நன்றி: தி இந்து ஜனவரி 13, 2011 |
பேராசிரியர் இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன்
டாக்டர். இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன், அமெரிக்க நாட்டில் மாஸாசூஸட்ஸில் அமைந்துள்ள மௌண்ட் ஹோல்யோக் கல்லூரியில் டேவிட் பி. ட்ரூமேன் ஆசியத் துறை பேராசிரியராக 1982 லிருந்து பணியாற்றி வருகிறார். இவர் டில்லியில் பிறந்து மும்பாயில் வளர்ந்த இந்தத் தமிழ் பெண்மணி ரூய்யா கல்லூரியில் 1971 இல் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. ஹானர்ஸ்; தொடர்ந்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் எம்.ஏ. (1974) இந்திய இயல் மற்றும் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம் (1976) பெற்றுள்ளார். உலக அளவில் சிறந்த சம்ஸ்கிருத அறிஞரும் ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர். டேனியல் இங்கால்ஸிடம் சம்ஸ்கிருத இலக்கியம் பயின்றுள்ளார். தமிழ், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், ஃப்ரெஞ்சு மற்றும் கிரேக்கம் ஆகிய 12 மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர்.
டாக்டர். இந்திராவின் தந்தை திரு. விஸ்வநாதன் ஜெர்மன் மொழியில் டாக்டர் பட்டம் பெற்றவர். தாயார் திருமதி. ஜெயா. இவருக்கு இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி. இவருடைய தந்தை வழித் தாத்தா திரு. வி.ராமசாமி அய்யர் சென்னையில் பிரபல வக்கீல்; தாய்வழித் தாத்தா வெங்கடரமணன் சம்ஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்.
பள்ளியில் கல்வி பயிலும்போதே ஒரு கட்டுரைப் போட்டியில் வென்று அமெரிக்காவிற்குப் பரிமாற்ற மாணவராகச் சென்றார். அப்போது மாஸாசூஸட்ஸில் வாரன் தம்பதியினர் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிய அனுபவம் இனிமையானது என்கிறார். அமெரிக்கா இவரை ஈர்த்தது. பின்பு ஒரு அமெரிக்கரையே திருமணம் செய்துகொண்டு இந்நாட்டிலேயே குடியேறிவிட்டார். இவருடைய குடும்பம் இனிமையானது. டாக்டர். இந்திராவின் கணவர் டாக்டர் மார்க் பீட்டர்சன் ஹோல்யோக் கல்லூரியின் இயற்பியல் மற்றும் கணிதப் பேராசிரியர். மகள் மாயா. கர்நாடக சங்கீத ஆர்வலரான பேராசிரியை இந்திரா தன் மகள் மாயாவுக்கு எந்த மொழியில் தாலாட்டு பாடியிருப்பார்? ஆச்சர்யம் ஆனால் உண்மை பதினாறு மொழிகளில் தாலாட்டுப் பாடியுள்ளாராம்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி பெருவுடையார் கோவிலுக்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும். சரபோஜி தஞ்சை மன்னர் தூளையாவின் வளர்ப்பு மகனாவார். எனவே சரபோஜிக்கு தஞ்சையின் அரியணை மேல் உள்ள உரிமை அமர்சிங் என்பவரால் கேள்விக் குறியாக்கப்பட்டது. இதனால் சரபோஜிக்கு தன் உரிமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்படி நிலைநாட்டினார் என்றால் தஞ்சை பெரிய கோவிலில் தன் பங்களிப்புகளைக் குறிப்பிட்டுச் சொல்லும்படி செய்து முத்திரை பதித்தார். இரண்டாம் சரபோஜி ஸ்வார்ட்ஸ் என்னும் கத்தோலிக்கப் பாதிரியாரால் கல்வி புகட்டப்பட்டவர். இதற்கு பிரதியுபகாரமாக இவர் கிறித்துவ மதத்தைத் தழுவுவார் என்ற எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கினார்.
சரி இது பற்றி இந்திரா பீட்டர்சனின் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றனவென்று தெரிந்து கொள்வோமா? இவரால் பெரியகோவிலில் 108 சிவலிங்கங்கள் நிறுவப்பட்டன. மேலும் பற்பல கொடைகளையும் அளித்துள்ளார். சரபோஜி தஞ்சை பெரியகோவிலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் இவரை ஒரு சைவர் என்றும், சைவ மரபுப்படி அரசாட்சி நடத்த விழைந்த ஒரு மன்னர் என்றும் உறுதி செய்கின்றன.
எனவே தஞ்சை மண் இவரை ஈர்த்தது. தஞ்சைப்பகுதியில் அமைந்துள்ள பல தேவாரத்தலங்களுக்கு நேரில் சென்று களப்பணி செய்தவர். இவர் மேற்கொண்ட தேவாரம் பற்றிய ஆய்வுகளுக்காகவும், தேவரப்பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காகவும் இவர் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் மதிக்கப்படுபவர். 'Poems to Siva: The Hymns of the Tamil Saints' (Princeton, 1989) தலைப்பில் இவரது மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் இந்திரா பீட்டர்சனுக்கிருந்த ஈடுபாடு 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரையிலான மராத்தியர்கால தமிழ் சிற்றிலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தூண்டியுள்ளது. குறவஞ்சி, விறலிவிடு தூது, பள்ளு மற்றும் நொண்டிச்சிந்து போன்ற சிற்றிலக்கியங்கள் இந்தக்காலத்தில் மிகுதியாக இயற்றப்பட்டுள்ளன.
குறவஞ்சி ஒரு தமிழ் பாடல் நாடக (opera) இலக்கிய வடிவமாகும். குறவஞ்சி என்பது குற+வஞ்சி என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். குற என்றால் குறவர் குலத்தில் பிறந்த பெண்; வஞ்சி என்றால் வஞ்சிக்கொடி போன்ற பெண். குறவஞ்சி என்றால் குறவர் குலத்தில் பிறந்த (குறத்தி) வஞ்சிக்கொடி போன்ற பெண். குறத்தி குறி சொல்லுதல், குறத்தியின் நடிப்பு, குறி வகைகள், குறத்தி குறவனுடன் மேற்கொள்ளும் உரையாடல்கள் போன்ற சுவை மிகுந்த அம்சங்கள் இடம் பெறுவதால் இந்த சிற்றிலக்கிய வகை குறவஞ்சி என்ற பெயரால் அறியப்படுகிறது. குறவஞ்சி இலக்கியங்கள் தொடக்கத்தில் செல்வந்தார்களுக்காக இயற்றப்பட்டுள்ளன. எனினும் இந்த இலக்கிய வடிவம் நாட்டுப்புறவியலின் அம்சங்களைக் கொண்டது. தலைவன் தலைவி இடையே நிலவும் காதல், குறத்தியின் வருகை; குறிசொல்லி பரிசுபெறும் மரபு போன்றவை குறவஞ்சியின் உள்ளடக்கம் ஆகும். குறவஞ்சியில் பல வகைகள் உண்டு:
- சரபேந்திர பூபாலக் குறவஞ்சி: சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட குறவஞ்சி நூல். ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். சரபோஜி மராத்தி மொழியில் இயற்றிய தேவேந்திரக் குறவஞ்சி என்ற நூலில் இடம்பெறும் குறத்தி பேசுவது இந்தியாவின் பூகோளம் பற்றியாம். இந்தியாவில் உள்ள மலைகள், ஆறுகள், மற்ற பிற இயற்கை வளங்கள் குறித்துச் சொல்கிறாள். இவள் வானமார்க்கமாக வந்தபோது சூரிய, சந்திரர்கள் உள்ளிட்ட கோள்களையும், உலகின் கண்டங்களையும் பார்த்ததாகச் சொல்கிறாள்.
- தியாகேசர் குறவஞ்சி: இந்த குறவஞ்சி சிற்றிலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் திருவாரூர் கோவிலின் மூலவர் தியாகராசர் தலைவி இறைவி கமலாம்பிகை ஆவர். ஷாஜி மன்னர் அவையில் அரங்கேறியது.
- பெத்தலகேம் குறவஞ்சி: தலைவன் இயேசுநாதர். தலைவி தேவாலயம். தேவமோகினி என்னும்‘விசுவாசக் குறவஞ்சி' குறிகூறுதல் என்பது தீர்க்க தரிசனம் பற்றியது. ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார். இவர் சரபோஜி மன்னருடன் படித்தவர் . காலம் 18-ஆம் நூற்றாண்டு.
இவருடைய குறவஞ்சி இலக்கியம் பற்றி 'The Drama of the Kuravanji Fortune-teller: Land, Landscape, and Social Relations in an 18th Century Genre' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரை 'Tamil Geographies: Cultural Constructions of Space and Place in South India' (2007) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
பாரவி கி.பி. 6ம் நூற்றாண்டில் பல்லவர் அரசவையில் சம்ஸ்கிருதப் புலவராக விளங்கினார். இவர் இயற்றிய 'கிராதார்ஜுனியம்' சிறந்த சம்ஸ்கிருத காவியம். மகாபாரதத்தின் கிளைக்கதை இது. யுதிஷ்டிரரின் வேண்டுகோளை ஏற்று அர்ஜுனன் சிவபெருமானை நோக்கி வரம் வேண்டி தவமியற்றுகிறான். சிவன் ஒரு வேடனாக அர்ஜுனன் முன் வந்து, அவன் மீது ஒரு காட்டுப்பன்றியை ஏவி விடுகிறார். பன்றியை அர்ஜுனன் அம்பெய்து கொல்கிறான். வேடன் அர்ஜூனனுடன் மல்யுத்தம் செய்கிறார். சிவன் காலை அர்ஜுனன் தொட்டு தூக்க முனைகிறான். ஒரு சிவனடியாரான அர்ஜுனன் தன் காலைத் தொட்டதனால் சிவன் மகிழ்ந்து அவன் முன் காட்சியளித்தார். அர்ஜுனன் வேண்டியபடி பாசுபதாஸ்திரத்தை அளித்தார். இது கதை. இந்த சம்ஸ்கிருத காவியத்தை 'Design and Rhetoric in a Sanskrit Court Epic' என்னும் தலைப்பில் இந்திரா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.. கொத்தமங்கலம் சுப்பு எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த 'தில்லானா மோகனாம்பாள்' என்னும் தமிழ் நாவல் இந்திராவை மிகவும் கவர்ந்த நாவலாம். தற்சமயம் இந்நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார்.
1990 இல், 40 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹம்போல்ட் ஃபெலொஷிப் (Fellowship) விருது; 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆராய்ச்சியாளருக்கான மெரிபெத் கேமரோன் விருது; 2008-2011 வரை, '40 ஆம் ஆண்டு கல்லூரி ஆண்டுவிழா பேராசிரியர் விருது; என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார் இவர்.
1995ல் தஞ்சையில் நடந்த உலகத் தமிழ்மாநாட்டுக்குத் தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கலந்துகொண்டார். இவர், மேக்ஸ்முல்லர் பவன், நேரு நினைவு அருங்காட்சியகம், மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ், ரோஜா முத்தையா நூலகம் போன்ற நிறுவனங்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்று பல தலைப்புகளில் சிறப்புரையாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
- Indira Viswanathan Peterson | Mount Holyoke College
- The Maratha connection. Suganthy Krishnamachari The Hindu. January 13, 2011
- இந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன் (நேர்காணல்). தென்றல் (தமிழ் ஆன்லைன்) தொகுதி 8; எண் 11. அக்டோபர் 2008
No comments:
Post a Comment