Thursday, October 30, 2014

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை மீட்டு வருமா?

picture courtesy: nripulse.com
கருப்புப் பணம் என்றால் என்ன? அரசு இயங்க வரிப்பணம் அவசியம். இந்திய அரசு மக்களிடம் இருந்து வாங்கிய வரிப்பணத்தில் இயங்குகிறது. கருப்புப் பணம் (Black Money) என்பது இந்தியாவில் கருப்புச் சந்தைகளில் (Black Market) சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம். இதற்கான வருமான வரி (Income Tax) மற்றும் இதர வரிகள் இதுவரை கட்டப்படவில்லை என்றால் அது கணக்கில் வராத பணம். இவ்வாறு வரியே கட்டாத பணத்தை, கருப்பு பணம் என்று சொல்கிறோம். எந்தெந்த தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதாவது தடை செய்யப்பட்ட தொழிலைச் செய்து சம்பாதித்த பணமும் கருப்பு பணமாகிறது.

வரி கட்டாமலும், முறைகேடாகவும் சம்பாதித்த கருப்புப் பணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புத் தொகையாக (deposits) வைத்துள்ளார்கள்.

அது சரி! இந்தியர்கள் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் ஏன் வைப்புத் தொகையாக வைக்கிறார்கள்?  வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. இங்கு வரியே கட்டாத கருப்புப் பணத்தைக் கூட வைப்புத் தொகையாக வைத்திருந்தாலும், இவர்களின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடாமல் இரகசியமாகவே வைத்திருப்பார்கள். எனவே சுவிட்சர்லாந்து கருப்புப் பணத்தைப் பதுக்க பாதுகாப்பான நாடு  என்று உலக அளவில் உள்ள வரி ஏய்ப்பவர்கள் நம்புகிறார்கள்.

Monday, October 27, 2014

ஜடாயு வதம் கூடியாட்டம்: ஸ்மாரகா கலாபீடம் சென்னை மஹாலிங்கபுரத்தில் நிகழ்த்திய நாட்டிய நாடகம்

ஜடாயு வதம் கூடியாட்டம்
இராவணனாக கிருஷ்ணகுமார், துறைத் தலைவர், கூடியாட்டம் நாடகத் துறை, ஸ்ரீ சஙகரசார்யா சமஸ்கிருதம் யுனிவர்சிட்டி
ஜடாயு வேடம் பைங்குளம் நாராயண சாக்கியார் 
பைங்குளம் நாராயண சாக்கியார்   கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம்  பற்றியும் சிற்றுறை நிகழ்த்தினார்.
பேஸ்புக்கில் ஒரு நாட்டிய நாடக நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு அது.  'ஜடாயுவாதம்', என்ற கூடியாட்டம் நாட்டிய நாடகம் 2014, ஜூலை 26 ஆம் தேதி உத்தரியம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை மஹாலிங்கபுரம், நம்பர் 18 சார் மாதவன் நாயர் ரோடில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கதகளி.. மோகினி ஆட்டம், தெய்யம், துள்ளல் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன்.  கூடியாட்டம் என்றால் அதுவரை என்னவென்றே தெரியாது. இது சக்திபத்ரா எழுதிய ஆச்சர்யசூடாமணி என்ற நாட்டிய நாடகத்தைத் தழுவியது என்று தெரிந்தது. ஜடாயு வாதம் நாட்டிய நாடகம் பைங்குளம்  ராம சாக்கியர் ஸ்மாரகா கலாபீடம் சார்பில் அரங்கேற்றப்படுகிறது. ராம சாக்கியரின் மைத்துனர் பைங்குளம் நாராயண சாக்கியார் ஒரு சிறந்த நாட்டிய நாடகக் கலைஞர்.

மாலை ஆறு மணி அளவில் நாட்டிய நாடகம் தொடங்கும் முன் பைங்குளம் நாராயண சாக்கியார்   கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம்  பற்றியும் மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் ஒரு சிற்றுறை நிகழ்த்தினார். பலருக்கு இது மிகவும் உபயோகமாயிருந்திருக்கும். மலையாளிகளே கூடியாட்டம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருந்தார்கள். நாராயண சாக்கியார் 'இந்த சமஸ்கிருத நாட்டிய நாடக வடிவம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது' என்றார்.   இந்திய நாட்டிய நாடக அரங்கம் குறித்த சாஸ்திரிய விதிமுறைகள்  பற்றியெல்லாம்  பழம்பெரும் நாடகக்கலை எழுத்தாளர் 'பாஷா' என்ற நாட்டிய சாஸ்திர நூலை இயற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.  இந்தக் கூடியாட்டம் சமஸ்கிருத நாட்டிய நாடகம் பாஷா நாட்டிய சாஸ்திர விதிகளின் படியே எழுதி நடிக்கப்படுகின்றன என்கிறார் நாராயண சாக்கியார் .

கூடியாட்டம் என்பது 1. நாட்டியம் (நடிப்பு மற்றும் முகபாவனை), 2. நிருத்தம் அல்லது ஆட்டம், 3. கீதம் அல்லது பாட்டு மற்றும் 4. வாத்தியம் (தோற்கருவிகள் மூலம் இசைக்கப்படும் இசை) ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாகும். 

Saturday, October 25, 2014

லுமோசிட்டி: ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் மனப்பயிற்சிகள் அறிவுத்திறனை அதிகரிக்க உதவுமா?

 

லுமோசிட்டி பற்றி சிறப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அறிவாற்றல் பயிற்சி குறித்த வலைத்தளம் (Website).  சரி லுமோசிடியில் அப்படி என்னதான் இருக்கிறது? லுமோசிட்டி ஒருவருக்குத் தேவையான அறிவுத்திறன் குறித்து பயிற்சியளிக்கும் (cognitive-training) விளையாட்டுக்களின் தொகுப்பு (series of games)  மற்றும் மனப்பயிற்சிகள் (mental exercises).

லுமோசிட்டி, கலிபோர்னியா மாநிலம், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஒரு இணையதள நிகழ்நிலை (ஆன்லைன் online) அறிவாற்றல் திறன் பயிற்சியளிக்கும் (cognitive-training) நரம்பியல் ஆய்வு நிறுவனம் (neuro science research lab.) ஆகும். குணால் சர்கார் (Kunal Sarkar), மைக்கேல் ஸ்கான்லோன் (Michael Scanlon) மற்றும் டேவிட் ட்ரெஷர் (David Drescher) என்ற மூவர் கூட்டணி லுமோஸ் லாப் என்ற லுமோசிட்டி நிறுவனத்தை 2005 ஆம் ஆண்டு துவக்கியது; லுமோசிட்டி.காம் வலைத்தளம் 2007 முதல் செயல்படுகிறது; லுமோசிட்டி மொபைல் அப்ளிகேஷன்கள் பத்து முதல் இருபத்தைந்து மில்லியன் சந்தாதார்களால் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்கிறது புள்ளி விபரம்.

Thursday, October 23, 2014

தஞ்சை பெரிய கோவில் அகழிகளைப் புதுப்பிக்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள்


தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு நன்றி: படங்கள் தி இந்து
தஞ்சை கலெக்டர் படகு சவாரியைத் துவக்கினார் நன்றி: படங்கள் தி இந்து
புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. தமிழகம்,   வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூருக்கு வந்து செல்கின்றனர்.

இந்தப் பதிவு சுற்றுலா புள்ளிவிவரங்கள் பற்றியில்லை.

தஞ்சை நகரில், 'அடிப்படை வசதிகள் இல்லை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் இல்லை' என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற இக்கோவிலைச் சுற்றி  நான்குபுறத்திலும் அகழி மற்றும் கோட்டைச்சுவர்கள் உள்ளன. தஞ்சை நகரை சுற்றியும் புரதான அகழிகள் உள்ளன. ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பே நாயக்க மன்னர்களின் ஆட்சியில் தஞ்சை நகரில் பெய்யும் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை வடிய வைப்பதற்கும், மழைநீரை சேமிக்கவும், கோட்டையை   எதிரிப் படைகளிடமிருந்த் காக்கவும் இந்த அகழிகள் தோண்டப்பட்டனவாம். தஞ்சை மன்னர்கள் நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தில் அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள் ஆதலால், தஞ்சை அகழிகளைச் சிறந்த முறையில் திட்டமிட்டு உருவாக்கி அமைத்துள்ளார்கள்.

இது வரலாறு. வரலாறு பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அகழிகள் மற்றும் மதில்களின் தற்போதைய நிலமை என்ன?

Monday, October 20, 2014

மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு


மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு



தமிழர்கள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாட்டில் மூன்று விதமான வழிபாடுகளைக் காண இயலும். ஊர்க் காவல் தெய்வ வழிபாடு, கிராம தெய்வம் அல்லது கிராம தேவதை வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகள் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபு எனலாம். குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர்.

பெண் தெய்வ வழிபாடுகள்

தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகுந்த சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் மற்றும் கன்னித் தெய்வங்கள் ஆகிய பெண்தெய்வங்களே மிகுதி எனலாம். இறந்து போன கன்னிப்பெண்கள், பத்தினிப்பெண்கள், மானம் காப்பதற்காக உயிரைத் துறந்தவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாயினர். உதாரணம் - அங்காளம்மன், இசக்கி, உச்சிமாகாளி, எல்லையம்மன், கண்டியம்மன், காளியம்மன், சீலைக்காரியம்மன், சோலையம்மன், திரௌபதையம்மன், பேச்சியம்மன், பேராச்சி, மந்தையம்மன், முத்தாலம்மன், வீருசின்னம்மாள், நாச்சியம்மன், ராக்காச்சி, ஜக்கம்மா போன்றோர்.

காவல் தெய்வ வழிபாடுகள்

இது போல பல குடும்பங்கள் அல்லது சமூகம் அல்லது நாடு விளங்க தங்கள் இன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆண்கள், போரில் மாண்டவர்கள், தவறாகத் தண்டிக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் எனத் தெரிந்துகொண்டு மரியாதை செய்யப்படுபவர்கள் எல்லாம்   காவல் தெய்வங்களாக ஊருக்கு வெளியே வைத்து வணங்கப்படுகிறார்கள். உதாரணம் - ஐயனார், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்கள். சில ஆண் தெய்வங்கள் பரவலாக வணங்கப்படுவதால் இவை சில முதன்மைத் தெய்வங்களாயின. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வணங்கப்படும் பல ஆண் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்களாயின.

மாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு

மாசி பெரியசாமி ஒரு துணைமை (கிராம) காவல் தெய்வம். இவருக்கு சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக் குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது.  மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கானகம்பீரமாக காட்சியளிக்கிறார்.

Wednesday, October 15, 2014

ரேடியோ கார்பன் டேட்டிங் சோதனை முறைகள் தொன்மப் பொருட்களின் வயதினை மெய்ப்பிக்க உதவுகின்றனவா?

Picture Courtesy: Radiocarbon Dating. Science Courseware

தமிழகத்தில் நடந்த, அகழாய்வுகளில், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட  வரலாற்றுச் சிறப்பு மிக்க அகழ்வாய்வுகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், சிந்து-சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன.

இந்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டம் 2004 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் (திருநெல்வேலி சமீபம்) மேற்கொண்ட அகழாய்வில்  2800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழியில் அடைத்து புதைக்கப்பட்ட 12 மனித எலும்புக்கூடுகள் சற்றும் கலையாத நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் தமிழ் நாட்டில் நிலவிய பண்டைய பெருங்கற்கால வரலாறு மற்றும் தமிழ் கலாசாரத்தை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்க உதவும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருகின்றனர்.  பெருங்கற்கால நாகரிகமே தென்னிந்தியாவின் மிகவும் பழைமையான நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். என்றாலும் இவ்வகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் பெருங்கற்காலத்திற்கும் முந்தையது எனலாம். (தி இந்து (ஆங்கிலம்) ஏப்ரல் 3, 2005)

2010-ஆம் ஆண்டு நடந்த பொருந்தல் அகழாய்வில் (பழநி அருகில் உள்ள ஊர்) ஒரு கல்லறையைத் தோண்டும்போது அங்கு இருந்த பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் கிடைத்‌திருக்கிறது - முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைத்‌திருக்கிறது. தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவீன முறையான ஆக்ஸிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கி.மு. 490 என்று வந்தது. அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பியபோது இந்தக் காலக் கணிப்பு வந்தது அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.

கொடுமணல் ஆய்வில் 10 செ.மீ., ஆழத்தில் எடுத்த மாதிரியினை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை அரிசோனா பல்கலைக் கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகின்றனவா என்று பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்தன. அதனால் இதன் காலம் என்பது கி.மு. 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.  (புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன், ‘புதிய தலைமுறை’ ஆசிரியர் மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து...)

தொல்லியலாளர்கள் அகழ்வாயுவின் போது பூமியில் புதையுண்ட எலும்புக் கூடுகள், நெல், இரும்புப் பொருட்கள், மணிக்கற்கள், வளையல் துண்டுகள், மட்பாண்ட ஒடுகள், சுட்ட களிமண் பொம்மைகள் போன்ற பொருட்களை அகழ்ந்தெடுக்கிறார்கள். தொல்லியல் அறிஞர்கள் அகழ்ந்தெடுத்த தொன்மப் பொருட்களின் காலம் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்கிறார்கள்? என்னென்ன சோதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன? இச்சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? இப்பதிவு ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் தொன்மப் பொருட்களின் காலம் மெய்ப்பிக்கப்படுவது பற்றியது.
இவ்வாறு புதையுண்ட கரிமத் தொல்பொருள்களின் (organic artifacts) வயதினை மெய்ப்பிக்கப் பயன்படுத்தப்படும் சோதனை ரேடியோ கார்பன் டேட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இம்முறையைப் பயன்படுத்தி கனிமத் தொல்பொருள்களின் (inorganic artifacts) வயதை நிர்ணயம் செய்ய இயலாது என்கிறார்கள். ஏன் முடியாது?

Sunday, October 12, 2014

ஜெயலலிதா விடுதலைக்காக மதுரையை ஸ்தம்பிக்க வைத்த காவடி திருவிழா

பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு
வேல் குத்துதுதல் அமைச்சர் ஊர்வலம்
நன்றி: படங்கள்: பா.காளிமுத்து, ஈ.ஜெ. நந்தகுமார் விகடன் செய்திகள்

அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் போன்றவர்களை பல நகரின் பொது இடங்களில் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினந்தோறும் அம்மாவுக்காக கட்அவுட்டுகள், வால்போஸ்டர்கள், கட்சிக்கொடிகள், ஒலிபெருக்கிகள், கொடிகளுடன் இங்கும் அங்கும் அலையும் தொண்டர்கள் நிறைந்த வாகனங்கள், பாதுகாப்புக்காக போலீஸ் கூட்டம், டிராபிக் ஜாம் எல்லாம் சகஜமாகிவிட்டது. வெள்ளை வேட்டிகள் ஆங்காங்கே உண்ணாவிரதப் போராட்டப் பந்தல்களில் அமர்ந்தபடி முழங்குகிறார்கள்.

தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் பல லட்சக்கணக்கானோர்களால் பிரார்த்தனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்று வருகிறது.  லட்சக்கணக்கான பொதுமக்களும் போராட்டம், மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை அளித்து சிறப்பு வழிபாடுவதாக செய்தித்தாள்களில் தினமும் செய்திகள் வருகின்றன.

கும்மிடிப்பூண்டி அடுத்த அரியத்துறையில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு மரகதவள்ளி சமேத வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க-வினர் அம்மா விடுதலை பெறக் கோரி சிறப்பு யாகம் நடத்தினர்.

மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இவர்கள் அன்றாடம் நடத்தி வரும் பல போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாள்தோறும் ஸ்தம்பிக்கும் அவலம் தொடர்கதையாகி வரவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்பினரும் குரல் எழுப்ப ஆரம்பித்ததையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இனி போராட்டங்கள் நடத்த வேண்டாமென்று அறிவித்தார். 'போராட்டம் கூடாது, அமைதி காப்பதே அம்மாவுக்கு செலுத்தும் உண்மையான அன்பு' என்றார்.

இதற்குப் பிறகும் மக்களிடம் இவர்களது செல்வாக்கை காட்டுவதற்காகவும், முக்கியமாக பெங்களூருவில் சிறையிலிருக்கும் ஜெயலலிதா,  இவர்களுடைய விசுவாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் அ.தி.மு.க. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் பல நூதனமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

அமைச்சர் செல்லூர் ராஜு நடத்திய 'காவடி திருவிழா' இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போன்றது என்று மீடியாக்கள் சொல்கின்றன. இவர் நடத்திய நூதனத் திருவிழாவில் பால்குடம், வேல்குத்துத்தல், பறவை காவடி என்று பல அய்ட்டம்களை ஒருங்கிணைத்து மக்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என்கிறார்கள். மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வைகையாற்றில் பல நூறு பெண்களை வாகனங்களில் ஏற்றி வந்து, ஒரு சில்வர் குடம், பாக்கெட் பால், தேங்காய் எல்லாம் கொடுத்து பால்காவடி ஊர்வலம் நடத்தியதுடன்  ஆளுக்கு நூறு ரூபாயும் கொடுத்தாராம்.. மொட்டை போட்டால் (மக்களுக்குத்தான்) 500 ரூபாய், வேல் குத்திக் கொள்பவர்களுக்கு 2000 ரூபாய், பறவை காவடி எடுத்தால் 10000 ரூபாய் என்று ரேட் போட்டு பணம் கொடுத்தார்களாம்.

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக்'

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக்' 

தேவை ஒரு கேமெரா (Camera). டி.எஸ்.எல்.ஆர். (D.S.L.R) அல்லது எஸ்.எல்.ஆர். (S.L.R.) அல்லது மொபைல் கேமெரா (Mobile Camera) இவற்றில் எதேனும்  ஒன்று. கேமெரா இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள்  சென்னை ஃ போட்டோ வாக்கில் இணைந்து கொள்ளலாம். மாதத்தில் இரண்டு முறை - இரண்டாவது வாரம் மற்றும் நான்காவது வாரம். சென்னையில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்து தகவல்கள் -  ஃ போட்டோ வாக் தேதி, நேரம், சந்திக்கும் இடம், செல்ல வேண்டிய ரூட் (ரூட் மேப்புடன்)  ஃ பேஸ்புக் குரூப்பில் வெளியிடுவார்கள். இளைஞர்கள், இளைஞிகள், சீனியர் சிட்டிசன்ஸ் உட்பட அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஹாய் சொல்லி கைகுலுக்கிய பின்பு  சென்னை சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டு புகைப்படம் எடுப்பது வே(வா)டிக்கை.

இவ்வாறு நங்கள் சென்ற 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி  சென்று வந்த இடம் வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவன் கோவில். வேளச்சேரி பண்டைய சோழநாட்டின் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், கோட்டுர்புரம் வட்டத்தில் அமைந்திருந்ததாம். வேளச்சேரிக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு.

கட்டிடக்கலை

ஐந்து நிலை இராஜகோபுரம். சுவாமி சன்னதி: ஏகதள விமானம் கருங்கல் கட்டுமானம்; பாதபந்த அதிட்டானம், பாதச்சுவர், பிரஸ்தாரம், பூதவரி; செங்கல் கட்டுமானம் நாகர தளம், வேசர சிகரம். அம்மன் சன்னதி ஏகதள திராவிட விமானம்; கருங்கல் கட்டுமானம்; செங்கல் கட்டுமானம் திராவிட தளம் மற்றும் சிகரம்.
  
கோவிலில் இரண்டு பிரகாரங்கள். முதலாம் பிரகார கோஷ்ட சன்னதிகளில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை. தனி சன்னதிகளாக சண்டிகேஸ்வரர், லட்சுமி, வீணா சரஸ்வதி, பைரவர் மற்றும் தேவியருடன் சுப்பிரமணியர். இரண்டாம் பிரகாரத்த்தில் அமர்ந்த நிலையில் வீரபத்திரர். கொடிமரம் பலிபீடம்.

இங்குள்ள துவாரபாலர்களின் சிற்பங்கள் பல்லவ சிற்பங்களின் சாயலைப்பெற்றுள்ளதால் பல்லவ மன்னன் தந்தி வர்மன் தொடர்பு இருக்கலாமா என்று அறிஞர்கள்  யூகிக்கிறார்கள்.

கல்வெட்டுக்கள்

இக்கிராமம் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கொடையாகும். எனவே வேளச்சேரி ஒரு பிரம்மதேயம், ஒரு வரலாற்றுத் தீர்வு (Historic settlement) என்பது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் ஆவணகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மதேய கிராமங்களின்  மகா சபை என்றழைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் உயர்குடி அந்தண நிலச்சுவான்தார்களால் நடத்தப்பட்டுள்ளது.  மகா சபைகளின் அன்றாட நடவடிக்கைகள், பதிவுகள், நிலக்கிரையங்கள், கொடைகள் யாவும் கோவில் கருவறை சுவர்களில் (வெளிப்புறம்) கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.  முதலாம் இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் தண்டீஸ்வரருக்கு 10-ம் நூற்றாண்டில்  எடுப்பித்த கோவில் என்று கருவறை சுவர்களில் உள்ள இக்கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்கிராமம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) ஆட்சியாண்டுகளில் இவர் மனைவி பெயரால் தினச்சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள்  இக்கோவிலில் ஒரு கிராம சபை திறம்பட உள்ளாட்சி நிர்வாகம் செய்த செய்தியினைத் தருகின்றன. இக்கிராமத்தில் இன்றும் வழிபாட்டிலிருக்கும் இரண்டு பழம்பெரும் சோழர்காலக் கோவில்களைக் காணலாம்.  முதலாவது, கண்டாராதித்த சோழன் (கி.பி. 949-957AD) ஆட்சி காலக் கல்வெட்டுக்களுடன் அமைந்த, தண்டீச்வரர் கோவில். மற்றொன்று செல்லியம்மன் கோவில். செல்லியம்மன் கோவில் ஏழு கன்னிமார்களுக்காக எடுப்பிக்கப்பட்டதாம். இவற்றுடன் மண்ணில் புதைந்திருந்த பல விஷ்ணு திருமேனிகள் இக்கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தவிர இக்கிராமத்தைச் சுற்றிலும் சில பழம்பெரும் வைணவ ஆலயங்கள் உள்ளன.
Related Posts Plugin for WordPress, Blogger...