Thursday, November 27, 2014

அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 2: வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் மாசித் திருவிழா

வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவில்
பொன்னர் சங்கர் கோவில்

பொன்னர் சங்கர் கோவில்

பொன்னர் சங்கர் சன்னதி

நெல்லிவாளநாடு வரைபடம்


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன கவலை? உங்களுக்கு பயம் எதற்கு?” என்று கூறி அருள்பாலிக்கும் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் அமைந்து மிரட்டும் விழிகளுடன் விளங்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகியன உள்ளன. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமெனக் கூறப்படும் தவசு கம்பம் உள்ளது.

வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம் பள்ளம், வீரப்போர் நடந்த இடமாகக் கருதப்படும் படுகளம் கோவில், அண்ணன்மார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும் இனாம்குளத்தூர், வளநாடு அண்ணன்மார் கோட்டை கோவில், கன்னிமார் அம்மன் கோவில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் என வீரப்பூரை, பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள், முக்கிய இடங்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏராளம் உள்ளன.

முன்பெல்லாம் (சுமார் 30 - 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் (நீர்மோரும் கிடைக்கும்) அமைத்து தரும காரியம் செய்து வந்தனர்.

அங்குள்ள பெரிய கோவிலில் (வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோவிலை அங்கு இவ்வாறு சொல்வார்கள்) குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக மாறிவிட்டது. புறப்பட்டு வரும் வழியில் கூடுதலாக படுகளம் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதோடு முடிந்து விடுகிறது. ஆனால், மாசி மாதத் திருவிழாவின்போது வீட்டுக்கு ஒருவரேனும் சென்று நெய்விளக்குப் போட்டுவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.

அண்ணன்மார் சாமி கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் அந்த பத்து நாட்களும் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இலட்சக்கணக்கில் கூடும் மக்கள் கூட்டத்தால் இப்பகுதியே திமிலோகப்படுகிறது.

வீரப்பூர் கோவிலில் மாசித் திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறுகிறது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடிவருவார்கள். முதல் நாள் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 

பொன்னர் - சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வேட்டுவர் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் - சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வைப் போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் நடைபெறுகிறது.  தொப்பம்பட்டியில் படுகளம் சாய்ந்தவர்களை பொன்னர் - சங்கர் உடன்பிறந்த தங்கை அருக்கானித் தங்காள் புனித நீர் ஊற்றி உயிர்த்து எழுப்பும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா தொடங்குகிறது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா எட்டாம் நாள் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் குதிரை வாகனத்தில் அமர்ந்து பொன்னர் முன்னே செல்கிறார். பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் குதிரை மற்றும் யானை வாகனங்களைச் சுமந்து வருகிறார்கள். பொன்னர் - சங்கரின் தங்கை அருக்காணித் தங்காள் கையில் தீர்த்தக் குடத்துடன் வேடபரி நிகழ்வில் வலம் வருகிறாள்.

மாலை 5.30 மணியளவில் வீரப்பூருக்கும்-அணியாப்பூருக்கும் இடையே உள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் பெரியக்காண்டியம்மனும், அருக்காணித் தங்காளும் ஓய்வெடுக்க, குதிரை வாகனத்தில் அமர்ந்து அணியாப்பூர் செல்லும் பொன்னர் மாலை 6.30 மணியளவில் அம்பு போட்டு இளைப்பாற்றி மண்டபம் திரும்பவதுடன் வேடபரி திருவிழா நிறைவு பெறுகிறது. வேடபரித் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, தேரோட்ட திருவிழா ஒன்பதாம் நாள் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. பத்தாம் நாள்  மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது.

குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்கள்தான் மாசித் திருவிழாவிற்கு போய்வர வேண்டுமென்பதில்லை. நீங்கள்கூட வீரப்பூர் திருவிழாவிற்கு ஒருமுறை நீங்கள் போய் வந்தால் பின்னர் தொடர்ந்து வருடாவருடம் போய் வருவீர்கள்.


ஆய்வு மற்றும் தரவுகள்

ஒரு மக்கள் குழுவினரிடையே வழங்கி வரும் அல்லது வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழைய மரபுக்கதைகள், தொன்மங்கள், பழமொழிகள், புதிர்கள், நகைப்புகள் முதலான இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கொங்கு நாட்டுப் பகுதியில் பல நாட்டுப்புற இலக்கியங்கள் பல இடங்களில் மலர்ந்துள்ளன. அண்ணமார் சாமி கதை இவற்றுள் முன்னோடியானது. கிட்டத்தட்ட 400 - 450 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில்) கரூர் பகுதிகளில் வரலாற்றுக் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது.

வாய்மொழி மரபு வழியே பல காலம் வழங்கி வந்த அண்ணமார் சாமி கதையையும், கதைநிகழ்ச்சிகளையும், சம்பவத் தொடர்களையும் பின்னால் எழுதப்பட்ட நூல்கள் சற்று செம்மைப்படுத்தின. அண்ணமார் சாமி கதை பற்றி பற்பல புத்தகங்கள் உள்ளன என்றாலும் பிச்சை பட்டரின் "அண்ணமார் சுவாமி கதை", பெரிய எழுத்து கதைப் புத்தகமாக பாதிப்பிக்கப்பட்ட  பி.ஏ. பழனிசாமி புலவரின் "பொன்னழகரென்னும் கள்ளழகர் அம்மானை," "வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்" மற்றும் எரிசினம்பட்டி இராமசாமியின்  "குன்றுடையான் வமிச வரலாறு" ஆகிய வரலாற்று நூல்களே உண்மையான கதையைக் கூறுவதாக நம்பப்படுகிறது. கவிஞர் சக்திக்கனல் (இயற்பெயர் கல்வெட்டுப்பாளையம் பெரியசாமி பழனிசாமி) அவர்கள் பதிப்பித்த பிச்சன் கவியின் “அண்ணன்மார் சாமி கதை” சிறு மரபில் (Little Tradition) தோன்றிய காப்பியம்.

அண்ணமார் சாமி கதையைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மானுடவியல் அறிஞரான (Anthropologist) ப்ரெண்டா பெக்  (Brenda E.F. Beck) என்ற அமெரிக்க (from University of British Columbia), / கனடா நாட்டுப்  பெண்மணி (now living in Toronto) இது ஒரு நாட்டார் காப்பியம் என்று மதிப்பிடுகிறார்.  இவர் வீரப்பூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை அலைந்து திரிந்து தம் சொந்த செலவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் சேகரித்த ஆவணங்கள் 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே  இவ்வாய்வாளர் அண்ணன்மார் சாமி கதையை தமிழில் முதல் நாட்டார் காப்பியம் என்று  அடையாளப்படுத்தியுள்ள மதிப்பீடு மிகவும் பொருத்தமானதாகும்.

பொன்னர்- சங்கர் கதையை நாடகமாக (தெருக்கூத்து வடிவம் - பாடல், அதற்கான விளக்கமாக கொஞ்சம் வசனம்) நடித்துவரும் குழுக்கள் ஏராளம் உள்ளன. வீரப்பூர் திருவிழாக் காலங்களில் குறிப்பாக படுகளம் அன்றும் வேடபரித் திருநாளன்று இரவும் சுமார் நூறு நாடகக் குழுக்களேனும் ஆங்காங்கே மேடை போட்டு அண்ணன்மார் கதையை நாடகமாக நடித்து வரும் களமாக இன்றளவும் உள்ளது. குலதெய்வ வழிபாடு, வீரப்போர் நடந்த இடம் என்பதையெல்லாம் தாண்டி முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்க்கும் இடமாகவும் வீரப்பூர் உள்ளதென்றால் அது மிகையல்ல.

படிப்பினை (Lessons Learned)

அண்ணன்மார் சுவாமி கதை அல்லது அண்ணன்மார் சாமி கதை கொங்கு நாட்டின் தேசிய இலக்கியமாகக் கருதப்படுகிறது (national literature of Kongu Nadu).
முற்பகுதிக் கதையோ இரு சகோதரர்களின் அண்ணன்மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சியார் ஆகியோருடைய துன்பம் நிறைந்த வாழ்க்கையையும், இவர்களுக்குப் ஒறம்பற பங்காளிகளே இடையூறாக விளங்கியதையும் சித்தரிக்கின்றது. பிற்பகுதிக் கதை கொங்கு வெள்ளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது.

கொங்கு நாட்டு வெள்ளாளர்களின் சமூக அமைப்பு, பண்பாடு, வெகுளித்தனம் (வெள்ளை உள்ளம்), உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு போன்ற அம்சங்களை அண்ணன்மார் சாமி கதை தெளிவாக விளக்குகின்றது.

"சோளம் குத்திப் போட்டுக் கஞ்சி குடித்தல், ஒன்றும் அறியாதானை வெள்ளை மனத்தானை, ‘மங்கு மசையா’ எனல், முறைப்பெண்ணை மணப்பதில் மகிழ்ச்சி, குடி கெடுப்பானைக் கூழை எனல், கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல், கொங்கணக் கம்பளியும் போட்டுக் கொப்பிகட்டிய கவையும் ஊன்றி நடத்தல், தமுக்கடித்துச் செய்தியை ஊரார்க்கு அறிவித்தல், அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும் என்ற  பழமொழி, ‘அருள்வரப் பெறுதலைச் சன்னத்தம்’ ஆதல் எனல், இணுங்குச் சோளம் குத்தல், மணியம் கணக்குப்பார்த்தல், அஞ்சுமணிக் கயிற்றால் அடித்தல், குடைசீத்தை முள்ளைக் கோழியின் காலில் கட்டுதல், செம்பூலாஞ்செடி வனத்தில் புலி வாழ்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், தெய்வங்களுக்குப் பூசைபோடுதல், குதிரையைப்பலவாறு அலங்கரித்தல், கனவு கண்டு சொல்லுதல், உடன் பிறப்பை எண்ண ஓரானைப்பலம் வரும் எனல், பிரம்புக் கூடையில் சோறு இடல், பல்லாங்குழியாடுதல், மாவிலங்க மரத்தில் மரநாழி கடைதல், அதன் மேல் பொன்முலாம் பூசுதல், ஊணான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்து சகுனம் காணுதல், தாம்பூலம் தரித்தல் எனப் பற்பல செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன."

பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இந்த வீரப்பூர் மண் வீரம் விளைந்த மண். பாசத்தைச் சொல்லும் புண்ணிய பூமி. நம்பிக்கையைப் போற்றி வளர்த்த மனிதர்கள் வாழ்ந்த தலம்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக சரித்திரத்தின் சாட்சி…!

மேற்கோள்கள்

  1. அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்.  (download from Scribd) http://www.scribd.com/doc/28974760/%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0
  2. அண்ணன்மார் சுவாமி கதை. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?pno=1&book_id=237
  3. அண்ணமார் சுவாமி வீரவரலாறு. https://www.facebook.com/truegodannamar
  4. அண்ணமார் கதை எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் தொகுப்பு) உடுக்கடிக்கதை - பூளவாடி பொன்னுசாமி http://annamarstory.blogspot.in/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html
  5. பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை http://vettuvagoundersangam.blogspot.in/2011_04_01_archive.html
  6. எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு) - Annamar swami kathai (Pichai Pattan ) full download link http://www.esnips.com/web/Annamarswamikathai.
  7. Annanmar Story. Sathy R. Ponnuswamy. Kongu.Us 
Youtube
THF அண்ணன்மார் கதை (கொங்குநாடு) by Subashini Tremmel


Ponnar Sankar Story Premkumar Balasubramaniam

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...