Wednesday, November 19, 2014

அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 1: கொங்கு நாட்டின் தேசிய இலக்கியம்

பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள், வீரப்பூர்
பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்
பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்
நெல்லிவள நாடு வரைபடம்


'அண்ணன்மார் சுவாமி கதை' கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே ஊறுப்பட்ட செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதைப்பாடலாகும். புகழ்மிக்க இக்கதைபாடல்  ‘அண்ணன்மார் கதை’ மற்றும் ‘குன்னடையான் கதை’ என்ற பெயர்களில் அறியப்படுகின்றது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். வெள்ளாளக் கவுண்டர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது. காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயம். பழங்காலத்தில் விசயஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தை கவுண்டர்கள் ஆண்டதாக கொங்கு தேசராசாக்கள் என்னும் நூல் சொல்கிறது. விஜயநகர அரசு வம்சம் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முன்பிருந்தே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விஜய நகர அரசர்கள் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்தை பல்வேறு குறுநிலங்களாகப் பிரித்து அமைத்தார்கள். இந்த குறுநிலங்களின் பகுதிகளை கவுண்டர்களும் குறுநிலத் தலைவர்களாக இருந்து பரிபாலனம் செய்து வந்திருக்கின்றனர்.

இந்த கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல் (Heroic Ballad) இது.  பொன்னர் சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டை காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்றெல்லாம் அண்ணன்மார் சாமி கதை நமக்குச் சொல்கின்றது.

பெரிய காண்டி அம்மன் தலவரலாறு 

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீரப்பூர் என்னும் வீரம் விளைந்த மண்ணில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் பெரிய காண்டி அம்மனின் கோவில் பற்றிய தல வரலாறு மிகவும் சுவையானது.

ஒரு காலத்தில் அஞ்சு தலை நாகம் கடும் தவம் புரிஞ்சு தனக்கு அன்னை பார்வதியே வந்து மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் வேண்டுச்சு.
 ஐந்துதலை நாகம் அரவம் குடியிருப்பு
நாகந் தவசு அதில் நற்பாம்பு செய்கிறது

அன்னை பார்வதியும் வேணும்கிற வரங்குடுத்து (வரமளித்து) அதற்கேற்ப அஞ்சு தலை நாகத்தின் வயிற்றில் வந்து பிறந்தாலும், தேவியானவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். தேவி தன்னுடைய அலி நிலையை மாற்றியமைக்குமாறு சிவ பெருமானிடம் வேண்ட அவரும் அன்னையை ஊசி முனையில் நின்று கொண்டு தவமியற்றுமாறு அறிவுரை சொன்னாரு. வருங்காலங்களில் அன்னை தவமியற்றும் அந்த இடத்திற்கு வந்து இரண்டு சகோதரர்கள் தங்கள் எதிரிகளுடன் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் பொறந்தவளான அருக்காணி தங்கம் அன்னைக்கு அந்த அலி நிலையில் இருந்து விடுதலை அளிப்பாள் என்றும் சொன்னாரு. அவளுக்குத் துணைபுரிய ஆறு கன்னிகளையும் படைச்சாரு. அன்னை தவஞ்செஞ்ச அந்த இடத்துக்குப் பக்கம் இருந்து தவஞ்செஞ்ச வீரமாமுனிக்கு  இக்கிட்டாக (இடையூறாக) இருந்துச்சு. இருந்தாலும் தவத்தில் இருந்தவ பார்வதியேன்னு தெரிஞ்சு அம்முனிவரும் அவத்தைக்கு வந்து தேவிக்கு காவலா நின்னாரு.

அண்ணன்மார் சாமி கதைச் சுருக்கம்

கரூரை அடுத்து உள்ள பகுதி வீரமலை -

'சீரான சதுரகிரி வீரமலை,'
"தெற்கேதான் தோணுமலை தென்னாட்டில் வீரமலை
நாலுசதுரமலை சதுரகிரி வீரமலை
சுத்தி வளர்ந்த மலை தொடர்விழுந்த வீரமலை"
'கன்னங் கருத்தமலை சாமி கைலாசம் போன்றமலை 
நாலுபுரம் சதுரகிரி அதன் நடுவிருக்கும் வீரமலை.'  

கோளாத்தாக் கவுண்டர் சேர நாட்டின் வாழவந்தி நாடுங்கற (தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் தென் பகுதி) குறுநிலப் பகுதிக்குத் தலைவரு. கவுண்டரு கொங்கு காராள வெள்ளாளர் கிளையைச் சேர்ந்த பெருங்குடியான் கூட்டத்திலே பதினோரு பேரோட பொறந்தவரு. எல்லாத்துக்கும் மூத்தவரு.  இவர் ஒரு “கனத்தமுடிக் காராளன்” "வட்டாரம் பதியாளும் வளநாட்டில் காராளன்" (காராளன் சிற்றரசன் போன்றவர்). மணியங்குரிச்சிக்காரியான பவளாத்தாள் இவரது ஊட்டுக்காரி.

தம்பிகள் அநியாயம் பொறுக்காம கவுண்டரும் பவளாத்தாளும் அவுக நாட்டை விட்டு மதுக்கரை செல்லண்டியம்மன் கோவிலுக்கு வர்ராங்க. அங்கே சேர, சோழ, பாண்டிய மகாராசாங்க அம்மன் சன்னத்திலே உக்காந்து அவுக அவுக தேசத்துக்குண்டான எல்லைக்கோட்டைப் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. கோளாத்தாக் கவுண்டரு அவுக பிரச்சனையை சுமூகமாத் தீர்த்து வச்சாரு. சோழ மகாராசா சந்தோசப்பட்டு கவுண்டருக்கு கோநாடு தேசத்தைக் குடுத்தாங்க. கவுண்டரும் கவுண்டச்சியும் கோநாட்டுக்குப் போய் பண்ணயஞ் செஞ்சு செழிக்க வச்சாங்க. நெல்லிவளநாடுன்னு பேரு விளங்கிச்சு. செல்லாண்டியம்மன் கோவிலை எடுத்துக் கட்டி வச்சாரு. வெள்ளாங்குளம் ஏரியையும் வெட்டியவரும் இவருதான்.

கோளாத்தாக் கவுண்டரு தவமிருந்து பெத்த மகன் தான் நெல்லியன் கோடன் என்கிற குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான் / குன்னடையான்). குன்னடையான் ஒரு விவரமற்றவன் என்ற பொருளில் ‘மசையன், மசச்சாமி, மசக்கவுண்டன்’ அப்பிடினுல்லாம் பேரு போட்டாங்க. இவரு குணத்துக்கு உவமையாக ‘வெள்ளைச் சோளத்தைச்’ சொல்கிறாங்க. வாழவந்திலே பஞ்சம் வந்துட்டதினாலே மத்த பதினோரு பொறந்தவனுங்களும் நெல்லிவள நாட்டுக்கு (கோநாட்டுக்கு) வந்து தஞ்சம் புகுந்தாங்க. கோளாத்தாக் கவுண்டர் பவளாத்தாள் தம்பதியர் குன்னடையானுக்கு ஐந்து வயதாகும் போதே கண்ணை மூடிட்டாங்க. சாகிறப்போ கவுண்டரு தன் தம்பி செல்லாத்தா கவுண்டரையும் பண்ணாயக்காரன் சோழன் தோட்டியையும் கூப்பிட்டு தங்கள் காலத்துக்குப் பொறவு குன்னடையானை அவுக பொறுப்பில விட்டுட்டு போறதாச் சொல்லிக் கண்ணை மூடினாங்க. கோளாத்தாக் கவுண்டர் தன் தம்பியிடம்  மணியங்குரிச்சியில் உள்ள தன் தங்கை மகள் தாமரை நாச்சியாரை தன் மகனுக்கு கண்ணாலம் மூச்சுவைக்கறதுக்குன்னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு. கோளாத்தாக் கவுண்டர் சாவுக்குப் பொறவு அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான். குன்னடையான் நெல்லிவள நாட்டைப் பரிபாலிக்கும்போது அவரது ஒறம்பற பங்காளிகள் வாசாலம் பேசி (சூழ்ச்சி செஞ்சு) இக்கிட்டு (இடர்பாடு) குடுத்தாக.

குன்றுடையான் தன்னைக் குழியிலே போட்டுவிட்டால் அவனுடைய பங்கையெல்லாம் அபகரித்துக் கொள்வமென்று குன்னடையானைக் கருவேல மரத்தில் கட்டிவெச்சு அடிச்சாக. சித்ரவதை செஞ்சாங்க. அவுகளோட சடவு எடுக்கமுடியாம குன்னடையான் ஆதிசெட்டி பாளையம் (தற்போதைய புலியூர், கரூர் மாவட்டம் அருகில் உள்ளது) சென்று தவிடு வியாபாரம் செய்யும் ஒரு செட்டியார் வீட்டில் தங்கி பண்ணாயக்காரனா ஊழியஞ் செஞ்சாரு. குன்னடையன் வந்து சேர்ந்த பொறவு செட்டியாருக்கு ரொம்ப வசதி வந்திருச்சு. குன்னடையன் சித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரு தன் மகன் மலைச்சாமிக்கு தாமரையை கண்ணாலம் கட்டிவைக்க திட்டம் போட்டு வேலை செஞ்சாரு. தாமரையின் தகப்பன் மலைக்கொழுந்துவும் தாமரை - மலைச்சாமி கண்ணாலத்துக்கு சம்மதிச்சாரு. கண்ணாலம் ஏற்படாச்சு. கோளாத்தாக் கவுண்டர் வீட்டிலே பண்ணையஞ் செஞ்ச தமுக்கடிக்கிற சோழ தோட்டி, குன்னடையானை செட்டியார் வீட்டிலே பாத்து மணியங்குரிச்சி அத்தை வீட்டுக்கு கூப்பிட்டு வர்ரான்.

குன்னடையனும் சோழன் தோட்டியும் பிச்சைக்காரர் போல வேஷம் போட்டு தாமரையை பாக்குறாங்க. தாமரை அம்மா அவுகளுக்கு சோளத்தை பிச்சை போடச் சொல்றப்போ குன்னடையன் பிச்சை வேண்டாம் பொண்ணைக் குடுன்னு கேட்டான். அங்கே வந்த அவன் மாமன் கடுப்பாகி  குன்னடையானை எறும்புப் புத்து இருக்கிற கொட்டடிலே ராத்திரி பூரா அடைச்சு வச்சாரு. மாயவன் சாமி (விஷ்ணு / பெருமாளு) தான் குன்னடையானைக் காப்பாத்தினாரு. தாமரை நாச்சியார் குன்னடையான் மேலே ஆசைப்படவே இவர்கள் கண்ணாலம் நடந்துச்சு. தாமரை நெல்லிவாளா நாடு போறப்ப தன்னை ஏமாற்றியது பற்றி தன் தகப்பன் மலைக்கொழுந்துவிடம் மிகவும் கோபப்பட்டாள்.  "எனக்கு சிங்கக்குட்டிகள் போல இரண்டு மகன்கள் பிறப்பார்கள். உன் மகனுக்கு இரண்டு மகள்கள் பிறப்பார்கள். என் மகன்களுக்கு உன் பேத்திகளைக் கட்டி வைத்து என் வீட்டுக்குக் கூட்டிச் செல்வேன்னு" ஒரு சபதம் வேறு செய்தாள்.  இது இக்கதையில் முக்கியமான சபதம் ஆகும்.

குன்னடையான் தாமரை நாச்சியார் கண்ணாலத்திற்குப் (திருமணத்திற்குப்) பின் வளநாட்டுக்கு வந்தாங்க. குன்னடையான் ஆகாவழி ஒறம்பறகிட்ட பங்கு கேட்கப் போனாரு. "என்னுடைய பாகத்தை எனக்குக் கொடுங்களென்றான்" கருமாந்திரம் புடிச்ச ஒறம்பற பங்காளிங்ககிட்ட திரும்பவும் ஓரியாட்டம்தான். அவரை எச்சுப் பேச்சு (கண்டபடி) பேசி எகத்தாளம் செய்தார்கள். மீண்டும்:


 "கருவேலா மரத்திலே கட்டி அடித்தார்கள் கருணையில்லாப் பாவிமக்கள்."
ஒறம்பற பங்காளிகளால் இம்சுப்பட்ட குன்னடையான் சோழ ராசாவிடம் "என்னுட பங்காளிகள் என்பங்கைத்தான் பிடுங்கி; பங்கைப் பிடுங்கிவிட்டார் எனக்குப் பாதகமும் செய்துவிட்டார்; காடுகளும் இல்லையென்று கடுகி முடுக்கிவிட்டார்;"


என்று நாயம் (நியாயம்) கேட்டாரு.

சோழ ராசா  குன்னடையானுக்கு "நல்லதென்று ராஜாவும் நலமில்லா பூமிதனை; சீத்தமுள் வனத்தை கொடுத்தாரே" சீத்த முள்ளும், கள்ளியும் நெறஞ்ச மலங்காட்டை வெள்ளாமை செய்யக் கொடுத்தாரு. பாழாய்க் கெடந்த மலங்காடு பசுஞ்சோலையாச்சுது. குன்னடையான் மனம் போல பயிர்கள் நருவசா தழைச்சி வளந்திச்சு. "ஆயன் கிருபையினால் அவர்கள் குடியீடேற; பசுக்கள் மிகப்பெருகி பாக்கியங்களுண்டாச்சு." நீண்ட நாளா குன்னடையான் தாமரை நாச்சியார் தம்பதிகளுக்கு என்ன நோக்காடோ தெரியலை - கொழந்த  இல்ல. எனவே இந்தக் கொறய நெனச்சு மனம் கலங்கினாக.

"மக்களும் இல்லை என்று மனது மிக வாடி"

(நாம்) தேடும் திரவியத்தைச் செவழிக்கப் பிள்ளையில்லை
வாரியெடுத்தணைக்க மைந்தனும் இல்லையென்று"
"மைந்தனாரில்லையென்று மனக்கவலையுண்டாகி!
புத்திரனா ரில்லையென்று பெருங்கவலையுண்டாகி!!

வேண்டாத தெய்வம் இல்ல. மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு தேர் செய்து தேரோட்டம் விட்டார்கள். சிதம்பரம் கோவிலுக்குப் போனாங்க. போகும்போது நிலபுலன்கள் நகை நட்டுக்கள் எல்லாத்தையும் பக்கத்து மாயநாட்டு வேட்டுவ கவுண்டர் தலையூர்  காளி பொறுப்பில் விட்டுவிட்டுப் போனார்கள். காளி பொறாமையுடையவன். குன்னடையான் செல்வாக்குக் கண்டு வெறுப்படைந்தான். சொத்தை அபகரிக்கவும் தாமரையைக் கவரவும் திட்டம் போட்டான். அவன் திட்டம் கண்டு நிலம், நகை எல்லாம் திரும்பக் கேட்டார்கள். காளி திரும்பக் கொடுக்கலை. குன்னடையனையும் அடித்து வீட்டை விட்டு வெளியே தூக்கிப்போட்டான். இந்த சந்தர்ப்பத்தில் தாமரை : "காளி நீ செய்த நம்பிக்கை துரோகத்துக்கு உன்னை ரத்தம் சிந்தவைத்து அதில் குளிப்பாட்ட வைப்பேன்ன்னு" இரண்டாவது சபதம் செய்கிறாள். இக்கதையில் இது சற்று முக்கியமான சபதம் ஆகும்.

சாமி கண்ண திறந்தாரு!  தாமரை நாச்சியார் மாசமானாள் (கருவுற்றாள்)!! மனக்கொற போச்சுது!!!


சித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரு பிரசவ காலத்தில  திரும்ப சூழ்ச்சி செஞ்சு குன்னடையான் ஆண் வாரிசைக் (கொழந்தையைக்) கொல்ல முயன்றனர். மருத்துவச்சி, தாமரையின் பேறுகாலத்தில், ஆண் கொழந்தையைக் கொல்லத் தயாராக இருக்கையில் பொன்னர் வலது விலாவிலிருந்தும், சங்கர் இடது விலாவிலிருந்தும் பிறந்தாக. 

"மருத்துவச்சி செய்த வகைமோசம் தானறிந்து
வலது விலாவில் வகையான பொன்னருந்தான்
இடது விலாவில் இயல்பான சங்கருந்தான்
இருவர் பிறந்தார்கள் ஈஸ்வரனார் தன்னருளால்
நிலவரையின் கீழே வளர்த்தாரிருவரையும்
எல்லவரும்போல தங்காளும் தான்பிறந்தாள்"




சில நாட்கள் கழித்து தாமரை மீண்டும் மாசமானாள்; பெண் கொழந்தை அருக்காணி நல்ல தங்கம் பிறந்தாள். 

"பொன்னர் சங்கருடன் பிறந்த பொற்கொடியாள் நல்லதங்காள்"

பஞ்ச பாண்டவர்கள் துவாபர யுகத்தில் குருஷேத்ர யுத்தம் புரிந்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் சுவர்க்கம் புகுந்தார்கள். பஞ்ச பாண்டவர்கள் கலியுகத்தில் தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட பிறப்பெடுக்க வேண்டி வந்தது. குன்னுடையான் - தாமரை தம்பதிகளுக்கு தர்மராசா பொன்னராகவும், அர்சுனராசா சங்கராகவும், திரௌபதி அருக்காணி நல்லதங்காளாகவும் வந்து பிறந்தார்கள். பீமன் சோழன் தோட்டியின் மகன் சம்புவனாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குன்னடையனின் ஒன்றுவிட்ட சகோதரர்களின் மகன்களாகவும் பிறந்தார்கள்.

குன்னடையான் தாமரை நாச்சியார் சாவுக்குப் பொறவு பொன்னர் - சங்கர் நெல்லிவள நாட்டை பரிபாலனம் செஞ்சாங்க.  தாய் தகப்பன் மடிஞ்ச துயரத்தை மறக்க தங்கை அருக்காணி நல்ல தங்கம் தனது பொறந்தவங்ககிட்ட (அண்ணன்மாரிடம்) தனக்கு கிளி, மயில், புறா எல்லாம் வேணுமின்னு கேட்டாள். பொன்னர், சங்கரை வீரமலைக் காட்டுக்கு அனுப்பினாரு. அவத்தைக்கு "மயில்கள் குயில்பிடித்து மாடப்புறா தான்பிடித்து அன்னமுடன் தாராவும் அனேகமாய்த் தான்பிடித்து" வரும்போது ஒரு பெரிய அறுபதடி வேங்கை சங்கரைத் தாக்க வந்துச்சு. சங்கர் அந்த அறுபதடி வேங்கையை மளார்னு வெட்டிக் கொன்னாரு. இந்த வேங்கை வேட்டை பல விபரீதங்களை உண்டு பண்ணிச்சு. மேனாட்டு வேட்டுவ படைத் தலைவன் தலையூர்க் காளி என்பவன் காட்டின் எல்லையில் வளர்ந்த வேங்கையாம் அது. தன் காட்டின் எல்லையில் சங்கர் வேங்கையை கொன்னதையும், கிளி, மயில், புறா பிடிச்சுக்கிட்டு போன  சேதி தெரிந்த தலையூர்க் காளி கொதிச்சுப்போனான்! அண்ணன்மாரை ஒழிச்சுக்கட்டினால்தான் தனது செல்வாக்கு நெலக்குமுன்னு நெனச்சான். காளி படையைக் கூட்டினான்.  விசுக்குன்னு படை கிளம்பிப் போச்சு. காளி படை கோயில்களையும் கிராமங்களையும் கொள்ளையடிச்சது. எல்லாத்துக்கும் மேல பச்சனா முதலி (பச்சையண்ண முதலி) மகள் குப்பாயிங்கர புள்ளய (பெண்ணை) அலுங்காம சிறையெடுத்தது:
"பச்சனா முதலிமகள் பருவமுள்ள குப்பாயி"
“அன்னலூஞ்சல் தொட்டியிலிலே அனந்தல்
செய்யும் வேளையிலே, அனந்தல் தெளியாமல் அலுங்காமல் தானெடுத்து”
பொன்னர் தன் தம்பி சங்கரை அழைத்து காளியின் படையை துவம்சம் செஞ்சு அம்மணியை (குப்பாயியை) அலுங்காம சிறைமீட்டு வருமாறு பணிச்சாரு. சங்கர் வேட்டுவ கவுண்டருடன் சண்டை போட்டது வீரமலையில். அந்த சண்டையில்,

“மெல்லிய வாள் தும்புவிட்டு வீசினார் நல்லசங்கு
   காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்
   வேலற்று வீழ்வாரும் மேனிதுண்ட மாவாரும்
   குதிரைக்கால் மிதிபட்டுக் குளம்படியில் சாவாரும்
   அய்யா சரணமென்று சாஷ்டாங்கம் செய்வாரும்”
 “வணங்கிப் பணி செய்தவரை” சங்கர் - வாள் முனையில் தள்ளிவிட்டாரு. “கும்பிட்டாரை வெட்டாத குருகுலத்தவர்” 

சங்கர் வேங்கைபோல் பாய்ந்து காளியுடன் போரிட்டு வென்று குப்பாயி அம்மணியை சிறைமீட்டு வந்தாரு. சிலநாள் கழிச்சு மணியங்குறிச்சியிலே தாய் மாமன் வீட்டில பொன்னர் சங்கர் சகோதரர்கள் இரண்டு பேருக்கும் ஒட்டுக்கா கண்ணாலம் நடந்துச்சு. சகோதரர்கள் சம்சாரியாகி குடும்பம்  நடத்தினாங்க.  ஒரு சமயம் சோழ ராசா வெச்ச வேண்டுகோளின்படி தலையூர்க் காளியின் பன்றியை வேட்டையாடிக் கொல்ல வேண்டிவந்துச்சு. பன்றி வேட்டைக்கென்று வாளும், வேலும், வில்லும் தயாராச்சு. நெல்லிவள நாட்டு மக்கள் அண்ணன்மார் தலைமையில் பன்றி வேட்டைக்குப் புறப்பட்டார்கள். வேட்டை நடந்தது, பன்றி கொல்லப்பட்டது. 

அண்ணன்மார் செல்வாக்கைப் பாத்து தலையூர்க் காளி ஏகமாய் மனம் வெதும்பினான். பொற்கொல்லன் செம்பகுலனை  ஏவி சூழ்ச்சி செய்து அவர்களை ஒழிக்க நெனச்சு திட்டம் போட்டான். செம்பகுலன் செஞ்ச சூழ்ச்சி என்ன தெரியுமா?

"அந்த மாவிலங்க மரத்தை வெட்டி மரநாழி திருக்கடைந்து; அரைமாத்தின் பொன்னெடுத்து அரைத்து வழித்தெடுத்து; கால்மாத்தின் தங்கத்தில் அதிலே கலந்து உருக்கியேதான்; பொன்நாழி என்றிருக்க அதைப்பூசுகிறான் மேல்பூச்சாய்; தங்கத்தினால் நாழியென்று அதைத் தடவுகிறான் மேல் பூச்சாய்"

மாவிலிங்க மரத்தில் ஒரு மரநாழி செஞ்சான்.  பொறவு  மரநாழிக்குப் பொன்முலாம் பூசினான். முலாம் பூசிய அந்த மரநாழியை எடுத்துக்கிட்டு அண்ணன்மார் அரண்மனைக்குப் போனான். பொன்னரிடம், சோழ ராசாவுக்கு பொன்நாழி செஞ்சு எடுத்துக்கிட்டுப் போறேன்னு சொன்னான். அன்னக்கி ராத்திரி அண்ணன்மார் அரண்மனைலே தங்கி அடுத்த நாள் காலைலே போக பொன்னரிடம் உத்தரவு கேட்டான். பொன்னர் மதி மயங்கி தன் தங்கை தடுத்தும் கேளாமல் அவனுக்கு உத்தரவு குடுத்தாரு.

ராத்திரி செம்பகுலன் தன் திட்டத்தை வேகு வேகுன்னு நிறைவேத்தினான். விளக்கின் சுடரில் காட்ட அந்த வெப்பத்தால்   மரவள்ளத்தில் பூசிய  பொன்முலாம் உருகிடுச்சு. அந்த வள்ளம் முலாம் கலைஞ்சு பழையபடி மரவள்ளமாக மாறிப்போச்சு. தான் வரும்போது எடுத்துக் கொண்டு வந்தது பொன் வள்ளமென்னும், அதுக்குப் பதிலா மரவள்ளத்தை மாத்தி வைச்சு பொன்னர் தன்னை ஏமாத்திட்டார்னு பொற்கொல்லன்  பழி சுமத்தினது மட்டுமில்ல அவரைச் சத்தியம் செய்யறதுக்கு வெள்ளாங்குளத்து ஏரிக்கரைக்கு வருமாறு வற்புறுத்திக் கூப்பிட்டான். பொன்னரும் அவன் விரும்பினபடியே சத்தியஞ் செய்யச் சம்மதிச்சாரு. அவனுடன் போவதற்கு முன்னால, பொன்னர் தாம் திரும்பி வரும் வரை வேட்டுவப் படை வந்தாலும் சங்கரும் மற்றவர்களும் கோட்டையை விட்டு வெளியில வர வேண்டாம்னு  எச்சரிக்கை செஞ்சாரு. பொன்னர் வெள்ளாங்குளத்து ஏரிக்கரைக்குப் போன சமயம் பார்த்து தலையூர்க் காளி படைதிரட்டி நெல்லிவள நாட்டைக் கொள்ளை அடிக்க வந்தான்.

பொன்னர் சங்கரின் மூன்று மைத்துனர்களும் சம்புவனும் படை திரட்டிப்போய் காளி படையை விரட்டி அடித்தார்கள். வெற்றி பெற்று திரும்ப வரும்போது  மைத்துனர் மூவரும் ஒரு குளத்தில் தண்ணீர் குடித்தார்கள். அந்தக் குளத்து நீரில்  காளியால் விஷம் கலக்கப்பட்டிருந்தது. நீர் குடித்த மூன்று மைத்துனர்களும் மடிந்தனர். சம்புவன் நீர் குடிக்காததால் உயிர் பிழைத்தான். அரண்மனைக்குப் போய் சங்கரிடம் தகவல் சொன்னான். சங்கர் இது கேட்டு ரௌத்திரம் கொண்டான்.  சங்கர் தன் படையுடன் காளியைத் தேடி அழிக்க தன் குதிரையில் போனாரு.
“கடலும் சமுத்திரமும் கலந்து பிரிந்ததைப் போல்” வேட்டுவர் படையும் வேளாளர் படையும் கைகலக்கின்றன. படைகள் அணியணியாய் நின்று கலந்து போர் செய்கையில் “காரிடி போல் முழுங்குதப்போ, வானமிரைக்கிறது, வீரமலை வனங்களெல்லாம் சிலையோடும்.”

சங்கர் காளி படையைச் சங்காரம் செஞ்சு வெற்றி கண்டாரு. அப்போது பாரதம் (பொன்னர் சங்கர் கதையை) முடிக்கிறதுக்கு மாயவர் - வேடன் தலையூர்க் காளி போல வடிவம் தாங்கி  ஒளிஞ்சிருந்து - சங்கர் மீது அம்பைச் செலுத்தினாரு. அம்பு சங்கரு நெஞ்சிலே பாஞ்சிடுச்சு. சங்கர் தன் மீது பாஞ்ச அம்பைப் பிடுங்கிப் பார்த்த போது அது மாயவன் அம்புன்னு புரிஞ்சுது.
“வைகுந்தம் பார்வையுந்தான், கைலாசம் பார்த்த கண்ணு-
குமாரசங்கு - கண்ணுறக்கமாகி விட்டார்.”
மாற்றாரின் வஞ்சனையால் தம்பி சங்கர் இறந்தார் என அறிந்த “பொறுமை பொறுத்த பொன்னம்பலசாமி”க்கும் சினம் பொங்குகின்றது.
  “மோனட்டு வேடுவர்கள் எழுபது வெள்ளம் சேனை
  அணியணியாய்ப் போற்படை துணிதுணியாய் வெட்டும்பொன்னர்
  பொன்னாளிக்கையா புனுகணிந்த மணிமார்பா
  சந்தன மணிமார்பா தளத்துக்கெல்லாம் வன்னியனே
  வேடுவரைக் குலவையிட்டு விழிபிடுங்கும் நல்லபொன்னு
  கும்பிட்டாரை வெட்டாத குருகுலத்து வங்கிசமே
  சாய்ந்தாரை வெட்டாத சதுரமுடி நல்ல பொன்னு”
 


நெஞ்சிலே காயம்பட்ட சங்கர் அவமானப்பட்டு உயிர் வாழ விரும்பவில்லை. சம்புவனிடம் சொல்லி வாளை நாட்டுவைத்து அதில் பாய்ந்து உயிர் துறந்தாரு. பொன்னர் தன் பொறந்தவனின் வீர மரணம் கேள்வியுற்று தன் படையுடன் போய்  காளியைத் தேடிக் கொன்னாரு. பின் படுக்களம் போய் தன் தம்பி, சம்புவ
ன், மூன்று மைத்துனர்கள் மற்றும் படைவீரர்கள் எல்லாம் மடிஞ்சது கண்டு மனம் நொந்து போனாரு. படுகளத்தில் சங்கர் மடிஞ்சது கண்ட பொன்னர், தம்பியின் பிரிவைத் தாங்காம தாமும் தமது மார்பில் அம்பு பாய்ச்சி மண்டியிட்டபடி உயிரைவிட்டாரு. அரண்மனையில் பொன்னர் சங்கர் மனைவிமார் முத்தாயி மற்றும் பாவாயி ஆகிய இருவரும் தங்கள் கணவர்கள் போரில் வீரமரணம் அடைஞ்ச சேதி கேட்டு மனமொடஞ்சு போயி தீ வளர்த்து தங்கள் உயிரை மாச்சிக்கிட்டாங்க (மாய்த்துக் கொண்டார்கள்). 

அரண்மனையில் இருந்த பொறந்தவ சொப்பனம் கண்டாள். கெட்ட சகுனங்கள் கெட்ட அறிகுறிகள் எல்லாம் கண்ட அருக்காணி நல்ல தங்காளுக்கு தம் அண்ணன்மார்களுக்கு ஆபத்துன்னு தெறிஞ்சு போச்சு! அருக்காணி நல்ல தங்கம் படுகளம் நோக்கிப் புறப்பட்டாள். நெஞ்சிலே வேதனை பொங்கக் கையில் திருக்கரகம் ஏந்தியபடி அந்த உத்தமித் தெய்வம் தங்காள் இட்டேறியில் (காட்டு வழியில்) நடந்தாள். அண்ணன்மார் இருவரையும் தேடி  கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓட நடந்து வந்த தங்கத்தைக் கண்ட உடனே அலியாக இருந்த பெரிய காண்டி அம்மன் திரும்ப பெண்ணாக மாறினாள். பெரியக்காண்டி அம்மனும் கன்னிமார் ஏழு பேரும் அவளுக்குத் துணையாயிருந்து படுகளத்திற்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. பெரியக்காண்டி அம்மன், பொன்னர் சங்கருக்கு மீண்டும் உயிர் கொடுத்து புதுப் பிறவி எடுக்க வைத்தாள். படுகளத்தில் மாண்ட அண்ணன்மார்கள் மீண்டு எழுந்து தங்கத்திடம் என்னவெல்லாமோ பேசினார்கள்.  பொன்னர் சங்கர் சகோதரர்கள் அமரத்துவம் அடைவதற்கு பெரியகாண்டி அம்மன் தன் சக்தியால் அருள் பாலித்தாள். அவர்களுடைய தங்கை அருக்காணி நல்ல தங்கத்தை பெரியகாண்டி அம்மனும் அவள் பணிப்பெண்களும் பாதுகாக்கிறார்கள்.
நாள் செல்லச் செல்ல அண்ணன்மார் இரண்டுபேரையும் கொங்கு மண்ணின் சாமிகளாக ஏத்து மக்கள் கும்பிட்டுக்கிட்டு வர்றாங்க. மனம் திருந்தின ஒறம்பற பங்காளிகள் சகோதரர்களாகிய இரண்டு வீரதெய்வங்களுக்கும்  கோயிலு கட்டி  நோம்பி சாட்டிக் கொட்டி முழக்கிக் கும்பிடுறாங்க. விழாவில் சோழர் குடியும் பாண்டியர் குடியும் பகை தீர்த்து ஒன்று பட்டார்கள். கொங்கு நாட்டு மக்கள் எல்லாரும் அண்ணன்மாரைக் காணியாச்சியாக (குலதெய்வமாகக்) கொண்டாடி வழிபட்டு வருகிறார்கள்.
குடிசெழித்துக் குலம்பெருகப் பெரியக் காண்டி
குன்றுடையான் மக்கள் பொன்னர் சங்கரோடு
அடிதவறா நல்லதங்கம் அத்தை பிள்ளை
அழகுமகா முனி சாம்பான் இனிதே வாழ்க!
படியிலிதை நினைப்போர் அச் சிட்டோர் கேட்டோர்
பாடியவர் செல்வமெலாம் பெற்றே வாழ்க!

மேற்கோள்கள்

  1. அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்.  (download from Scribd) http://www.scribd.com/doc/28974760/%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0
  2. அண்ணன்மார் சுவாமி கதை. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?pno=1&book_id=237
  3. அண்ணமார் சுவாமி வீரவரலாறு. https://www.facebook.com/truegodannamar
  4. அண்ணமார் கதை எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் தொகுப்பு) உடுக்கடிக்கதை - பூளவாடி பொன்னுசாமி http://annamarstory.blogspot.in/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html
  5. பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை http://vettuvagoundersangam.blogspot.in/2011_04_01_archive.html
  6. எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு) - Annamar swami kathai (Pichai Pattan ) full download link http://www.esnips.com/web/Annamarswamikathai.
  7. Annanmar Story. Sathy R. Ponnuswamy. Kongu.Us 
Youtube
THF அண்ணன்மார் கதை (கொங்குநாடு) by Subashini Tremmel



Ponnar Sankar Story Premkumar Balasubramaniam

1 comment:

  1. அருமை...அறிய செய்தி...நன்றி ஐயா..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...