ஜடாயு வதம் கூடியாட்டம் |
இராவணனாக கிருஷ்ணகுமார், துறைத் தலைவர், கூடியாட்டம் நாடகத் துறை, ஸ்ரீ சஙகரசார்யா சமஸ்கிருதம் யுனிவர்சிட்டி |
ஜடாயு வேடம் பைங்குளம் நாராயண சாக்கியார் |
பைங்குளம் நாராயண சாக்கியார் கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம் பற்றியும் சிற்றுறை நிகழ்த்தினார். |
கதகளி.. மோகினி ஆட்டம், தெய்யம், துள்ளல் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கூடியாட்டம் என்றால் அதுவரை என்னவென்றே தெரியாது. இது சக்திபத்ரா எழுதிய ஆச்சர்யசூடாமணி என்ற நாட்டிய நாடகத்தைத் தழுவியது என்று தெரிந்தது. ஜடாயு வாதம் நாட்டிய நாடகம் பைங்குளம் ராம சாக்கியர் ஸ்மாரகா கலாபீடம் சார்பில் அரங்கேற்றப்படுகிறது. ராம சாக்கியரின் மைத்துனர் பைங்குளம் நாராயண சாக்கியார் ஒரு சிறந்த நாட்டிய நாடகக் கலைஞர்.
மாலை ஆறு மணி அளவில் நாட்டிய நாடகம் தொடங்கும் முன் பைங்குளம் நாராயண சாக்கியார் கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம் பற்றியும் மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் ஒரு சிற்றுறை நிகழ்த்தினார். பலருக்கு இது மிகவும் உபயோகமாயிருந்திருக்கும். மலையாளிகளே கூடியாட்டம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருந்தார்கள். நாராயண சாக்கியார் 'இந்த சமஸ்கிருத நாட்டிய நாடக வடிவம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது' என்றார். இந்திய நாட்டிய நாடக அரங்கம் குறித்த சாஸ்திரிய விதிமுறைகள் பற்றியெல்லாம் பழம்பெரும் நாடகக்கலை எழுத்தாளர் 'பாஷா' என்ற நாட்டிய சாஸ்திர நூலை இயற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தக் கூடியாட்டம் சமஸ்கிருத நாட்டிய நாடகம் பாஷா நாட்டிய சாஸ்திர விதிகளின் படியே எழுதி நடிக்கப்படுகின்றன என்கிறார் நாராயண சாக்கியார் .
கூடியாட்டம் என்பது 1. நாட்டியம் (நடிப்பு மற்றும் முகபாவனை), 2. நிருத்தம்
அல்லது ஆட்டம், 3. கீதம் அல்லது பாட்டு மற்றும் 4. வாத்தியம்
(தோற்கருவிகள் மூலம் இசைக்கப்படும் இசை) ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாகும்.
கதை பற்றி நாராயண சாக்கியார் சொன்னவை - இராமாயணத்தில் இராவணன் சன்யாசி வேதத்தில் சீதையைக் கவர்ந்து செல்லுவான். ஜடாயு என்ற (கழுகு முகம் கொண்ட) பறவை இராவணனுடன் வாதம் செய்வது மட்டுமல்ல சண்டையுமிட்டு உயிர் துறக்கிறார். ஆனால் ஜடாயு வாதம் நாட்டிய நாடகத்தில் இராவணன் இராமனைப் போல வேடமிட்டு சீதையை கவர்ந்து செல்வதாகக் கதை அமைப்பு.
வந்திருப்பவன் இராமன் அல்ல என்று சீதா கண்டுகொள்கிறாள். தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரலிடுகிறாள். ஜடாயு குறுக்கிடுகிறார். இராவணனுக்கும் ஜடாயுவிற்கும் இடையே பெரும் சண்டை நிகழ்கிறது. இராவணன் ஜடாயுவின் இறக்கையைத் வெட்டியெறியவே ஜடாயு மண்ணில் சாய்கிறார். இராவணன் சீதையுடன் இலங்கை நோக்கி பறந்து செல்கிறார். இது தான் ஜடாயுவாதம் கதைச் சுருக்கம்.
நாட்டிய நாடக மேடை எந்த ஒப்பனையுமில்லாமல் காணப்படுகிறது. இரண்டு கேரளத்து
குத்து விளக்குகளை ஏற்றுகிறார்கள்; நாடகம் முடியும் வரை ஏரிய
விடுகிறார்கள். மேடை பின்புறம் நம்பியார் இன கலைஞர்கள் மிழவு என்னும்
பெரிய (பானையுடன் இணைந்த) தோற்கருவியில் ஏற்ற இறக்கங்களுடன் பின்னணி
இசைக்கிறார்கள். பின் நங்கை ஸ்லோகங்கள் விருத்தமாகப் பாட ஆரம்பிக்கிறார்.
நாடகப் பாத்திரங்கள் முதன்முதலில் இருவர் தாங்கிப்பிடிக்கும் திரை
மறைவிலிருந்து மேடையில் தோன்றுகிறார்கள்.
நாராயண சாக்கியார் ஜடாயு வேடமிட்டு தம் சிறந்து முக பாவனை மற்றும்
அபிநயங்களை வெளிப்படுத்தினார். கிருஷ்ணகுமார், துறைத் தலைவர், கூடியாட்டம்
நாடகத் துறை, ஸ்ரீ சஙகரசார்யா சமஸ்கிருதம் யுனிவர்சிட்டி, இராவணனாக வேடம்
தரித்து தம் ஒப்பற்ற முக பாவனை மற்றும் அபிநயங்களைத் திறம்பட வெளிப்படுத்தி
ரசிகர்களிடமிருந்து கைதட்டல்களை அள்ளினார். கலாபீடத்தின் அஷுவதி பிரசாத்
சீதவாகப் பாத்திரமேற்று தான் இக்கட்டான சூழலில் பயம் கலந்த முகபாவனைகளைக்
காட்டினார். ராஜன் ராஜீவ் தூதன் வேடமிட்டு நடித்தார். வினீத் மற்றும்
ஜெயராஜ் இரட்டையர் 'மிழா' என்னும் கேரள வாத்தியம் மூலம் அசத்தினார்கள்.
நாடகம் சுமார் இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிட்டது. சம்ஸ்கிருதம் நாட்டிய நாடகமென்றாலும் மொழி ஒரு தடையல்ல. நடிகர்கள் சமஸ்கிருத சுலோகங்களை சற்று ஏற்ற இறக்கங்களுடனும் பல்வேறு முக
பாவனைகளுடனும் அபிநாயித்து நடிக்கிறார்கள். கவித்துவம் மிகுந்த சமஸ்கிருத
வசனங்கள்; முகபாவமும் அபிநயமும் சம்பவங்களை காட்சியாக அபிநயித்து,
தத்ரூபமாய் நம் கண் முன்னால் நிறுத்தி அந்தக் கதையை நமக்குச்
சொல்லிவிடுகிறார்கள். நவரசங்களை கண்களினாலும் முகபாவத்தினாலும்
உணரவைக்கிறார்கள். இவர்கள் தங்கள் புருவங்களை பாம்பு போல் அசைத்து நெளிய
விட்டுக் காட்டும் வித்தை அருமை. தகுந்த பயிற்சி இருந்தால் மட்டுமே இது
சாத்தியமாகும்.
கூடுதல் தகவல்கள்
கூடியாட்டம் என்பதன் பொருள் “சேர்ந்து நடிப்பது” என்று பொருளாம் கேரளாவின் பழமையான நாடக வடிவம் இது என்கிறார்கள். ‘நாட்டிய சாஸ்திராவை’ அடிப்படையாக வைத்து கி.பி 9-ஆம் நூற்றாண்டில் கூடியாட்டம் தோன்றியுள்ளது.
கதகளிக்கும் கூடியாட்டத்திற்கும் உள்ள ஒற்றுமை அதிகம் வித்தியாசம்
மிகக்குறைவு. எதார்த்தத்தைவிட சற்று அதிகப்படியான ஒப்பனை. அரசர்கள்,
அரக்கர்கள், சாமானிய மக்கள், போன்ற நாடக மாந்தர்களை அவர்கள் ஒப்பனை
மூலமாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. கதகளியில் காண்பது போல முகத்தைச் சுற்றி
என்ற நிற வெள்ளை நிற வட்டம் வரையப்பட்டுள்ளது. கண்களைச் சுற்றி கறுப்பு மை
கொண்டு கண்முடிவிலிருந்து காது வரை அடர்த்தியாக வரைந்து கொள்கிறார்கள்.
மூக்கில் ஒரு வெள்ளை நிற உருண்டையை ஓட்டிக்கொண்டுள்ளார்கள். அரக்கர்களுக்கு
கருப்பு வண்ணமும் தெய்வீகப் பாத்திரங்களுக்கு பச்சை வண்ணமும் ஒப்பனைக்
குறியீடுகளாகக் கையாளப்படுகின்றன. அரக்கர் பாத்திரம் ஏற்ற கதாபாத்திரங்கள்
கருப்பு நிறத்தை மிகுதியாக பயன்படுத்துகிறார்கள். உயரமான கிரீடங்கள்,
பட்டைப்பட்டையாக நகைகள், கங்கணம், வண்ணப் பூமாலை, பளபளக்கும் மேலுடைகள்,
இடுப்பைச் சுற்றி விசிறி மடிப்பில் உடைகள். கதகளியைப் போலல்லாமல்
கூடியாட்டத்தில் பெண்களும் கிரீடமணிகிறார்கள்.
கூடியாட்டத்தில்
ஆண் கதாபாத்திரம் ஏற்பவர்கள் இந்து மதத்தில், சாக்கியார் என்னும்
இனத்தைச் சேர்ந்தவர்கள்; பெண் வேடம் தரிப்பவர்கள் இந்து மதத்தில்,
நம்பியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு காலத்தில் கூடியாட்டம் நாட்டிய நாடகம் உன்னத நிலையில் இருந்துள்ளது;
கோவில் வளாகங்களில் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நாட்டிய நாடகங்களை
நிகழ்த்த கோவில் வளாகத்தில் கூத்தம்பலம் என்னும் அரங்கம் இருந்ததாகச்
சொல்கிறார்கள். சில கோவில்களில் இவ்வரங்கங்கள் இன்றும்
காணக்கிடைக்கின்றனவாம்.
யுனஸ்கோ அமைப்பால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டிய நாடகக்கலை
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் கேரளாவில் இக்கலைக்கு இன்றைக்குப் போதிய
ஆதரவு இல்லாத காரணத்தால் பாரம்பரிய
கலைஞர்கள், பயிற்சியாளர்கள் இவற்றைக் காக்க பெரிதும் போராடி
வருகின்றனராம்.
பல காலமாக கோயில்களைச் சேர்ந்த கூத்தம்பலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்தக்
கூத்து வடிவம் தற்போது சில திருவிழாக்களிலும், கலைகளை ஆதரிக்கும் சில
தனியார் அமைப்புகளினால் தனி அரங்கங்களிலும்
அரசாங்கம் வெளிநாடுகளில் நடத்தும் கலாச்சார விழாக்களிலும்
நிகழ்த்தப்படுகின்றன.
Youtube
Jatayu Vadham Koodiyattam by Samaraka Kalapeetom
Jatayu Vadham Koodiyattam by Samaraka Kalapeetom
No comments:
Post a Comment