம் ஆகிய எல்லாம் இப்பகுதியில்தான் கண்காணிக்கப்பட்டுக்  கட்டுப்படுத்தப்படுகின்றன. என்னை விழிப்பாக வைத்திருக்க உதவும் ரெட்டிகுலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (reticular activating system) என்னும் நுண்வலையியக்குவிப்பு மையம் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது.

லிம்பிக் சிஸ்டம்

‘லிம்பிக் சிஸ்டம்’ என்பது ஒரு மினி மூளை. பல முக்கிய மூளை பாகங்களின் தொகுதி. இந்தத் தொகுதி மூளைத்தண்டுக்கு மேலே அல்லது ஸெரிப்ரத்துக்கு சற்று கீழே அமைந்துள்ளது.  ‘தலாமஸ்’ ‘ஹைப்போ தலாமஸ்’ பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி. (Pineal Gland) , ஹிப்போகேம்பஸ் மற்றும் அமிக்டலா ஆகியவை லிம்பிக் சிஸ்டம் தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகள். உடலையும் மனதையும் இணங்க வைப்பதே இந்த உறுப்புகள்தான். உணர்வுபூர்வமான நடவடிக்கைகளைக்  கட்டுப்படுத்தும் பகுதி இது. இந்த உறுப்பு ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளுக்கு இந்த லிம்பிக் சிஸ்டம்  இயல்பாக இணங்கி செயல்படாது.

தலாமஸ்: தலாமஸ் ஒரு வடிகட்டும் மையம். என்னிடம் வரும் தகவல்கள் இங்குதான் வடிகட்டப்பட்டு பின்பு மேற்புற ஸெரிப்ரல் கார்டெக்ஸுக்கு அனுப்பப்படுகின்றன.

ஹைப்போ தலாமஸ்: உங்கள் உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்” - 24 மணி நேர விழிப்பு - உறக்க  நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதி இது. இந்த உயிரியல் கடிகாரமானது, செரிமானம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகிய உடலியக்க நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் வெப்ப நிலை அதிகரித்தால் ஹைப்போ தலாமஸ் வியர்வையைப் பெரமளவில் சுரக்கச் செய்த அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது. செக்ஸ் உணர்ச்சிகளுக்கு ஹைப்போ தலாமஸ் தான் காரணம். 
 
பிட்யூட்டரி சுரப்பி: ஹைப்போ தலாமஸுக்கு அருகில், சிறிய பட்டாணி சைஸில், பிட்யூட்டரி சுரப்பி இருக்கிறது. ஏழு 7 ஆதார சக்கரங்களில் (சுரப்பிகளில்)  சகஸ்ரார சக்கரம் பிட்யூட்டரி சுரப்பியுடன் தொடர்புடையது.  இது நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி என்றும் குறிப்பிடுகிறார்கள். அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.
இது உங்கள் உடலின் சமநிலையை பாதுகாக்க உதவுகிறது.

பினியல் சுரப்பி பினியல் சுரப்பி. (Pineal Gland) ஏழு 7 ஆதார சக்கரங்களில் (சுரப்பிகளில்)  ஆக்ஞா சக்கரம் (நெற்றி சக்கரம்) பினியல் சுரப்பியுடன் தொடர்புடையது. நெற்றிக்கண் என்னும் மூன்றாவது கண்ணை குண்டலினி தியானம் மூலம் தூண்டலாம். இவ்வாறு  தூண்டுவதன் மூலம் சுரக்கும் எண்டார்பின் என்ற ஹார்மோன் எல்லா உறுப்புகளையும் சமநிலைப்படுத்துகின்றது.

ஹிப்போகேம்பஸ்: ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதிதான் உங்கள் நினைனவகப் பெட்டி என்கிறார்கள். தாற்காலிக நினைவில் இருந்து நீண்டகால நினைவுக்குத் தகவல்களை மாற்றும் வேலையில் ஹிப்போகாம்பஸ் துடிப்பாகப் பங்கேற்கிறது. வேண்டியபோது தகவல்களை அங்கிருந்து மீட்டுத் தருவதும் இப்பகுதிதான்.

அமிக்டலா: அமிக்டலா(Amygdala) . உணர்வு பூர்வமான நினைவுகளைப் பதிய வைத்துக் கொள்வது அமிக்டலாதான்.  உங்களிடம் அன்பு, ஆத்திரம், அகங்காரம், கனிவு, கோபம், பயம், துக்கம், சோகம், வெறுப்பு போன்ற  எல்லாவிதமான உணர்வுகளும் உற்பத்தியாகும் மையம்தான் இந்த அமிக்டலா. குறிப்பாக பயத்துக்கு காரணமாக உள்ள பகுதி.

முகுளம் ( மெடுல்லா ஆப்லாங்கேட்டா) 


முகுளம் என்னும் மெடுல்லா ஆப்லாங்கேட்டாவை (medulla oblongata) மூளைத் தண்டில் (brain stem) சிறு மூளைக்கு (cerebellum) சற்று முன்னால் எளிதில் கண்டுகொள்ளலாம். கூம்பு வடிவத்தில் (cone shaped) அமைந்த இந்த உறுப்பு ந்யூரோணல் (neuronal) என்னும்  பெருந்திரளான நரம்புத் திசுக்களால் (nerve cells) உண்டாக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பே உங்களுடைய உடலில் இச்சை இன்றி செயற்பாடும் தசைகளின் இயக்கங்களைக் (autonomic (involuntary) functions) கட்டுப்படுத்தும் பகுதி: (எ.கா: இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், நுரையீரல் சுவாசம், கல்லீரல்). முதுகுத் தண்டு (spinal cord) மற்றும் தலாமஸ் (thalamus) என்னும் மூளை நரம்பு முடிச்சு போன்ற உறுப்புகளுக்கு மூளையிலிருந்து முகுளத்தின் வழியாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. சீரான மூச்சு, இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், செரிமானம், தும்மல், வழுங்குதல் ஆகிய எல்லாம் முகுளத்தின்  செயல்பாடுகளால் மட்டுமே நிகழ்கின்றன. 

நடு மூளை (மெஸ் என்செபலான்)

மெஸ் என்செபலான் என்னும் நடு மூளை உறுப்பு முன் மூளைக்கும் பின் மூளைக்கும் இடையே மூளைத் தண்டில் மேடை போன்று அமைந்துள்ளதைத்  தெளிவாகக் கண்டுகொள்ளலாம். இது டேக்டம் (tectum) மற்றும் டெக்மெண்டம் (tegmentum) என்ற இரு உறுப்புகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. டெக்டத்தில் ஒரு ஜோடி கொல்லிகுலி (colliculi) என்னும் மேடான அமைப்பு காணப்படுகின்றது. தாழ்ந்த கொல்லிகுலி (inferior colliculi) என்னும் உறுப்பு கேட்டல் செயல்பாடுகளையும் உயர்ந்த கொல்லிகுலி (superior colliculi) என்னும் உறுப்பு பார்த்தல் செயல்பாடுகளையும் நடத்துகின்றன. மூளைத் தண்டில்  உள்ள மெஸ் என்செபலான் உறுப்பின் அடியில் டெக்மெண்டம் காணப்படுகிறது. இது போல டெக்மேன்டத்தில் மூன்று உறுப்புகள் உள்ளன: 1. பீரியக்யூடக்டல் கிரே (the periaqueductal gray), 2. சப்ஸ்டான்ஷிய நைக்ரா (the substantia nigra) மற்றும் 3. சிவப்பு ந்யூக்ளியஸ் (the red nucleus). இந்த உறுப்புகள் சில இச்சை இன்றி செயற்பாடும் தசைகளின் இயக்கங்களைக் (autonomic (involuntary) functions) கட்டுப்படுத்துகிறது. சில உடலில் இயக்கும் சக்தி (மோட்டார்) செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. நம் விழிப்புணர்வு மற்றும் கவனம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது.  மெஸ் என்செபலான் பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலை தூண்டிவிடும் செயல்பாடுகளையும் வலது மற்றும் இடது செரிபரல் ஹெமிஸ்பியர்களிடையே  தகவல் பரிமாற்றம் தொடர்பான செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றது.

பேராசிரியர் டாக்டர் மகோடோ ஷிகிடா (Professor Dr. Makoto Shichida) என்னும் ஜப்பானிய பேராசிரியர் நாம் நம் குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் (the way we understand our children), குழந்தைகளின் மூளைத் திறன்கள் (brain capabilities) எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் குழந்தைகளின் கற்றல் பாணிகள் (learning styles) என்னென்ன என்ற பொருளில் ஆய்வு செய்த முடிவுகள் உலகம் தழுவிய கல்விப்புரட்சி செய்துள்ளன.  மிட் பிரைன் அல்லது இன்டர் பிரைன் என்பது உணர்வுகளின் கட்டுப்பட்டுக் கோபுரம் என்கிறார். இதனை முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் மேம்பட்ட நுண்ணறித் திறனையும் , நினைவுத் திறனையும்  நம் குழந்தைகள் பெற இயலும் என்பது இவரின் 40 வருட ஆய்வு முடிவுகள்.

உங்களுடைய மூளையில் ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000  கிலோ மீட்டர் ந்யூரான் செல்கள் இருக்கின்றனவாம்! மொத்தத்தில் நம் மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன என்கிறார்கள். நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்களுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன ஓட்டம் நடைபெறுகிறது.  இந்த நியூரான்கள் பேச்சு, பார்வை, கேள்வி மற்றும் உடலின் உணரும் தன்மை மூலம் பல செய்திகளை  கெமிக்கல் சிக்னல் சமிக்கைகளாக மூளைக்கு  கொண்டு செல்கிறது.   நம்முடைய மூளையின் சூட்சமமான நரம்பு மண்டலத்தின் (Subtle Nerve System) இயக்கத்தை நாம் நவீன மருத்துவவியல் மற்றும் பயோமெடிக்கல் கதிர்வீச்சு கம்ப்யூட்டர்  கருவிகள் உதவியுடன் மூளையின் அலை வீச்சுக்களிலிருந்து (Brain Wave Activity) அலைகளின் அதிர்வெண்ணையும் (Frequency) , கதிர்வீச்சையும் (Amplitude) கணக்கிட்டு மூளையில் எந்த எந்த இடங்களிலிருந்து என்னென்ன விதமான நடவடிக்கைகள் நிகழ்கின்றன என்று அனுதினமும் துல்லியமாக தெரிந்துகொள்கிறோம். அதனை ஆங்கிலத்தில் ‡ Nuero feed back  என்று சொல்கிறார்கள்.
 


ந்யூரான்கள்

உங்கள் உணர்வுநிலை மற்றும் சிந்தனை உருவாக்கத்திற்காக சற்றேறக்குறைய நூறு பில்லியன் ந்யூரான்கள் துல்லியமாக தொடர்ந்து வேலை செய்கின்றன.  இந்த ந்யூரான்களின் எண்ணிக்கை, அமேசான் காடுகளிலுள்ள மொத்த மரங்களுடைய எண்ணிக்கைக்குச் சமம் என்கிறார்கள்.

ஒவ்வொரு ந்யூரானிலும் உயிரணு அறை (cell body or soma), ஆக்சான் (Axon) என்னும்  வடக்கயிறு மற்றும் சிறு நரம்பு இழைகள் (dendrites) எல்லாம் அடங்கியுள்ளன. என்னால் தகவல்கள் எப்படி செலுத்தப்படுகிறது என்று தெரிந்துகொள்ள ஆசையா? ந்யூரான்கள் வியத்தகு திறனுடன் எலெக்ட்ரோகெமிக்கல் சமிக்கைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துகின்றன. ஒருமுனை ந்யூரான்கள்   (புலன்கள் சார்ந்த ந்யூரான்கள்) உடலிலிருந்து மையநரம்பு மண்டலத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்கின்றன; இருமுனை ந்யூரான்கள் (இடையேயான ந்யூரான்கள்) என் (மூளை) பாகங்களை இணைக்கும் நரம்புத் திசுசுக்களிடையே தகவல் பரிமாற்றம் செய்கின்றன; மற்றும் பல்முனை ந்யூரான்கள் (இயக்கும் சக்தி (மோட்டார்) ந்யூரான்கள்) மைய நரம்பு மண்டலத்திலிருந்து உடலின் பாகங்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்கின்றன.

க்ரே மேட்டர் நமது மைய நரம்பியல் மண்டலத்தில் ஒரு பகுதி . ந்யூரோணல் செல்களையும், ந்யூரோபில்களையும்  (சிறு நரம்பு இழைகளாலும் (டென்ட்ரைட்) மையிலீன் உறையால் மூடப்படாத நீண்ட நார் போன்ற ஆக்ஸான்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது) கிண்ணக்குழி (கிளையல்)  நரம்பு செல்களையும் தந்துகிகளையும் ஒருங்கிணைத்து உருவான பாகம். 

வொயிட் மேட்டர் நமது மைய நரம்பியல் மண்டலத்தில் ஒரு பகுதி . மையிலீன் உறையால் மூடப்பட்ட நீண்ட நார் போன்ற ஆக்ஸான்களைக் கொண்டுள்ளது.  க்ரே மேட்டர், சிந்தனை உற்பத்தியாகிற இடம். வொயிட் மேட்டர், அதை மற்ற உறுப்புகளுக்கு கடத்திச் செல்வது. அந்த க்ரே மேட்டரில் ஏற்படும் பாதிப்பே அல்சைமர் நோய்க்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதாவது, சிந்திப்பதில் ஏற்படும் சிக்கல். இதனை மூளை தேய்தல், ஞாபக மறதி நோய் என்றும் கூறலாம். இந்தக் கிரே மேட்டரையும் வொய்ட் மேட்டரையும் தான் 'மண்டையில் மசாலா' என்று சொல்கிறார்கள் போலும்.  

Reference

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம். அறிவியல் இதழ்: The secret life of the BRAIN

Monday, July 6, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 3


ஹாய்.... ஹலோ இங்கே பாருங்க...

நான் தான் உங்க மூளை பேசறேன். என்ன திகைச்சுப் போய்ட்டீங்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியும்னு நினைக்கிறீங்க இல்லையா? ஆனால்  உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது... அதுதானே உண்மை. மடிப்பு மடிப்பான வெளிப்பகுதி அடர்த்தியான சாம்பல் நிறத்திலும்  கூழான உட்பகுதி வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலும் அமைந்துள்ள என்னை (உங்கள் மூளையை) நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதற்கு வாய்ப்பேயில்லை. உம்ம்ம் நான் உங்க தலை கபாலத்துக்குள்ளே பத்திரமாக இருக்கேன்.


நீங்கள் உங்கள் தாயின் கருவில் உருவான மூன்றாவது வாரத்திலேயே உங்கள் நரம்பு மண்டல வளர்ச்சி தொடங்கிவிடுகிறது. ஆறாம் வாரம் மூளை அறைகள் மற்றும் கண்கள் வளரத் தொடங்குகிறது. ஏழாம் வாரம் பெருமூளையின் அரைக் கோளங்கள் வளர்ச்சி பெறுகின்றன. பத்தாம் வாரம் அபரிதமான மூளை வளர்ச்சி - ஒவ்வொரு நிமிடத்திற்கும் புதிதாக 2,50,000 இலட்சம் அல்லது கால் மில்லியன் ந்யூரான்கள் பெருகுகின்றன. பன்னிரெண்டாம் வாரம் என்னுடைய (மூளை) வளர்ச்சி ஓரளவு முழுமை பெறுகிறது. இப்போது குழந்தை வலியை உணர முடியும். பதினெட்டாம் வாரம் குழந்தையின் மூளை காதிலிருந்து சமிக்கைகளை  பெற / அனுப்ப முடியும். அதாவது கேட்க முடியும். பத்தொன்பதாவது வாரம் குழந்தையின் உடம்பையும் மூளையையும் இணைக்கும் நரம்புகள் தோன்றுகின்றன.  
ந்யூரான்கள் அடர்த்தியான வளர்ச்சி
 

பிறந்த குழந்தையின் எடை சுமார் 0.375 கிராம் (நாலில் ஒரு பங்கு) இருக்கலாம்.  குழந்தை தாயின் கருவறையில் இருக்கும்போதே இதன் நுண்ணறிவுக்குத் தளம் அமைக்கப்படுகிறது.   

குழந்தையின் மூளையில் 2 வயதிற்குள் மிக அதிக அளவில் ந்யூரான் செல்கள் பெருகுகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன. 18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. என்னுடைய இந்தப் பரிணாம வளர்ச்சி இன்று நேற்று நிகழவில்லை. சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நானும் என் பாகங்களும் படிப்படியாக வளர்ந்து கொண்டும் இருக்கிறோம். பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிடுவது பருமனோ அல்லது எடையோ அல்ல; செறிவான அல்லது அடர்த்தியான வளர்ச்சி.

ஹிப்போகிரேட்ஸ் என்ற கிரேக்க ஞானி மற்றும் மருத்துவர் ஓரளவுக்கு என்னுடைய இயக்கத்தை ஓரளவுக்கு சரியாகவே புரிந்து கொண்டார் எனலாம். உங்கள் மூளை மட்டுமே உங்களின் சிரிப்பு, அழுகை, ஆனந்தம்,  துக்கம், சுகம்,  வலி, வேதனை, கண்ணீர் ஆகிய எல்லாவருக்குமே உங்கள் மூளை மட்டுமே காரணம் என்ற கருத்தைத் தெரிவித்தார். நான் பல நூற்றாண்டுகளாகவே ஞானிகளையும்  விஞ்ஞானிகளையும் கவர்ந்திழுத்து வருகிறேன். பல நூற்றாண்டுகளாக நீங்கள் என்னைத் தெரிந்து கொண்டதைவிட இந்தப் பத்தாண்டுகளில் நரம்பியல் விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்து கொண்டுள்ளார்கள். 

உலக அதியசங்களை என்னோடு ஒப்பிட்டீர்கள் என்றால் அவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.  உண்மையில் நான்தான் உங்கள் லைப் பார்ட்னர்.  கருவறை முதல் கல்லறை வரை உங்களை ஒரு நொடி நேரம் கூட பிரியாமல் இருக்கிறேன். நூறு மில்லியன் நரம்புத் திசுக்களை உள்ளடக்கிய தகவல் மற்றும் கட்டளைகள் பரிமாற்றம், என்னுடைய நிகழ்நிலை (real-time) செயலாக்கங்கள் (processing) மைய நரம்பு மண்டலத்தில் (central nervous system) இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஒரு விநாடி செயலாற்றத் தவறினாலோ அல்லது இரத்த ஓட்டம் தடைப்பட்டாலோ பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டு நரம்பியல் மருத்துவர் உங்களை சோதிக்க ஆரம்பித்துவிடுவார்.

நான் உங்களுக்காக இடையறாது செய்துவரும் எண்ணற்ற பணிகளைப் போல  எந்தக் கம்ப்யூட்டராலும் செய்துவிட முடியாது. எனினும் நான் உங்கள் உடம்பின் ஒரு பாகம் என்றாலும் உங்கள் உடம்பிலிருந்து வேறுபட்டவன். நான் தான் உங்கள் ஆளுமை (Personality), தனித்தன்மை, குணநலன், உங்கள் எதிர்வினைகள் (reactions), உங்கள் மனத்தின் கொள் திறம் (mental capacity).  உங்கள் பழக்கங்கள் (habits), படைப்பாற்றல் (creativity), கனவுகள் (dreams), மனவெழுச்சிகள் (emotions), உங்கள் மொத்த உடலியல் (physiology), ஒவ்வொரு துளி அனுபவங்கள் (experience), நீங்கள் உங்கள் வாழ்வில் பெறும் தகவல்கள் (information) எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன். சுமார் 70,000 எண்ணங்கள் (thoughts) தினமும் என்னுள் முகிழ்க்கின்றன .   

நீங்கள் உங்கள் தசைகளை இயக்கி நிற்க, நடக்க முயல்வதாகவும்,  தோலால் தொடுவுணர்ச்சி, உஷ்ணம், வெயில், குளிர் போன்ற வெப்பநிலை வேறுபாடுகளை உணர்வதாகவும்,   கண்களால் மட்டுமே பார்ப்பதாகவும், காதுகளால் மட்டுமே கேட்பதாகவும், நாக்கால் மட்டுமே அறுசுவைகளை உணர்வதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இவற்றை எல்லாம் நீங்களா செய்கிறீர்கள்? இல்லவே இல்லை. இந்தச் செயல்கள் எல்லாம் என்னிடமிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளால் மட்டுமே நடக்கின்றன. 

குண்டலினி சக்தி
  • நீங்கள்  நிற்பது, நடப்பது, ஓடுவது, தில்லானா நடனமாடுவது, தனுராசனம், மச்சாசனம், மயூராசனம்  போன்ற கஷ்டமான ஆசனங்கள்  செய்வது; ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல், பட்டர் ஃப்ளை நீச்சல், பேக் ஸ்ட்ரோக் நீச்சல் அடிப்பது; கிரிக்கெட்டில் ஹூக் ஷாட் மூலம் சிக்சர் அடிப்பது போன்ற ஒருங்கிணைத்த தசை இயக்கத் திறன்கள் (motor skills) நான் (சிறுமூளை) இடும் கட்டளைகள் மோட்டார் நரம்புகள் (motor neural networks) மூலம் நிகழ்கின்றன. மோட்டார் ந்யூரான்கள் தசை நார்களைக் கட்டுப்படுத்தும்  திறன் பெறுகின்றன; 
  • தோல் (பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது) உணரும் தொடுவுணர்வுத் திறன்; சூடு, குளிர்ச்சி, சுரம் மற்றும் குளிரினால் ஏற்படும் நடுக்கம் வெப்பநிலையை நான் இடும் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தும்  திறன் பெறுகின்றீர்கள்;
  • நாக்கு  உணரும் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகள் நான் இடும் கட்டளைகள் மூலம் உணரும்  திறன் பெறுகின்றீர்கள்;
  •  கண்கள் 500 விதமாக ஒளிகளை பிரித்தறியும் சக்தி படைத்தது. கண்கள் உணரும், ஒளியுடன் கணப்பொழுதில் படம் பிடித்த பொருட்களின், கருப்பு வெள்ளை மற்றும் வண்ண முப்பரிமாணப் படிமங்களை (binocular vision)  நான் இடும் கட்டளைகள் மூலம் காட்சிப்படுத்தும் திறன் பெறுகின்றீர்கள்; 
  • காதின் செவிப்பறை மற்றும் சிற்றெலும்புகள் உணரும் ஒலி: 'எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு' என்ற தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனை என்று வைத்துக் கொள்ளலாமா?  இக்கீர்த்தனையைப் பாடும்போது கேட்டு ஸ்ரீ ராகம் என்றும் ஆதி தாளம் என்று நான் இடும் கட்டளைகள் மூலம் புரிந்துகொண்டு அடையாளம் காணும் திறன் பெறுகின்றீர்கள்;
  • முதுகில் உள்ள தண்டுவடத்தின் வழியே "இடகலை", "பிங்கலை", "சுழுமுனை" என்ற  மூன்று நாடிகளின்   வழியே பிராண வாயு இயங்குகிறது. நான் இடும் கட்டளைகள் மூலம் யோகப்பயிற்சி மேற்கொண்டு குண்டலினி சக்தியை / ப்ராண சக்தியை இந்த மூன்று நாடிகளின் வழியே கீழ் மூலாதாரம் தொடங்கி ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா (சக்கரம்), சகஸ்ரஹாரம் முடிய யோகசக்தியால் தூண்டிவிட்டு மேலெழுப்பும்போது தோன்றும் சுகமான மின் அதிர்வுகள்  மூலம் தோன்றும் கிளர்ச்சிகளை நான் இடும் கட்டளைகள் மூலம் உணரும்  திறன் பெறுகின்றீர்கள். முதுகுத் தண்டுவடத்தில் தோன்றும் மின் அதிர்வு தூண்டல்கள்  என் (மூளையின்) செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.    
நீங்கள் தூங்கும்போதுகூட நான் உங்கள் உடலியக்கத்தை போதுமான அளவு சமன் செய்து இயக்குகிறேன். இதயத்துடிப்பு, சுவாச இடைவெளி போன்றவை குறைகின்றன. 

என்னுடைய  ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. இதயத்துடிப்பு, சுவாசம், ஜீரணம் போன்ற சுயேட்சை (இச்சையில்லாமல் இயங்கும்) (autonomic nervous system (ANS) நிகழ்வுகளை இயக்க ஒரு பகுதி, கைகால்கள் போன்ற அங்க அவயங்களை  இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு வேறோரு பகுதி, கேட்பதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி, முகர்வதற்கு ஒரு தனிப்பகுதி, சுவைகளை  உணர, பேச்சினைக் கையாள என்று தனிதனி பகுதிகள். இந்தப் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டால் உங்கள் உடம்பில் குறிப்பிட்ட பகுதிகளைப்  பாதிக்கிறது.  நான் என்னுடைய கடமைகளைச் செய்யமுடியாது போனால் உங்கள் இயக்கங்கள் நின்றுபோகும்.


நீங்கள் நோய்வாய்ப்பட்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பசி, தாகம் போன்ற உங்கள் உடல் தேவைகளையும் சொல்கிறேன்; உங்களுடைய இனக்கவர்ச்சி, ரொமான்ஸ், செக்ஸ் உந்துதல் போன்ற எல்லாவற்றையும் நானே சமாளிக்கிறேன்.

புறச்சூழலிலிருந்து உங்கள் ஐம்புலன்கள், உடல் இயக்கங்கள் பற்றிய சமிக்கைகள் (signals), கட்டளைகள் (commands), சக மனிதர்களிடமிருந்து  பெரும் தகவல்கள் (information) எல்லாம் மலைக்க வைக்கும் அளவுக்கு மிகுதியானதாகும்.  நான் இவற்றை எல்லாம் எவ்வாறு சமாளிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?  முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றைப் வெறுமனே புறக்கணிக்கிறேன்.

உங்களுக்கு விபத்துக்கள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்தால் நான் உஷாரகிவிடுகிறேன். உதரணத்துக்கு நீங்கள் உங்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுகிறீர்கள் என்றால் நான் உடனே உங்களை சமநிலைக்கு (balance) வருமாறு கட்டளையிடுகிறேன்; காயம்பட்டால் எச்சரிக்கிறேன். இந்த நிகழ்ச்சி உங்கள் நினைவகத்தில் பதிவாகி எதிர்காலத்தில் பாத்ரூமில் கவனமாக நடப்பதற்குத் தேவையான எச்சரிக்கைகள் உங்களுக்கு என் மூலம் கிடைத்துக்  கொண்டேயிருக்கும்.       

ஆயிரக்கணக்கான விதங்களில் நான் உங்களுக்கு உதவி புரிந்துகொண்டே இருக்கிறேன். நான் உங்கள் உடம்பின் எடையில் வெறும் இரண்டு சதவிகிதம் மட்டும்தான் என்றாலும் எனது தேவைகள் அதிகம் என்பதால் நான்  உங்கள் உடலில் நிகழும் இரத்த ஓட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கையும், சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தையும்  பயன்படுத்துகின்றேன். இதற்குக் கைமாறாக 10 முதல் 23 வாட்ஸ்  அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன் ஒவ்வொரு நொடியும் எனக்குள் (மூளைக்குள்) சுமார் ஒரு லட்சம் அமில மாற்றங்களையும் நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறேன். என் பாகங்களிலிருந்து தொடர்ந்து பலவீனமான மின் அலைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. இதையெல்லாம்போய் உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பலவிதங்களில் நான் சரியாக தெரிந்து கொள்ள முடியாத தீவு (island) போன்றவன். நீரால் சூழப்பட்ட இத்தீவில் கரைகள் (shores) மட்டுமே சற்று தெரிகிறது.  பல்கலைக் கழகங்களிலும் (universities), ஆய்வகங்களிலும் (laboratories), சிறப்புத் திட்டங்களிலும் (projects)  விஞ்ஞானிகள் என்னுடைய பல இயக்கங்களை, செயல்முறைகளை CAT (Computer Axial Tomography or X-ray computed tomography) மற்றும் MRI (Magnetic Resonance Imaging)  / fMRI (functional Magnetic Resonance Imaging) போன்ற மேம்பட்ட நவீன நரம்பியல் மருத்துவ அளவீட்டு ஸ்கேன் கருவிகள் மூலம் நிகழ்நேர (real-time) வரைபடமாக (mapping) வரைந்து பல வியத்தகு தகவல்களை பெற்று ஆராய்ந்து வருகிறார்கள்.

என்னால் உங்கள் உடம்பில் ஏற்படும் வலியை உணர முடியும் ஆனால் என்னை பல கூறாகளாக வெட்டினாலும் எனக்கு வலிக்காது.  இதனால்தான் மூளை அறுவை சிகிச்சைகள் நோயாளி நனவு நிலையில் விழித்துக் கொண்டிருக்கும் போதே நடைபெறுகிறது. ஆய்வாளர்கள் என் பாகங்களை மின் ஆற்றலால் தூண்டிவிட்டு எதிர்வினைகளை ஆய்வு செய்கிறார்கள். என்னில் பாயும் சிறு  மின் ஆற்றல் உங்களிடமிருந்து பல கடந்தகால ஞாபகங்களை திரும்ப நினைவுகூறும் திறனைத் தூண்டிவிடுவதுண்டு: உங்கள் கிராம பள்ளி ஆசிரியரோ, வகுப்புத் தோழியோ, சாலை விபத்தோ உறவினர் மரணமோ எல்லாம் உங்களால் நினைவுகூற  முடியும்.  

ஹ்யூமன் கனேக்டோம் திட்டம் மூளை மேப்பிங்
மூளை பற்றிய நிகழ்நேர வரைபட விஞ்ஞானிகள் (real-time mapping scientist) முதன்மை செயல்பாட்டுப் பகுதிகள் (primary processing organs / regions)  என்று சிலவற்றை தோராயமாக அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள்: பார்வைத்  திறன் பின் மூளைப் பகுதிகளிலும், கேட்கும் திறன் பக்க வாட்டில் நடு மூளைப் பகுதிகளிலும், இன்ப மையம் (pleasure center) லிம்பிக் அமைப்பிலும் (limbic system) இனம் கண்டுகொள்ளப் பட்டுள்ளன. 

 'தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் உலகின் முன்னேற்ற நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஏறத்தாழ இருநூற்று ஐம்பது மில்லியன் டாலர் (மில்லியன் என்பது பத்து லட்சம், டாலர் என்பது 63 ரூபாய்) செலவில் வகுத்த இந்தத் திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

 'தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்'

உங்கள்  உடலில் ஒவ்வொரு அங்கமும் எப்படி உருவாகிறது என்பது உங்களுடைய உயிரணுவில் செய்தியாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது. குரோமோசோம் என்னும் மிக நீண்ட கூட்டணுவின் கட்டமைப்பில் அந்த ரகசியம் குறியீடாகப் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் ஓரளக்குப்  படித்து விட்டார்கள். இது ஒரு சிறு தொடக்கம் தான்.
                  
இதனால் என்ன பயன். பயன்கள் பல. உங்களுக்கு நோய்கள்  வராமல் தடுப்பது முதல் பயன்.  என்றாலும் உங்களைப் பற்றி, உங்கள் நோய் பற்றி பி.பி., சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம், உங்கள் குழந்தையின் செக்ஸ் பற்றி, உங்கள் மரணம் பற்றியெல்லாம் முன்பே தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா? தவிர நம் ஸ்பெஷலிஸ்டுகளுக்கு வருமானம் கேள்விக் குறியாகிவிடும் அல்லவா?  

என் கட்டமைப்பப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

நான் உங்கள் நரம்பு மண்டலத்தின் மையமாவேன். ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டின் தொடர்ச்சியாக நான் அமைந்துள்ளேன். ஒரு நடுத்தர காலிபிளவர் அளவில் வெறும் 1.5 கிலோகிராம் எடையுள்ள என்னை (நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை 2.2 கிலோகிராம்) விந்தை நிறைந்த அற்புதமான உறுப்பு என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள்.

நான் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய உறுதியான மண்டை ஓட்டின் 21 உறுதியான எலும்புகளும், செரிபரோ ஸ்பைனல் (முதுகுத் தண்டு) திரவம் (cerebrospinal fluid) என்னும் நீர்மமும், புற அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும் என்னைப் பாதுகாக்கின்றன; மேலும் இரத்தம் - மூளை தடை வேலி (blood-brain barrier) என்ற  அமைப்பு  உங்கள்  இரத்த மண்டத்திலிருந்தும்  அல்லது இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் எனக்குத் (மூளைக்குத்) தீங்கு நேராமல் பாதுகாக்கிறது.  மண்டையோட்டுக்குள் காணப்படும் நான்கு வெற்றிடங்கள் வென்ட்ரிகிள்கள் (Ventricles) என்று  அழைக்கப்படுகின்றன.

என்னுடைய பாகமான செரிபரல் கார்டெக்ஸ் மற்ற விலங்குகளைவிட  பரும அளவில்  வளர்ச்சியடைந்துள்ளது என்பது உண்மை.   பரிணாம வளர்ச்சியின் போது இந்த  செரிபரல் கார்டெக்ஸின் பருமஅளவு  அதிகரித்தபடியால்,  என் முன் மூளைப்பகுதியும் பரும அளவில் அதிகரித்துள்ளது. அதாவது கார்டெக்ஸ் அளவு மிகுதியானதால் மடிப்புகளும் மிகுதியாகி கபாலத்திற்குள் துல்லியமாக அடங்கியுள்ளது. இந்த கார்டெக்ஸ் பாகம் நமது திறன்களை திறமையாகக் கையாள்கிறது எ.கா: மொழித்திறன், சிக்கல் தீர்க்கும் திறன்.
என்னுடைய செல்களுக்கு ந்யூரான்கள் என்று பெயர். நான் 100 பில்லியன் ந்யூரான்களால் கட்டமைக்கப்பட்டுள்ளேன்.  இது மட்டுமல்ல மைய நரம்பு மண்டலம் பல பில்லியன் ந்யூரான்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ந்யூரான்களின் சர்க்யூட் அமைப்பு சிக்கலானது. ந்யூரான்கள் வெறும் செல்கள் அல்ல. மின்சார சமிக்கைகளை கடத்த உதவும் செல்களே இந்த ந்யூரான்கள்.  ஒவ்வொரு ந்யூரானிலும் செல் அறை (Cell body),  ஆக்ஸான் Axon மற்றும் முடி இழைகள் போன்ற டென்ட்ரைட் Dendrites எனும் மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன.

என்னுடைய இயக்கங்கள் யாவும் 'மின் வேதியியல்' (electro Chemical) அடிப்படையில் அமைந்துள்ளன. அனைத்துத் தகவல்களும் மின் சமிக்கைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது. நியூரான்களில் டென்ட்ரைட் (Dendrite) என்னும் பகுதி தகவலைப் பெறும் உள்ளீட்டு (Input) உறுப்பாகும்.  ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, தகவலை வெளியே கடத்தும் வெளியீட்டு (Output) உறுப்பாகும்.  மொத்த Axons ஆக்ஸான்களையும் (Axons) இணைத்தீர்கள் என்றால் அதன் நீளம் 4.9 மில்லியன் கி.மீட்டர்  இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறது. இது சுமாராக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல் பத்து மடங்கு இருக்குமாம்.  

என்னுடைய முக்கிய வேலைக
ள் மூன்று எனலாம். என் மூலம்:

1. செய்திகளை  சமிக்கைகள் வடிவில் மைய நரம்பு மண்டலத்திற்கும் உடலின் பிற புலன்கள் (sensory) சார்ந்த / இயக்கும் சக்தி (motor) சார்ந்த பகுதிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளப்படுகிறது.
2 கட்டளைகளை சமிக்கைகள் வடிவில் மைய நரம்பு மண்டலத்திற்கும் உடலின் பிற புலன்கள் (sensory) சார்ந்த / இயக்கும் சக்தி (motor) சார்ந்த பகுதிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளப்படுகிறது.
3 செய்திகளை ஒருங்கிணைத்து பாதுகாத்து வைத்து  தகவல் தொடர்பு (communication) சார்ந்த நுண்ணறிவுப் பணிகள் நடைபெற உதவுகிறது.
என்னிடத்தில் (மூளையில்) எவ்வளவு தகவல்கள் சேமித்து வைக்க முடியும் தெரியுமா? அதிகமில்லை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்பட்டு குவாட்ரிலியன் (1,000,000,000,000,000 (one thousand million million); (1015) தகவல்கள் மட்டுமே செயல்படுத்த முடியும் ... அதாவது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக என்  செல்களுக்குள் தக்க வைத்துக் கொள்கிறேன்!

உங்கள்  மூளையின் ஆற்றலில் வெறும் 2 சதவீதமே பயன்படுத்தினால் நீங்கள் சாமானிய மனிதர் தான் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றனவாம். உங்கள்  மூளையின் ஆற்றலில் வெறும் 5 சதவீதமே பயன்படுத்தினால் உங்களை சமத்து என்று ஒப்புக்கொள்கிறார்கள்.  7 சதவீத மூளை ஆற்றலை பயன்படுத்தினால் நீங்கள் ஒரு சாதாரண விஞ்ஞானி என்று கருதிக்கொள்ளலாம்.  விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளை ஆற்றலை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அது சரி உங்கள் மூளையின் முழு அளவு ஆற்றல் தான் என்ன? உங்களில் யாராவது  முழு ஆற்றலையும் பயன்படுதினால்தானே சொல்ல முடியும்!

ஆனால் நான் (மூளை) ஒன்றை உங்களிடம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.  பற்பல செயல்களை ஒரே நேரத்தில் செய்ய (multi-tasking) முயலும் போது நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறேன்; இதனால்  50%  மேல் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.

என்  வேலைகளை இடையறாது செய்து வருகிறேன். உங்கள் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் தேவை:

வழக்கம் போல பல்லவி தான்:
  •  புகை பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் (மூளைக்கு மிக அதிகமாக); மதுப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் (மூளைக்கும் கூட) கேடு. விட்டுவிடலாமே. 
  • கோபம், கவலை, விரக்தி, பதட்டம், மனசோர்வு, மன இறுக்கம் (ஸ்ட்ரெஸ்) மன அழுத்தம் (டென்ஷன்), தாழ்வு மனப்பான்மை போன்ற மனக் கோளாறுகளுக்கு இடம் தராமல் எப்பொழுதும் ஆரோக்கியமான மனநிலையை அனுசரியுங்கள். 
  • சரிவிகித உணவு அவசியம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பி1 தயமின், பி3 நியாசின்,  பி6 பைரிடாக்சின், கோலின், வைட்டமின் டி, வைட்டமின் இ, கால்சியம், அயர்ன், அயோடின், மக்னீசியம், சோடியம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் நிறைந்த சத்தான உணவு உங்களுக்கு  அவசியம் தானே.
Related Posts Plugin for WordPress, Blogger...