டாக்டர் போன வாரம் ‘குண்டாக இருப்பதனால நிறைய சாப்பிடுறாங்களா? இல்ல நிறைய சாப்பிட்டு அதனால குண்டாகிறாங்களா?’ என்ற கேள்வியுடன் முடித்திருந்தோம்.”
இந்தக் கேள்விக்கு முன்னாடி வீட்டுல இரும்பு ஜன்னல் கம்பி, கைப்பிடி எல்லாம் துருப்பிடிச்சிருப்பதைப் பார்த்திருக்கீங்களா?”
பார்த்திருக்கிறேன். திருவல்லிக்கேணியில் ‘எவர்சில்வர்’ பாத்திரம் கூட துருப்பிடிக்கும்.”
ஓ. அப்படியா? கவனிச்சீங்கனா உடனே துருப்பிடிக்காது; கொஞ்ச நாள் ஆகும்.”
ஆமாம். துருப்பிடிக்க கொஞ்ச நாள் ஏன் சில மாசங்கள் கூட ஆகும். தொடர்ந்து ஈரப்பதம் இருந்து கொண்டே இருந்தால் படிப்படியாகத் துருப்பிடிக்கும்.”
எக்ஸாட்லி. துருப்பிடிப்பதற்குக் கொஞ்ச கால அவகாசம் வேணும்… ஈரப்பதம், உலோகத்தின் தன்மை என்று நிறைய விஷயங்கள் இருக்கு. உடல் பருமனும் அதே மாதிரிதான். யாரையாவது குண்டாக்க வேண்டும் என்றால் சுலபமான வழி இருக்கு தெரியுமா?”
தெரியாதே.”
தொடர்ந்து இன்சுலின் எடுத்துக்கொள்ளச் சொல்லணும். சிம்பிள். நீங்க என்ன தான் மன உறுதியோட, சாப்பாட்டைக் கட்டுப்படுத்தி, உடற்பயிற்சி செஞ்சாலும் நீங்க குண்டாவது நிச்சயம்.”
அட எப்படி டாக்டர்?”
இன்சுலின் ஒரு ஹார்மோன். அதனால முதல்ல ஹார்மோன் எப்படி வேலை செய்யும்னு தெரிஞ்சுக்கோங்க. ஹார்மோன் என்பவை மூலக்கூறுகள் (molecules). நம் உடம்புல இருக்கும் செல்களுக்குச் செய்தி அனுப்புகிறது.”
ரொம்ப டெக்னிகலா இருக்கே!”
சிம்பிள். நீங்க ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்ட உடனே சர்க்கரை உங்க ரத்தத்தில் கலக்கிறது. உடனே உங்க உடலில் இன்சுலின் சுரக்க செய்தி அனுப்புகிறது. ஏன் தெரியுமா?”
நம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை எனர்ஜியாக, சக்தியாக உபயோகிக்க.”
ஆமாம். சாப்பிட்டதும் என்ன நடக்கிறது? நம் வயிறு, சிறுகுடலில் சாப்பாடு உடைக்கப்படுகிறது. சாப்பாட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. கார்போஹைட்ரேட் அதாவது மாவுச்சத்து,
2. ப்ரோட்டின் என்னும் புரதம்;
3. ஃபேட் என்னும் கொழுப்பு.
புரதங்கள் ‘அமினோ’ அமிலமாக உடைக்கப்படுகிறது. கொழுப்பு கொழுப்பு அமிலங்களாக உடைக்கப்படுகிறது.”
கார்போஹைட்ரேட் என்ன ஆகிறது?”
சொல்றேன்… சர்க்கரை, கார்போஹைட்ரேட் இரண்டும் குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலக்கும். கிட்டத்தட்ட நம் உடலில் இருக்கும் எல்லா செல்களும் இந்த குளுக்கோஸை உபயோகிச்சுக்கலாம். குளுக்கோஸ் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும் போது, ‘இன்கிரிட்டின்’ (incretin)என்ற இன்னொரு ஹார்மோனை சுரக்கச் செய்யுது.”
இது எதுக்கு?”
இன்கிரிட்டின் ரத்தத்தில் கலந்து, கணையத்தை(Pancreas)அடைந்து, பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலினை சுரக்கச் செய்யத்தான்.”
ஆச்சர்யமாக இருக்கே!”
இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி. நம் உடம்புல எவ்வளவு ரத்தம் இருக்கு?”
சுமார் ஐந்து லிட்டர்?”
ஆமாம். ஐந்து லிட்டர் ரத்தத்துல எவ்வளவு சர்க்கரை இருக்கலாம் தெரியுமா?”
தெரியலையே…”
ஒரு டீஸ்பூன் அளவு தான். அதாவது நாலு கிராம்.”
அதுக்கு மேலே இருந்தா என்ன ஆகும் ?”
அதிகமா இருந்தா கெடுதல். முன்பு சொன்ன 3T – ‘Excess Sugar is Toxic’. அந்த அதிகமான சர்க்கரையைக் குறைக்கத்தான் இன்சுலின் சுரக்குது”ஒரு டவுட் – சர்க்கரை, கார்ப் எல்லாம் குளுக்கோஸாக மாறுகிறதா?”
ஆமாம், சர்க்கரை, கார்ப் இரண்டுமே உடலுக்குள் போனால் குளுக்கோஸ் தான்.”
குளுக்கோஸ் என்ன ஆகுது?”
நம் உடலுக்குத் தேவையான சக்தியாய் பயன்படுது. எக்ஸ்ட்ராவா இருப்பது கிளைகோஜெனாக (சேமிக்கப்படும் சர்க்கரையின் வடிவம்) சேமிக்கப்படுது.”
இது எங்கே நடக்கிறது?”
கல்லீரல் (liver) மற்றும் தசைகளில் (muscle). ஆனா அங்கே அதிகம் சேமிக்க முடியாது. பலூன் மாதிரி ரொம்ப ஊத முடியாது.”
மேலும் அதிகப்படியாய் இருந்தா?”
உங்களுக்கு நீரிழிவு என்று அர்த்தம். நீங்க எடுத்துக்கொள்ளும் மருந்து(மாத்திரை அல்லது இன்சுலின்) அதிக இன்சுலினை சுரக்கச் செய்யுது. அந்த எக்ஸ்ட்ரா சர்க்கரையைக் கொழுப்பாய் மாத்துது. அதனால தான் நீங்க குண்டாகறீங்க.”
அட கடவுளே.”
நம் செல்களுக்குள் குளுக்கோஸ் எப்படிப் போகுதுன்னு சொல்றேன்.”
சொல்லுங்க.”
‘செல்’லை ஒரு ரூம் போல கற்பனை பண்ணிக்கோங்க. செல்சுவரில் ‘இன்சுலின் ரிசெப்டர்’ (insulin receptor) என்னும் பூட்டு உள்ளது. பூட்டியிருக்கும் அந்த ரூமைதிறக்கும் மந்திரச் சாவிதான் இன்சுலின். அந்தப் பூட்டைத் திறந்து குளுக்கோஸை செல்லுக்குள் நுழைக்க வேண்டும். அதுதான் உடலுக்கு சக்தியாக மாறுகிறது. உங்களை ஓட, நடக்க, பேச, யோசிக்க, கணக்குப் போட வைக்குது. இப்ப ஒரு நாலாங்கிளாஸ் கணக்கு.”
கேளுங்க.”
நீங்க சாப்பிட்ட உணவுல இருபது குளுக்கோஸ் மூலக்கூறு இருக்குனு வெச்சுப்போம். அதிலிருந்து பத்து செல்களுக்கு இரண்டு குளுக்கோஸ் அனுப்பணும். ஒரு இன்சுலின் சாவி இரண்டு குளுக்கோஸை அனுப்ப முடியும் என்று வைத்துக்கொண்டால் நம் உடல் எவ்வளவு சாவி தயாரிக்க வேண்டும்?”
பத்து.”
ஆமாம். சாவி சரியா வேலை செய்யலேனா? அது தான் பிரச்னை. பத்து சாவியால பத்து குளுக்கோஸைத் தான் உள்ளே அனுப்ப முடியுது வெச்சுக்கோங்க. அப்ப மீதம் இருக்கும் பத்து குளுக்கோஸை எப்படி அனுப்புவது ?”
மேலும் பத்து சாவி தயாரிக்கணும்.”
ஆமாம். இங்கே சாவி தான் இன்சுலின். மேலும் மேலும் சாவி ஜாஸ்தியாகி பூட்டைத் திறந்துகொண்டே இருந்தா பூட்டு ரிப்பேராகி மேலும் மேலும் இன்சுலின் சுரந்து அதுவே இன்சுலின் எதிர்ப்புக்குக் காரணமாகிறது (Insulin Resistance).”
அது ஏன் டாக்டர்?”
இப்ப போனவாரம் யாத்திரை போயிட்டு வந்தீங்க. அதில குழந்தைகளும் வந்தாங்களா?”
கைக்குழந்தையைக் கூட அழைச்சுட்டு வந்தாங்க.”
குழந்தைகள் சத்தம், அமர்க்களத்துக்கு நடுவிலும் தூங்கியிருக்குமே?”
ஆமாம். நான் கூட ஆச்சர்யப்பட்டேன். எப்படி அவ்வளவு சத்தத்துக்கு நடுவுல தூங்க முடியுதுன்னு.”
இதையே நீங்க ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டாண்ட், தியேட்டர்ல பார்த்திருப்பீங்க. ஆனால் அதே குழந்தை வீட்டுல தூங்கும்போது ‘க்ரீச்’ன்னு கதவு மூடுற சின்னச் சத்தம் கேட்டாகூட குழந்தை எழுந்துடும்.”
அட ஆமாம்… இது ஏன் ?”
ரயில்வே ஸ்டேஷனில் தூங்கும் குழந்தை சத்தத்துக்குத் தன்னைப் பழக்கிக்கொண்டுவிட்டது. சரியாகச் சொல்லணும்னா சத்தத்தை எதிர்க்க, புறக்கணிக்க கற்றுக்கொண்டுவிட்டது.”
ஆச்சர்யமாக இருக்கு. அப்ப நம்ம தாலாட்டு பாட்டு கூட அதுக்குச் சத்தமா டாக்டர்?”
ஆமான்னு சொன்னா அம்மாக்கள் சண்டைக்கு வந்துடுவாங்க. இதுபோல பல விஷயங்களில் எதிர்ப்பு உணர்வு ஏற்படுது.”
உதாரணம்?”
நிறைய இருக்கு… ஆனால் நம் உடலில் எப்படி எதிர்ப்பு உணர்வு ஏற்படுது? உடம்புல ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டா அதை எதிர்கொள்ள அதுக்கு நேர் எதிராகச் செய்யல்பட்டு பழைய நிலைக்குத் திரும்ப முயற்சி செய்யுது. குளிர்காலத்துல அதை எதிர்கொள்ள நம் உடல் தன்னைத் தானே சூடாக்கிக்கொள்கிறது. வெயில் காலத்துல?”
வேர்த்துக்கொட்டி தன்னைத் தானே கூலாக்கிக்கொள்கிறது.”
எக்ஸாட்லி. ஆக சூழ்நிலைக்கேற்ப உடம்பு அட்ஜஸ்ட் (adapt) செஞ்சுக்கிறது. அதனால்தான் நாம் இன்னும் உயிரோடு இருக்கோம். இப்ப இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் அல்லது இன்சுலின் எதிர்ப்புக்கு வரலாம். இன்சுலின் எதிர்ப்பு நம் உடலுக்குத் தேவையா ?”
இன்சுலின் ரத்தத்தில் இருக்கும் குளுகோஸை குறைச்சு அது ரொம்ப குறைச்சா உடனே ‘லோ சுகர்’ ஆகிடும். அதுனால இன்சுலின் எதிர்ப்பு தேவை. சரியா?”
கரெக்ட். ஆனா அதிக இன்சுலின் எதிர்ப்பு அளவுக்கு அதிகமானா தான் பிரச்னையே.”
இது எப்படி டாக்டர்?”
இது இன்சுலினுக்கு மட்டுமில்ல, நாம் தொடர்ந்து ஆன்ட்டிபயாட்டிக் எடுத்தாலும் இதே பிரச்னைதான். அதாவது ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்பு உண்டாகி ஆன்ட்டிபயாட்டிக் வேலை செய்யாமல் வேறு ஆன்ட்டிபயாட்டிக் அல்லது அதிக டோஸேஜ் எடுத்துக் கொள்கிறோம்.”
உங்களுக்கு சின்ன வயசுல தட்டம்மை (measles) வந்திருக்கா?”
வந்திருக்கு.”
இனிமே உங்க வாழ்நாளில் உங்களுக்கு தட்டம்மை வராது.”
ஏன்?”
(அடுத்த வாரம் சொல்றேன்)
-நன்றி கல்கி
Source: Balahanuman November 11, 2016
https://balhanuman.wordpress.com/2016/11/11/3%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/
No comments:
Post a Comment