Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Tuesday, August 4, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 6


குழந்தையின் வளர்ச்சியை ஐந்து பருவங்களாகப் பிரிக்கலாம்:

சிசுப் பருவம் என்பது -     0-1 ஆண்டுகள்
குறுநடைப் பருவம் என்பது -     1- 3 ஆண்டுகள்
பள்ளி முன் பருவம் என்பது     3-6 ஆண்டுகள்
பள்ளிப்பருவம் என்பது -     6- 10 ஆண்டுகள்
குமாரப் பருவம் என்பது -     10-20 ஆண்டுகள்


உடல் வளர்ச்சி

 

உடல் வளர்ச்சி, குழந்தை வளர்ச்சியின் ஒர் அடிப்படைக் கூறாக உள்ளது. வளர்ச்சி என்பது குழந்தையின் உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிப்பதாகும். வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இருந்தால்தான் அது ஆரோக்கியமான குழந்தை. உங்கள் குழந்தையின் உயரமும் எடையும் சரியான விகிதத்தில்தான் இருக்கின்றனவா என்பதை எப்படி அறிந்துகொள்வது? 


குழந்தை பிறக்கும்போது 48 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை உயரமும்  மற்றும் 3.3 கிலோகிராம் எடையும் இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு  ஒரு சிசு பிறந்தபோது உள்ள 3.3 கிலோகிராம் எடையிலிருந்து பொதுவாக 5 முதல் 10 சதவிகிதம் இழக்கிறது. இரண்டு  வாரத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காட்டும்.


மூன்று மாதம் (6.0 கிலோகிராம்) முதல் ஆறு மாதம் (7.8 கிலோகிராம்) நிறைவுற்ற ஒரு சிசு பிறந்த கால எடையைப்போல இரு மடங்கு எடை வளர்ச்சி பெறவேண்டும். ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரை சிசுவிடம் விரைவான வளர்ச்சி இருக்காது. ஒரு வயதிற்கும் இரண்டு வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் குறுநடைப் பருவக் குழந்தை (10.2 - 12.3 கிலோகிராம்) வரை எடை வளர்ச்சி பெறவேண்டும். இரண்டு முதல் ஐந்து வயது வரை ஒவ்வொரு வருடத்திற்கும் முறையே (2.30 கிலோகிராம்) வரை  எடை வளர்ச்சி பெறவேண்டும். அதாவது இரண்டு வயதில் (12.3 கிலோகிராம்); மூன்று வயதில் (14.6 கிலோகிராம்); நான்கு வயதில் (16.7 கிலோகிராம்); ஐந்து வயதில் (18.7 கிலோகிராம்) வரை எடை வளர்ச்சி பெறவேண்டும்.


பொதுவாக இரண்டு வயது முதல் பத்து வயது குழந்தைகள் நிதானமான வேகத்தில் வளர்கிறார்கள். குமரப் பருவத்தில் மிக வேகமான எடை வளர்ச்சி தொடங்குகிறது. இது ஒன்பது வயது முதல் பதினைந்து வயது வரை நிகழ்கிறது.     

குழந்தையின் வளர்சியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உயரத்தை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். பிறந்தவுடன் குழந்தையின் உயரம் 50.5 செ.மீ. ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் குழந்தையின் உயரம் தோராயமாக 2.0 செ.மீ (அல்லது ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5.0 செ.மீ) அதிகரிக்கிறது.   இந்த உயரம் முதல் வருடத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். தொடர்ந்து இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும்.  இதன் பிறகு குறைவான குழந்தை வேகத்திலேயே வளர்கிறது. குழந்தையின் 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் முறையே 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் மட்டுமே உடலின் உயரம் அதிகரிக்கிறது.  பிறந்த குழந்தையின் தலை சுற்றளவு 34 செ.மீ ஆக இருக்கும்.  6 முதல் 9 மாதம் கழித்து இந்த தலை சுற்றளவைவிட மார்பின் சுற்றளவு அதிகரிக்கும்.

குழந்தை பிறந்து முதல் இரண்டு வயது வரை உண்டான  வளர்ச்சியானது அதனுடைய மூளையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஊட்டச்சத்து முக்கியமானது.

உயரம் மற்றும் எடை அட்டவணை
பல்வேறு வயதுகளில் ஆண் / பெண் குழந்தைகளின் சராசரி உயரம் மற்றும் எடை
 

 வயது
 ஆண்
 பெண்
வளர்ச்சி நிலைகள்
 எடை    உயரம்
(கி.கி)     (செ.மீ)
 எடை  உயரம்
(கி.கி)    (செ.மீ)
 பிறந்தநிலை
3.3
 50.5
3.2
49.9
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). கை, கால்களில் அசைவு இருக்கும்.  24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.
 3 மாதம்
6.0
 61.1
5.4
60.2
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). திடீரென ஒலி கேட்டால் குழந்தைகள் திரும்பிப் பார்க்கும். விளையாடுதல் சிறிது இருக்கும். அம்மாவின் முகமும், தொடு உணர்ச்சியும் புரியும்.
 6 மாதம்
 7.8
 67.8
7.2
 66.6
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). குழந்தைகள் கவிழ்ந்து படுக்க ஆரம்பிக்கும். எதையும் பிடிக்காமல் உட்கார ஆரம்பிக்கும். தான் பார்க்கும் முகங்கள் யார் என்று புரிய ஆரம்பிக்கும்.
 9 மாதம்
 9.2
72.3
  8.6
 71.1
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). எதையாவது பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கும்.
 1 வருடம்
 10.2
76.1
 9.5
 75.0
குறுநடைப் பருவம் (1 -3 வருடம்). எந்த வித உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பிக்கும். பொருட்களை கையால் எடுக்க ஆரம்பிக்கும். சிறிய வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும். குடும்ப மனிதர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.
 2 வருடம்
12.3
 85.6
11.8
84.5
குறுநடைப் பருவம் (1 -3 வருடம்). மாடிப்படி ஏறுதல், ஓடுதல், காகிதத்தில் கோடுகள் வரைதல் போன்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கும்.
 3 வருடம்
14.6
 94.9
 14.1
93.9
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). வாக்கியங்கள் பேச ஆரம்பிக்கும். சிறிய பாடல்கள் பாட ஆரம்பிக்கும். மூன்று சக்கர வண்டி ஓட்ட ஆரம்பிக்கும்.
 4 வருடம்
16.7
 102.9
 16.0
 101.6
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கூட்டாக விளையாட்டு. சுயமாக டாய்லட் செல்லும் திறன்
 5 வருடம்
18.7
109.9
 17.7
 108.4
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). படித்தல், வரைதல் போன்றவை ஆரம்பிக்கும். சிறிய, சிறிய பாடல்கள் மனப்பாடமாக சொல்ல ஆரம்பிக்கும். பள்ளி செல்ல விரும்ப ஆரம்பிக்கும்.
 6 வருடம்
20.7
116.1
 19.5
 114.6
பள்ளிப் பருவம் (6 -10 வருடம் ) வீடு மற்றும் பள்ளிகளில் நடைமுறைகளைப் பின்பற்றும் திறன்.
 7 வருடம்
22.9
121.7
21.8
 120.6
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). புரிதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் பண்பு
 8 வருடம்
25.3
127.0
 24.8
126.4
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). சாதனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று ஆராயும் பண்பு
 9 வருடம்
28.1
132.2
 28.5
 132.2
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). தகுதி ஆற்றலை ஆராயும் பண்பு
 10 வருடம்
31.4
 137.5
 32.5
 138.3
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 13 வருடம்). அபரிதமான உடல் வளர்ச்சி. இரண்டாம் நிலை பாலியல் பண்புகள்
 11 வருடம்
 32.2
140.0
 33.7
 142.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 12 வருடம்
 37.0
147.0
 38.7
 148.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 13 வருடம்
40.9
 153.0
44.0
 150.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 14 வருடம்
47.0
160.0
48.0
 155.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்). சுதந்திரம் மற்றும் தனித்துவம்
 15 வருடம்
52.6
166.0
51.5
 161.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்).  சகாக்கள் மற்றும் எதிர் பலினத்தவருடன் உறவுமுறை
 16 வருடம்
 58.0
 171.0
53.0
 162.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்).
சாதித்து ஆய்தல்
 17 வருடம்
 62.7
175.0
 54.0
163.0
பிற்கால குமாரப் பருவம் (16 - 18 வருடம்).  வயது வந்தவர்.தனித்துவமான.அடையாளம். பூரண உடல் வளர்ச்சி
 18 வருடம்
65.0
 177.0
 54.4
164.0
பிற்கால குமாரப் பருவம் (16 - 18 வருடம்).  வயது வந்தவர். சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள். பூரண உடல் வளர்ச்சி  
 
 (ஆதாரம்: ஊட்டச்சத்துத் தேவைகள் மற்றும் இந்தியர்களுக்குப்  பரிந்துரைக்கப்பட்ட உணவுத்திட்ட படித்தரம் ஐ.சி.எம்.ஆர் Source: Nutrient Requirements and Recommended Dietary Allowances for Indians, I.C.M.R. 1990.)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வளர்ச்சியின் அளவுகள் ஒவ்வொருவரின் எடை மற்றும் உயரத்துக்கும் ஓரளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். பொதுவாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சிறுவயதில் அதிகமாக இருக்கும். ஆண் குழந்தைகளின் வளர்ச்சியானது பெண் குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுது சிறுவயதில் குறைவாகவும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதிகரிக்கவும் ஆரம்பிக்கும். 

குழந்தையின் உணவுத் தேவை

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மிக முக்கியமானது. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆறு மாதம் கழித்து உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து 3 முதல் 5 வேளை வரை  சரிவிகித ஊட்டச்சத்து உணவு தேவை. சரிவிகித ஊட்டச்சத்து உணவு என்பது கலோரி, புரோட்டின், கொழுப்புச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் என்பனவாகும்.  உங்கள் குழந்தைக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு கொடுப்பதன் மூலம் முறையான வளர்ச்சி, அபிவிருத்தி, வயதுக்கேற்ற சரியான எடை எல்லாம் பெற முடியும்.  குழந்தைகள் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே சரியான உணவுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். சில நேரங்களில் உண்ண விரும்பாமல் போகலாம் அல்லது தேவையற்ற நொறுக்குத் தீனிகளை நிறைய திண்ண விரும்பலாம். உணவு அளிக்கும்போது அவர்கள்  உண்ணாமல்  போகும்போது தண்டிக்கவோ அல்லது முறையாக உண்ணுவதற்காகப் பாராட்டிப் பரிசளிக்கவோ வேண்டாம். அப்படி இதுவரை செய்திருந்தால் படிப்படியாக தவிர்த்து விடுங்கள். அவர்கள் விரும்பி உணவு உண்ணுவதற்கு மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்  அவர்கள் மகிழ்வுடனும், நிம்மதியாகவும் உணவு உண்ணத் தகுந்த சூழலை அமைத்துக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகள் துருதுருவென்று இருப்பார்கள். இவர்கள் பசியென்று சொல்லாமல் போனாலும் சரிவிகித ஊட்டச்சத்து உணவினை முறையான இடைவெளி அமைத்துக்கொண்டு கொடுக்கவேண்டும். இந்த உணவு சுமார் 150 மி.லி. அளவில் இருந்து 250 மி.லி. அளவில் இருக்கலாம். இந்தப் பழக்கம் அவர்கள்  வளரவும் விளையாடவும் தேவையான சக்தியை வழங்கும். உங்கள் சத்துணவு ஆலோசகர்கள் உங்கள் குழந்தையின் வயது மற்றும் உருவளவுக்கேற்ப (body size) உட்கொள்ளத் (intake) தேவையான கலோரி அளவினை கணக்கிட்டுச் சொல்லுவார்கள்.  உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடையின் (கி.கிராமில்) அடிப்படையிலேயே அவர்களுக்குத் தேவையான கலோரி மற்றும் ப்ரோட்டின் அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. உங்கள் குழந்தையின் எடை பவுண்டில் இருந்தால் அதை கிலோகிராமில் மாற்றுவதற்கு அந்த எடையை 2.2 என்ற எண்ணால் வகுக்கவேண்டும்.

கலோரி தேவைகள்

பிறப்பு முதல் மூன்று வயது வரை:  ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 100 கலோரி
நான்கு வயது முதல் ஆறு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 90 கலோரி   
ஏழு வயது முதல் பதினோரு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 70 கலோரி   

புரோட்டின் தேவைகள்

பிறப்பு முதல் மூன்று வயது வரை:  ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.2 கிராம் 
நான்கு வயது முதல் ஆறு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.1 கிராம்
ஏழு வயது முதல் பதினோரு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.0 கிராம்

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள்: சரிவிகித ஊட்டச்சத்து உணவு உண்ணும்போது கூடுதல் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தேவையில்லை. உங்கள் சத்துணவு ஆலோசகரிடம் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் பற்றி ஆலோசனை பெறுவது அவசியம்.

ஒரு வயதில் உங்கள் குழந்தை தானே தன் கையில் எடுத்து உண்ணுதல் நல்ல பழக்கம். சில நேரங்களில் பராக்குப் பார்த்துக்கொண்டு உணவில் கவனம் செலுத்தாமல் போகலாம். இதை சரி  செய்வது எப்படி?    உணவு அமைப்பு, நிறம், வடிவம் மற்றும் சுவை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி உணவைக் கவர்ச்சியாக மாற்ற வேண்டும்.

இரண்டு முதல் மூன்று வயதில் உங்கள் குழந்தை பலத்த விருப்பு வெறுப்புகளைக் காட்டலாம். இந்த நிலைமை வாராவாரம் மாறலாம். குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். உடல் எடை மற்றும் வளர்ச்சிக் குறைபாடு இல்லாதவரை இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பல்வேறு வகையான உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம். தானியம், பருப்பு, காய்கறிகள், பழங்கள் என்று பல்வேறு உணவு வகைகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நான்கு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகள் உணவு உண்ண மிகுந்த நேரம் எடுத்துக் கொள்வார்கள். விளையாட்டு மற்றும் பொம்மைகள் இவர்களை உணவில் கவனம் செலுத்தவிடாமல் செய்வதுண்டு. குறிப்பிட்ட உணவு வகையினை உண்ணாமலிருந்தால் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். சில வாரங்கள் கழித்து இந்த உணவு வகையினை திரும்பப் பரிமாறுங்கள். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பது நல்ல மாற்றம் தரும்.

ஏழு முதல் பதினோரு வயதுள்ள குழந்தைகள் அவர்கள் பசிக்கேற்ப உண்ணுவார்கள். இந்தப் பழக்கம் இவர்களது முறையான எடை மற்றும் சக்தி அளவினைப் பராமரிக்க உதவும். முறையான உணவுப் பழக்க வழக்கங்களைப் பாராட்டுங்கள். முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களைத் தற்போது கண்டுகொள்ளாதீர்கள்.

உணவுக் குழு தேர்வு செய்யும் முறை (Food Group Choices)


இரண்டு வயது வரை முழமையான பால் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த டெய்ரி பொருட்கள் எல்லாம் புகட்டினால் உங்கள் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்.

இரண்டு வயதிற்குப் பிறகு நிறைவான கொழுப்பினைச் சமன் செய்ய (saturated fat intake) இரண்டு சதவிகிதம் பால் மற்றும் டெய்ரிப் பொருட்களை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வைட்டமின் 'சி' நிறைந்த உணவினைத்  தரவேண்டும். கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிகாய், எலுமிச்சை, தக்காளி, பப்பாளி, முலாம்பழம், கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பழவகைகளிலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது  . இது போல வைட்டமின் 'ஏ' நிறைந்த உணவினையும் தரவேண்டும். முட்டை மஞ்சள் கரு,  கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஸ்பினாச், மற்றும் சில கீரைகள், முட்டைகோஸ், பரங்கிக்காய், முருங்கைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளிலும் மாம்பழம், கேரட், ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி போன்ற பழவகைகளிலும் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது.

 

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை மசித்த உணவையும் ஒரு வயதுக்கு மேல், கையால் பிசைந்த உணவையும் ஊட்டலாம்.  குழைய வெந்த அரிசி சாதம், பருப்பு, நன்கு வேகவைத்த காய்கறிகள், கிழங்குகள், பச்சைக்கீரைகள் மற்றும் சிறிதளவு நெய் கலந்து மசித்த / பிசைந்த   உணவு மிகவும் நல்லது. உங்கள் குழந்தை வளர்ந்து ஓடியாடி விளையாடும் வயதுக்கு வந்த பின்னால் சரிவிகித சமச்சீர் உணவு கொடுப்பது மிக மிக அவசியம். குழந்தையின் ஆதார அடிப்படை வளர்ச்சி என்பது நீங்கள் அளிக்கும் சரிவிகித உணவில் மட்டுமே  உள்ளது.  உங்கள் குழந்தைக்கு  தினசரி உணவில் என்னென்ன சத்துக்கள் தேவை?  கார்போஹைட்ரேட் - 65%, புரதம் - 25 முதல் 30%, நார்ச்சத்து 2 முதல் 3%  வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் இதர கனிமச் சத்துக்களும் சேர்த்துக்கொண்டால் அதுவே சரிவிகித வளர்ச்சியைத் தரும்.

குழந்தையின்  வளர்சிக்குப்  புரதம் இன்றியமையாதது. புரதம் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளிலும் இறைச்சியிலும் மிகுந்துள்ளது. பால் மட்டுமே தேவையான புரதத்தைத் தரவல்லதல்ல. சிறுதனியங்களான ராகி, கம்பு, திணை, சாமை, வரகு, போன்றவை நார்ச்சத்து மிகுந்த உணவாகும். சுக்குப்பொடி, ஏலக்காய் சேர்த்து சிறுதானியத்தில் செய்த பால் கஞ்சி மிகவும் நல்லது. தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணுமாறு பழக்குதல் நல்லது.


அடுத்து, உங்கள்  குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு மட்டுமே போதுமானதா?  சரிவிகித ஊட்டச்சத்து உணவு தேவைதான் என்றாலும் நல்ல சூழலிலும் மனநிலையிலும் உங்கள் குழந்தை வளர்வது மிக அவசியமானது. நல்ல சூழலும் மனநிலையும் எவ்வாறு ஏற்படுத்துவது? இதற்கு என்னென்ன தேவை? விளையாட்டு  நல்ல சூழலையும் மனநிலையும் தரவல்லது. சரிவிகித ஊட்டச்சத்துணவைக் அளித்தாலும்  ஒரு குழந்தை போதிய வளர்ச்சியடையவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? இதற்கு மரபியலும்  காரணமாக இருக்கலாம். பாசமும் மகிழ்ச்சியும் மிகுந்த உங்கள் குடும்ப  சூழலில், உங்கள் வளரும்போது அதன் வளர்ச்சிக்கு அத்யாவசியமான ஹார்மோன் சுரப்பிகள் தூண்டப்பட்டு குழந்தை நன்றாக வளரும். உங்கள் குழந்தையின் உடல் எடையை தேவைக்கேற்ப அதிகரிக்கவோ, குறைத்துக் கொள்ளவோ முடியும். உங்கள் குழந்தையின் உயரத்தை விருப்பம்போல் கூட்டவோ, குறைக்கவோ இயலாது. காரணம் உங்கள் குழந்தையின்  உயரம் பெரும்பாலும் உங்கள் குடும்ப மரபியலையொட்டியே அமைகிறது. என்றாலும், உங்கள் குழந்தையின் உயரத்தை ஓரளவு அதிகரிப்பதற்கு  சில உடற்பயிற்சிகள் உதவலாம்.

குழந்தைக்கு ஐந்து வயதுக்குள் குறிப்பிட்ட வளர்ச்சி அடையாமல் போனால், அதன் பிறகு அக்குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைக் அதிகரிப்பது என்பது மிக மிகக் கடினமாகும்.

குழந்தையின் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் வளர்ச்சியும் இன்றியமையாதது. இவற்றையும்  முறையாகக் கண்காணித்து வருவது மிகவும் அவசியமாகும். குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு வளர்ச்சியைக் அளவிட  சில விதிமுறைகள் (formulas) உள்ளன.  பெற்றோர் இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி அளவிடும் கலையை  சுகாதார நலப் பணியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

Monday, July 6, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 3


ஹாய்.... ஹலோ இங்கே பாருங்க...

நான் தான் உங்க மூளை பேசறேன். என்ன திகைச்சுப் போய்ட்டீங்களா? உங்களுக்கு என்னை நல்லாத் தெரியும்னு நினைக்கிறீங்க இல்லையா? ஆனால்  உங்களுக்கு என்னைப்பற்றிய முழுத் தகவல்களும் தெரியாது... அதுதானே உண்மை. மடிப்பு மடிப்பான வெளிப்பகுதி அடர்த்தியான சாம்பல் நிறத்திலும்  கூழான உட்பகுதி வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலும் அமைந்துள்ள என்னை (உங்கள் மூளையை) நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதற்கு வாய்ப்பேயில்லை. உம்ம்ம் நான் உங்க தலை கபாலத்துக்குள்ளே பத்திரமாக இருக்கேன்.


நீங்கள் உங்கள் தாயின் கருவில் உருவான மூன்றாவது வாரத்திலேயே உங்கள் நரம்பு மண்டல வளர்ச்சி தொடங்கிவிடுகிறது. ஆறாம் வாரம் மூளை அறைகள் மற்றும் கண்கள் வளரத் தொடங்குகிறது. ஏழாம் வாரம் பெருமூளையின் அரைக் கோளங்கள் வளர்ச்சி பெறுகின்றன. பத்தாம் வாரம் அபரிதமான மூளை வளர்ச்சி - ஒவ்வொரு நிமிடத்திற்கும் புதிதாக 2,50,000 இலட்சம் அல்லது கால் மில்லியன் ந்யூரான்கள் பெருகுகின்றன. பன்னிரெண்டாம் வாரம் என்னுடைய (மூளை) வளர்ச்சி ஓரளவு முழுமை பெறுகிறது. இப்போது குழந்தை வலியை உணர முடியும். பதினெட்டாம் வாரம் குழந்தையின் மூளை காதிலிருந்து சமிக்கைகளை  பெற / அனுப்ப முடியும். அதாவது கேட்க முடியும். பத்தொன்பதாவது வாரம் குழந்தையின் உடம்பையும் மூளையையும் இணைக்கும் நரம்புகள் தோன்றுகின்றன.  
ந்யூரான்கள் அடர்த்தியான வளர்ச்சி
 

பிறந்த குழந்தையின் எடை சுமார் 0.375 கிராம் (நாலில் ஒரு பங்கு) இருக்கலாம்.  குழந்தை தாயின் கருவறையில் இருக்கும்போதே இதன் நுண்ணறிவுக்குத் தளம் அமைக்கப்படுகிறது.   

குழந்தையின் மூளையில் 2 வயதிற்குள் மிக அதிக அளவில் ந்யூரான் செல்கள் பெருகுகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன. 18 வயதில் மனிதனின் மூளை வளர்வதை நிறுத்திக் கொள்கிறது. என்னுடைய இந்தப் பரிணாம வளர்ச்சி இன்று நேற்று நிகழவில்லை. சுமார் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நானும் என் பாகங்களும் படிப்படியாக வளர்ந்து கொண்டும் இருக்கிறோம். பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிடுவது பருமனோ அல்லது எடையோ அல்ல; செறிவான அல்லது அடர்த்தியான வளர்ச்சி.

ஹிப்போகிரேட்ஸ் என்ற கிரேக்க ஞானி மற்றும் மருத்துவர் ஓரளவுக்கு என்னுடைய இயக்கத்தை ஓரளவுக்கு சரியாகவே புரிந்து கொண்டார் எனலாம். உங்கள் மூளை மட்டுமே உங்களின் சிரிப்பு, அழுகை, ஆனந்தம்,  துக்கம், சுகம்,  வலி, வேதனை, கண்ணீர் ஆகிய எல்லாவருக்குமே உங்கள் மூளை மட்டுமே காரணம் என்ற கருத்தைத் தெரிவித்தார். நான் பல நூற்றாண்டுகளாகவே ஞானிகளையும்  விஞ்ஞானிகளையும் கவர்ந்திழுத்து வருகிறேன். பல நூற்றாண்டுகளாக நீங்கள் என்னைத் தெரிந்து கொண்டதைவிட இந்தப் பத்தாண்டுகளில் நரம்பியல் விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்து கொண்டுள்ளார்கள். 

உலக அதியசங்களை என்னோடு ஒப்பிட்டீர்கள் என்றால் அவற்றுக்கு எல்லாம் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும்.  உண்மையில் நான்தான் உங்கள் லைப் பார்ட்னர்.  கருவறை முதல் கல்லறை வரை உங்களை ஒரு நொடி நேரம் கூட பிரியாமல் இருக்கிறேன். நூறு மில்லியன் நரம்புத் திசுக்களை உள்ளடக்கிய தகவல் மற்றும் கட்டளைகள் பரிமாற்றம், என்னுடைய நிகழ்நிலை (real-time) செயலாக்கங்கள் (processing) மைய நரம்பு மண்டலத்தில் (central nervous system) இடையறாது நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஒரு விநாடி செயலாற்றத் தவறினாலோ அல்லது இரத்த ஓட்டம் தடைப்பட்டாலோ பல விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட்டு நரம்பியல் மருத்துவர் உங்களை சோதிக்க ஆரம்பித்துவிடுவார்.

நான் உங்களுக்காக இடையறாது செய்துவரும் எண்ணற்ற பணிகளைப் போல  எந்தக் கம்ப்யூட்டராலும் செய்துவிட முடியாது. எனினும் நான் உங்கள் உடம்பின் ஒரு பாகம் என்றாலும் உங்கள் உடம்பிலிருந்து வேறுபட்டவன். நான் தான் உங்கள் ஆளுமை (Personality), தனித்தன்மை, குணநலன், உங்கள் எதிர்வினைகள் (reactions), உங்கள் மனத்தின் கொள் திறம் (mental capacity).  உங்கள் பழக்கங்கள் (habits), படைப்பாற்றல் (creativity), கனவுகள் (dreams), மனவெழுச்சிகள் (emotions), உங்கள் மொத்த உடலியல் (physiology), ஒவ்வொரு துளி அனுபவங்கள் (experience), நீங்கள் உங்கள் வாழ்வில் பெறும் தகவல்கள் (information) எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன். சுமார் 70,000 எண்ணங்கள் (thoughts) தினமும் என்னுள் முகிழ்க்கின்றன .   

நீங்கள் உங்கள் தசைகளை இயக்கி நிற்க, நடக்க முயல்வதாகவும்,  தோலால் தொடுவுணர்ச்சி, உஷ்ணம், வெயில், குளிர் போன்ற வெப்பநிலை வேறுபாடுகளை உணர்வதாகவும்,   கண்களால் மட்டுமே பார்ப்பதாகவும், காதுகளால் மட்டுமே கேட்பதாகவும், நாக்கால் மட்டுமே அறுசுவைகளை உணர்வதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இவற்றை எல்லாம் நீங்களா செய்கிறீர்கள்? இல்லவே இல்லை. இந்தச் செயல்கள் எல்லாம் என்னிடமிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளால் மட்டுமே நடக்கின்றன. 

குண்டலினி சக்தி
  • நீங்கள்  நிற்பது, நடப்பது, ஓடுவது, தில்லானா நடனமாடுவது, தனுராசனம், மச்சாசனம், மயூராசனம்  போன்ற கஷ்டமான ஆசனங்கள்  செய்வது; ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல், பட்டர் ஃப்ளை நீச்சல், பேக் ஸ்ட்ரோக் நீச்சல் அடிப்பது; கிரிக்கெட்டில் ஹூக் ஷாட் மூலம் சிக்சர் அடிப்பது போன்ற ஒருங்கிணைத்த தசை இயக்கத் திறன்கள் (motor skills) நான் (சிறுமூளை) இடும் கட்டளைகள் மோட்டார் நரம்புகள் (motor neural networks) மூலம் நிகழ்கின்றன. மோட்டார் ந்யூரான்கள் தசை நார்களைக் கட்டுப்படுத்தும்  திறன் பெறுகின்றன; 
  • தோல் (பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது) உணரும் தொடுவுணர்வுத் திறன்; சூடு, குளிர்ச்சி, சுரம் மற்றும் குளிரினால் ஏற்படும் நடுக்கம் வெப்பநிலையை நான் இடும் கட்டளைகள் மூலம் கட்டுப்படுத்தும்  திறன் பெறுகின்றீர்கள்;
  • நாக்கு  உணரும் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகள் நான் இடும் கட்டளைகள் மூலம் உணரும்  திறன் பெறுகின்றீர்கள்;
  •  கண்கள் 500 விதமாக ஒளிகளை பிரித்தறியும் சக்தி படைத்தது. கண்கள் உணரும், ஒளியுடன் கணப்பொழுதில் படம் பிடித்த பொருட்களின், கருப்பு வெள்ளை மற்றும் வண்ண முப்பரிமாணப் படிமங்களை (binocular vision)  நான் இடும் கட்டளைகள் மூலம் காட்சிப்படுத்தும் திறன் பெறுகின்றீர்கள்; 
  • காதின் செவிப்பறை மற்றும் சிற்றெலும்புகள் உணரும் ஒலி: 'எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு' என்ற தியாகராஜரின் தெலுங்குக் கீர்த்தனை என்று வைத்துக் கொள்ளலாமா?  இக்கீர்த்தனையைப் பாடும்போது கேட்டு ஸ்ரீ ராகம் என்றும் ஆதி தாளம் என்று நான் இடும் கட்டளைகள் மூலம் புரிந்துகொண்டு அடையாளம் காணும் திறன் பெறுகின்றீர்கள்;
  • முதுகில் உள்ள தண்டுவடத்தின் வழியே "இடகலை", "பிங்கலை", "சுழுமுனை" என்ற  மூன்று நாடிகளின்   வழியே பிராண வாயு இயங்குகிறது. நான் இடும் கட்டளைகள் மூலம் யோகப்பயிற்சி மேற்கொண்டு குண்டலினி சக்தியை / ப்ராண சக்தியை இந்த மூன்று நாடிகளின் வழியே கீழ் மூலாதாரம் தொடங்கி ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா (சக்கரம்), சகஸ்ரஹாரம் முடிய யோகசக்தியால் தூண்டிவிட்டு மேலெழுப்பும்போது தோன்றும் சுகமான மின் அதிர்வுகள்  மூலம் தோன்றும் கிளர்ச்சிகளை நான் இடும் கட்டளைகள் மூலம் உணரும்  திறன் பெறுகின்றீர்கள். முதுகுத் தண்டுவடத்தில் தோன்றும் மின் அதிர்வு தூண்டல்கள்  என் (மூளையின்) செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.    
நீங்கள் தூங்கும்போதுகூட நான் உங்கள் உடலியக்கத்தை போதுமான அளவு சமன் செய்து இயக்குகிறேன். இதயத்துடிப்பு, சுவாச இடைவெளி போன்றவை குறைகின்றன. 

என்னுடைய  ஒவ்வொரு பாகமும் தனித் தனியே வேலை செய்கிறது. இதயத்துடிப்பு, சுவாசம், ஜீரணம் போன்ற சுயேட்சை (இச்சையில்லாமல் இயங்கும்) (autonomic nervous system (ANS) நிகழ்வுகளை இயக்க ஒரு பகுதி, கைகால்கள் போன்ற அங்க அவயங்களை  இயக்க மற்றொரு பகுதி, பார்வைக்கு வேறோரு பகுதி, கேட்பதற்கு ஒரு குறிப்பிட்ட பகுதி, முகர்வதற்கு ஒரு தனிப்பகுதி, சுவைகளை  உணர, பேச்சினைக் கையாள என்று தனிதனி பகுதிகள். இந்தப் பகுதிகளில் செயல் இழப்பு ஏற்பட்டால் உங்கள் உடம்பில் குறிப்பிட்ட பகுதிகளைப்  பாதிக்கிறது.  நான் என்னுடைய கடமைகளைச் செய்யமுடியாது போனால் உங்கள் இயக்கங்கள் நின்றுபோகும்.


நீங்கள் நோய்வாய்ப்பட்டால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பசி, தாகம் போன்ற உங்கள் உடல் தேவைகளையும் சொல்கிறேன்; உங்களுடைய இனக்கவர்ச்சி, ரொமான்ஸ், செக்ஸ் உந்துதல் போன்ற எல்லாவற்றையும் நானே சமாளிக்கிறேன்.

புறச்சூழலிலிருந்து உங்கள் ஐம்புலன்கள், உடல் இயக்கங்கள் பற்றிய சமிக்கைகள் (signals), கட்டளைகள் (commands), சக மனிதர்களிடமிருந்து  பெரும் தகவல்கள் (information) எல்லாம் மலைக்க வைக்கும் அளவுக்கு மிகுதியானதாகும்.  நான் இவற்றை எல்லாம் எவ்வாறு சமாளிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?  முக்கியமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றைப் வெறுமனே புறக்கணிக்கிறேன்.

உங்களுக்கு விபத்துக்கள் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நேர்ந்தால் நான் உஷாரகிவிடுகிறேன். உதரணத்துக்கு நீங்கள் உங்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுகிறீர்கள் என்றால் நான் உடனே உங்களை சமநிலைக்கு (balance) வருமாறு கட்டளையிடுகிறேன்; காயம்பட்டால் எச்சரிக்கிறேன். இந்த நிகழ்ச்சி உங்கள் நினைவகத்தில் பதிவாகி எதிர்காலத்தில் பாத்ரூமில் கவனமாக நடப்பதற்குத் தேவையான எச்சரிக்கைகள் உங்களுக்கு என் மூலம் கிடைத்துக்  கொண்டேயிருக்கும்.       

ஆயிரக்கணக்கான விதங்களில் நான் உங்களுக்கு உதவி புரிந்துகொண்டே இருக்கிறேன். நான் உங்கள் உடம்பின் எடையில் வெறும் இரண்டு சதவிகிதம் மட்டும்தான் என்றாலும் எனது தேவைகள் அதிகம் என்பதால் நான்  உங்கள் உடலில் நிகழும் இரத்த ஓட்டத்தில் ஐந்தில் ஒரு பங்கையும், சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தையும்  பயன்படுத்துகின்றேன். இதற்குக் கைமாறாக 10 முதல் 23 வாட்ஸ்  அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன் ஒவ்வொரு நொடியும் எனக்குள் (மூளைக்குள்) சுமார் ஒரு லட்சம் அமில மாற்றங்களையும் நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறேன். என் பாகங்களிலிருந்து தொடர்ந்து பலவீனமான மின் அலைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. இதையெல்லாம்போய் உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பலவிதங்களில் நான் சரியாக தெரிந்து கொள்ள முடியாத தீவு (island) போன்றவன். நீரால் சூழப்பட்ட இத்தீவில் கரைகள் (shores) மட்டுமே சற்று தெரிகிறது.  பல்கலைக் கழகங்களிலும் (universities), ஆய்வகங்களிலும் (laboratories), சிறப்புத் திட்டங்களிலும் (projects)  விஞ்ஞானிகள் என்னுடைய பல இயக்கங்களை, செயல்முறைகளை CAT (Computer Axial Tomography or X-ray computed tomography) மற்றும் MRI (Magnetic Resonance Imaging)  / fMRI (functional Magnetic Resonance Imaging) போன்ற மேம்பட்ட நவீன நரம்பியல் மருத்துவ அளவீட்டு ஸ்கேன் கருவிகள் மூலம் நிகழ்நேர (real-time) வரைபடமாக (mapping) வரைந்து பல வியத்தகு தகவல்களை பெற்று ஆராய்ந்து வருகிறார்கள்.

என்னால் உங்கள் உடம்பில் ஏற்படும் வலியை உணர முடியும் ஆனால் என்னை பல கூறாகளாக வெட்டினாலும் எனக்கு வலிக்காது.  இதனால்தான் மூளை அறுவை சிகிச்சைகள் நோயாளி நனவு நிலையில் விழித்துக் கொண்டிருக்கும் போதே நடைபெறுகிறது. ஆய்வாளர்கள் என் பாகங்களை மின் ஆற்றலால் தூண்டிவிட்டு எதிர்வினைகளை ஆய்வு செய்கிறார்கள். என்னில் பாயும் சிறு  மின் ஆற்றல் உங்களிடமிருந்து பல கடந்தகால ஞாபகங்களை திரும்ப நினைவுகூறும் திறனைத் தூண்டிவிடுவதுண்டு: உங்கள் கிராம பள்ளி ஆசிரியரோ, வகுப்புத் தோழியோ, சாலை விபத்தோ உறவினர் மரணமோ எல்லாம் உங்களால் நினைவுகூற  முடியும்.  

ஹ்யூமன் கனேக்டோம் திட்டம் மூளை மேப்பிங்
மூளை பற்றிய நிகழ்நேர வரைபட விஞ்ஞானிகள் (real-time mapping scientist) முதன்மை செயல்பாட்டுப் பகுதிகள் (primary processing organs / regions)  என்று சிலவற்றை தோராயமாக அடையாளம் கண்டுகொண்டுள்ளார்கள்: பார்வைத்  திறன் பின் மூளைப் பகுதிகளிலும், கேட்கும் திறன் பக்க வாட்டில் நடு மூளைப் பகுதிகளிலும், இன்ப மையம் (pleasure center) லிம்பிக் அமைப்பிலும் (limbic system) இனம் கண்டுகொள்ளப் பட்டுள்ளன. 

 'தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் உலகின் முன்னேற்ற நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஏறத்தாழ இருநூற்று ஐம்பது மில்லியன் டாலர் (மில்லியன் என்பது பத்து லட்சம், டாலர் என்பது 63 ரூபாய்) செலவில் வகுத்த இந்தத் திட்டம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

 'தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்'

உங்கள்  உடலில் ஒவ்வொரு அங்கமும் எப்படி உருவாகிறது என்பது உங்களுடைய உயிரணுவில் செய்தியாக பொறித்து வைக்கப்பட்டுள்ளது. குரோமோசோம் என்னும் மிக நீண்ட கூட்டணுவின் கட்டமைப்பில் அந்த ரகசியம் குறியீடாகப் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதை விஞ்ஞானிகள் ஓரளக்குப்  படித்து விட்டார்கள். இது ஒரு சிறு தொடக்கம் தான்.
                  
இதனால் என்ன பயன். பயன்கள் பல. உங்களுக்கு நோய்கள்  வராமல் தடுப்பது முதல் பயன்.  என்றாலும் உங்களைப் பற்றி, உங்கள் நோய் பற்றி பி.பி., சுகர், ஹார்ட் அட்டாக் எல்லாம், உங்கள் குழந்தையின் செக்ஸ் பற்றி, உங்கள் மரணம் பற்றியெல்லாம் முன்பே தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்குமா? தவிர நம் ஸ்பெஷலிஸ்டுகளுக்கு வருமானம் கேள்விக் குறியாகிவிடும் அல்லவா?  

என் கட்டமைப்பப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.

நான் உங்கள் நரம்பு மண்டலத்தின் மையமாவேன். ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டின் தொடர்ச்சியாக நான் அமைந்துள்ளேன். ஒரு நடுத்தர காலிபிளவர் அளவில் வெறும் 1.5 கிலோகிராம் எடையுள்ள என்னை (நல்ல அறிவாற்றல் மிகுந்த மேதையின் மூளை எடை 2.2 கிலோகிராம்) விந்தை நிறைந்த அற்புதமான உறுப்பு என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள்.

நான் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய உறுதியான மண்டை ஓட்டின் 21 உறுதியான எலும்புகளும், செரிபரோ ஸ்பைனல் (முதுகுத் தண்டு) திரவம் (cerebrospinal fluid) என்னும் நீர்மமும், புற அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும் என்னைப் பாதுகாக்கின்றன; மேலும் இரத்தம் - மூளை தடை வேலி (blood-brain barrier) என்ற  அமைப்பு  உங்கள்  இரத்த மண்டத்திலிருந்தும்  அல்லது இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் எனக்குத் (மூளைக்குத்) தீங்கு நேராமல் பாதுகாக்கிறது.  மண்டையோட்டுக்குள் காணப்படும் நான்கு வெற்றிடங்கள் வென்ட்ரிகிள்கள் (Ventricles) என்று  அழைக்கப்படுகின்றன.

என்னுடைய பாகமான செரிபரல் கார்டெக்ஸ் மற்ற விலங்குகளைவிட  பரும அளவில்  வளர்ச்சியடைந்துள்ளது என்பது உண்மை.   பரிணாம வளர்ச்சியின் போது இந்த  செரிபரல் கார்டெக்ஸின் பருமஅளவு  அதிகரித்தபடியால்,  என் முன் மூளைப்பகுதியும் பரும அளவில் அதிகரித்துள்ளது. அதாவது கார்டெக்ஸ் அளவு மிகுதியானதால் மடிப்புகளும் மிகுதியாகி கபாலத்திற்குள் துல்லியமாக அடங்கியுள்ளது. இந்த கார்டெக்ஸ் பாகம் நமது திறன்களை திறமையாகக் கையாள்கிறது எ.கா: மொழித்திறன், சிக்கல் தீர்க்கும் திறன்.
என்னுடைய செல்களுக்கு ந்யூரான்கள் என்று பெயர். நான் 100 பில்லியன் ந்யூரான்களால் கட்டமைக்கப்பட்டுள்ளேன்.  இது மட்டுமல்ல மைய நரம்பு மண்டலம் பல பில்லியன் ந்யூரான்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ந்யூரான்களின் சர்க்யூட் அமைப்பு சிக்கலானது. ந்யூரான்கள் வெறும் செல்கள் அல்ல. மின்சார சமிக்கைகளை கடத்த உதவும் செல்களே இந்த ந்யூரான்கள்.  ஒவ்வொரு ந்யூரானிலும் செல் அறை (Cell body),  ஆக்ஸான் Axon மற்றும் முடி இழைகள் போன்ற டென்ட்ரைட் Dendrites எனும் மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன.

என்னுடைய இயக்கங்கள் யாவும் 'மின் வேதியியல்' (electro Chemical) அடிப்படையில் அமைந்துள்ளன. அனைத்துத் தகவல்களும் மின் சமிக்கைகளாக (Electric signals) மாற்றப்பட்டு நியூரான்கள் மூலம் கடத்தப்படுகிறது. நியூரான்களில் டென்ட்ரைட் (Dendrite) என்னும் பகுதி தகவலைப் பெறும் உள்ளீட்டு (Input) உறுப்பாகும்.  ஆக்ஸான் (Axon) என்னும் வால் பகுதி, தகவலை வெளியே கடத்தும் வெளியீட்டு (Output) உறுப்பாகும்.  மொத்த Axons ஆக்ஸான்களையும் (Axons) இணைத்தீர்கள் என்றால் அதன் நீளம் 4.9 மில்லியன் கி.மீட்டர்  இருக்கும் என்று ஒரு கணக்கு சொல்கிறது. இது சுமாராக பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல் பத்து மடங்கு இருக்குமாம்.  

என்னுடைய முக்கிய வேலைக
ள் மூன்று எனலாம். என் மூலம்:

1. செய்திகளை  சமிக்கைகள் வடிவில் மைய நரம்பு மண்டலத்திற்கும் உடலின் பிற புலன்கள் (sensory) சார்ந்த / இயக்கும் சக்தி (motor) சார்ந்த பகுதிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளப்படுகிறது.
2 கட்டளைகளை சமிக்கைகள் வடிவில் மைய நரம்பு மண்டலத்திற்கும் உடலின் பிற புலன்கள் (sensory) சார்ந்த / இயக்கும் சக்தி (motor) சார்ந்த பகுதிகளுக்கும் இடையில் பரிவர்த்தனைகள் செய்துகொள்ளப்படுகிறது.
3 செய்திகளை ஒருங்கிணைத்து பாதுகாத்து வைத்து  தகவல் தொடர்பு (communication) சார்ந்த நுண்ணறிவுப் பணிகள் நடைபெற உதவுகிறது.
என்னிடத்தில் (மூளையில்) எவ்வளவு தகவல்கள் சேமித்து வைக்க முடியும் தெரியுமா? அதிகமில்லை மணிக்கு 431 கி.மீ வேகத்தில் செயல்பட்டு குவாட்ரிலியன் (1,000,000,000,000,000 (one thousand million million); (1015) தகவல்கள் மட்டுமே செயல்படுத்த முடியும் ... அதாவது, 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக என்  செல்களுக்குள் தக்க வைத்துக் கொள்கிறேன்!

உங்கள்  மூளையின் ஆற்றலில் வெறும் 2 சதவீதமே பயன்படுத்தினால் நீங்கள் சாமானிய மனிதர் தான் என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றனவாம். உங்கள்  மூளையின் ஆற்றலில் வெறும் 5 சதவீதமே பயன்படுத்தினால் உங்களை சமத்து என்று ஒப்புக்கொள்கிறார்கள்.  7 சதவீத மூளை ஆற்றலை பயன்படுத்தினால் நீங்கள் ஒரு சாதாரண விஞ்ஞானி என்று கருதிக்கொள்ளலாம்.  விண்வெளி விஞ்ஞானிகள் 11 சதவீத மூளை ஆற்றலை பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அது சரி உங்கள் மூளையின் முழு அளவு ஆற்றல் தான் என்ன? உங்களில் யாராவது  முழு ஆற்றலையும் பயன்படுதினால்தானே சொல்ல முடியும்!

ஆனால் நான் (மூளை) ஒன்றை உங்களிடம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.  பற்பல செயல்களை ஒரே நேரத்தில் செய்ய (multi-tasking) முயலும் போது நான் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறேன்; இதனால்  50%  மேல் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.

என்  வேலைகளை இடையறாது செய்து வருகிறேன். உங்கள் ஒத்துழைப்பு எனக்கு மிகவும் தேவை:

வழக்கம் போல பல்லவி தான்:
  •  புகை பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் (மூளைக்கு மிக அதிகமாக); மதுப்பழக்கம் வீட்டுக்கும் நாட்டுக்கும் (மூளைக்கும் கூட) கேடு. விட்டுவிடலாமே. 
  • கோபம், கவலை, விரக்தி, பதட்டம், மனசோர்வு, மன இறுக்கம் (ஸ்ட்ரெஸ்) மன அழுத்தம் (டென்ஷன்), தாழ்வு மனப்பான்மை போன்ற மனக் கோளாறுகளுக்கு இடம் தராமல் எப்பொழுதும் ஆரோக்கியமான மனநிலையை அனுசரியுங்கள். 
  • சரிவிகித உணவு அவசியம். வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், பி1 தயமின், பி3 நியாசின்,  பி6 பைரிடாக்சின், கோலின், வைட்டமின் டி, வைட்டமின் இ, கால்சியம், அயர்ன், அயோடின், மக்னீசியம், சோடியம் நிறைந்த காய்கறிகள், பழங்கள் நிறைந்த சத்தான உணவு உங்களுக்கு  அவசியம் தானே.
Related Posts Plugin for WordPress, Blogger...