Thursday, October 23, 2014

தஞ்சை பெரிய கோவில் அகழிகளைப் புதுப்பிக்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள்


தஞ்சை கலெக்டர் நேரில் ஆய்வு நன்றி: படங்கள் தி இந்து
தஞ்சை கலெக்டர் படகு சவாரியைத் துவக்கினார் நன்றி: படங்கள் தி இந்து
புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. தமிழகம்,   வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் தஞ்சாவூருக்கு வந்து செல்கின்றனர்.

இந்தப் பதிவு சுற்றுலா புள்ளிவிவரங்கள் பற்றியில்லை.

தஞ்சை நகரில், 'அடிப்படை வசதிகள் இல்லை சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் இல்லை' என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் பிரசித்தி பெற்ற இக்கோவிலைச் சுற்றி  நான்குபுறத்திலும் அகழி மற்றும் கோட்டைச்சுவர்கள் உள்ளன. தஞ்சை நகரை சுற்றியும் புரதான அகழிகள் உள்ளன. ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பே நாயக்க மன்னர்களின் ஆட்சியில் தஞ்சை நகரில் பெய்யும் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை வடிய வைப்பதற்கும், மழைநீரை சேமிக்கவும், கோட்டையை   எதிரிப் படைகளிடமிருந்த் காக்கவும் இந்த அகழிகள் தோண்டப்பட்டனவாம். தஞ்சை மன்னர்கள் நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தில் அறிவும் ஆற்றலும் கொண்டவர்கள் ஆதலால், தஞ்சை அகழிகளைச் சிறந்த முறையில் திட்டமிட்டு உருவாக்கி அமைத்துள்ளார்கள்.

இது வரலாறு. வரலாறு பற்றி நிறைய பேசிவிட்டார்கள். அகழிகள் மற்றும் மதில்களின் தற்போதைய நிலமை என்ன?


தற்போதுள்ள பழைய பேருந்து நிலையம், ஸ்டேட் பேங்க், மாவட்ட மைய நூலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகள் எல்லாம் அகழி இருந்த இடங்கள் தானாம். அகழியை மூடிவிட்டு இக்கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளனவாம். தற்போது தெற்குப் பகுதியில் அகழி இருந்ததற்கான சுவடுகளே இல்லை என்கிறார்கள். ஏனோ மற்ற மூன்று சாலைகளை ஒட்டி அமைந்துள்ள அகழிகளைத் தூர்த்து அத்துமீறிக் கட்டடம் எழுப்பாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்!  இது சற்று வியப்பான செய்திதானே...

நாயக்கர் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த அகழிகள் மற்றும் கோட்டைச் சுவர்கள் பராமரிப்பின்மை காரணமாகச் சிதிலமடைந்து வருகின்றன. இப்பகுதிகளில் செடிகள் அடர்ந்து புதர்கள் நிறைந்து காணப்படுகிறன. மக்கள் அகழிகளையொட்டி குப்பைமேட்டை உருவாக்கி வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் சில இடங்களில் அகழி கோட்டைச் சுவர்  இடிந்து விழுந்தது. அகழிகளையும், கோட்டைச் சுவர்களையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பது தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

சுற்றுலா துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தஞ்சை கலெக்டர் நேரடியாக நடவடிக்கையில் இறங்கியதுதான் செய்தி.

ஆமாம்! இந்த வாரம் தஞ்சை கலெக்டர் சுப்பையன் பெரிய கோவிலைச் சுற்றி நாற்புறத்திலும் உள்ள அகழிகள், தென்புற கல்லணைக் கால்வாய் ஆற்றுப்பகுதி, மேலஅலங்கம், வடக்கு அலங்கம், கீழஅலங்கம் பகுதிகளில் உள்ள பெரியகோட்டை அகழிகள் மற்றும் சில இடங்களை  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்விற்குப் பின்னர் கலெக்டர் சுப்பையன் சில இனிப்பான செய்திகளை வெளியிட்டுள்ளார்:–

1. தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி அமைந்துள்ள அகழி மற்றும் தஞ்சை நகரைச் சுற்றி அமைந்துள்ள புரதான அகழி என எல்லா அகழிகளையும் சேர்த்துத் தூர் வாரி அழகுபடுத்தி தண்ணீர் விடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2. கரந்தை கருணாகரசாமி கோவில் குளம், தூர் வாரி புது ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்யப்படும்.

3. கல்லணைக் கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் சுற்றுலாத்துறையின் மூலம் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

4. பெரிய கோவிலைச் சுற்றி அமைந்துள்ள அகழி மற்றும் சுற்றுப்புறம் தூய்மைப்படுத்தப்பட்டு ஆன்மிக நடைபாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சையை சுற்றியுள்ள புராதன அகழி மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடனுதவி கோரப்பட்டுள்ளது. இக்கடனுதவி கிடைக்கப்பெற்றதும் வளர்ச்சிப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.

5. எனினும் கடனுதவி பெறுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

6. மேலும், மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

7. கல்லணை கால்வாய் மற்றும் அகழி பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் கழிவு நீரை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8. அகழி மற்றும் ஆற்றில் கழிவு நீரை சேர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும்.

அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத்தும் திட்டங்களை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் களமிறங்கியுள்ளது. முன்பெல்லாம் வெறும் கனவுகளாக இருந்த ஆசைகளை மக்கள் இப்போது அடையக்கூடிய லட்சியங்களாகவே கருத ஆரம்பித்துவிட்டனர். மக்கள் நம்பிக்கையுடன் காத்‌திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...