Monday, October 20, 2014

மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு


மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு



தமிழர்கள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாட்டில் மூன்று விதமான வழிபாடுகளைக் காண இயலும். ஊர்க் காவல் தெய்வ வழிபாடு, கிராம தெய்வம் அல்லது கிராம தேவதை வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகள் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபு எனலாம். குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர்.

பெண் தெய்வ வழிபாடுகள்

தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகுந்த சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் மற்றும் கன்னித் தெய்வங்கள் ஆகிய பெண்தெய்வங்களே மிகுதி எனலாம். இறந்து போன கன்னிப்பெண்கள், பத்தினிப்பெண்கள், மானம் காப்பதற்காக உயிரைத் துறந்தவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாயினர். உதாரணம் - அங்காளம்மன், இசக்கி, உச்சிமாகாளி, எல்லையம்மன், கண்டியம்மன், காளியம்மன், சீலைக்காரியம்மன், சோலையம்மன், திரௌபதையம்மன், பேச்சியம்மன், பேராச்சி, மந்தையம்மன், முத்தாலம்மன், வீருசின்னம்மாள், நாச்சியம்மன், ராக்காச்சி, ஜக்கம்மா போன்றோர்.

காவல் தெய்வ வழிபாடுகள்

இது போல பல குடும்பங்கள் அல்லது சமூகம் அல்லது நாடு விளங்க தங்கள் இன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆண்கள், போரில் மாண்டவர்கள், தவறாகத் தண்டிக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் எனத் தெரிந்துகொண்டு மரியாதை செய்யப்படுபவர்கள் எல்லாம்   காவல் தெய்வங்களாக ஊருக்கு வெளியே வைத்து வணங்கப்படுகிறார்கள். உதாரணம் - ஐயனார், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்கள். சில ஆண் தெய்வங்கள் பரவலாக வணங்கப்படுவதால் இவை சில முதன்மைத் தெய்வங்களாயின. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வணங்கப்படும் பல ஆண் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்களாயின.

மாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு

மாசி பெரியசாமி ஒரு துணைமை (கிராம) காவல் தெய்வம். இவருக்கு சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக் குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது.  மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கானகம்பீரமாக காட்சியளிக்கிறார்.

மாசி பெரியசாமி பல நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சுயம்புவாய் தோன்றினாராம். நாளடைவில் பெரியசாமியின் வலப்புறம் காமாட்சி அம்மனும் இடப்புறம் மீனாட்சி அம்மனும் இணைந்து கொண்டுள்ளனராம். காத்‌தவராயன் போன்ற சாயலில் காவல்தெய்வம் சிங்கத்தின் மீது அமர்ந்து வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார். பூசாரிகள் இவரை கருப்பணன் என்றும் சொல்கிறார்கள்.

மூலக்கோவில்

கொல்லிமலை மாசி பெரியசாமி  கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.  பெரியசாமியை  சோழிய வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகங்கள் குலதெய்வங்களாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள். 

மாசி பெரியசாமிக்கு நாமக்கல், துறையூர், திருச்சி வட்டங்களில் பல பெரியண்ணன் கோவில்கள் உள்ளன. மாசிக்குன்றிலிருக்கும் இந்தக் கோவில்தான் மூலக்கோவில் என்கிறார்கள்.  மேலே சொன்ன. இடங்களில் அமைந்துள்ள பெரியண்ணன் கோவில்கள், மூலக்கோவில் மாசி பெரியசாமியின் உத்திரவு வாங்கி அடிமண் எடுத்து வந்தபின்பு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளனவாம்.

மாசி பெரியசாமி கதை  

காசியிலிருந்து தேவி பார்வதியும், பெருமாளும் தென்திசை நோக்கி வந்தார்களாம். தேவி பார்வதி  காமாட்சியாகவும், பெருமாள் பெரியண்ணனாகவும் மானிடரூபமெடுத்துள்ளார்கள். துறையூர் பக்கம் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட்டாளாம். பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு போனாராம். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நின்றபோது அது அவரின் பலம் தாங்காமல் ஆட்டம் கண்டது. எனவே பெரியண்ணன் அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு மாறிச் சென்றார் . அடுத்த குன்றும் ஆட்டம் கண்டது. இது போல ஏழு குன்றுகளில் ஏறி நின்ற பிறகு கடைசியாக மாசிக் குன்றை அடைந்தார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருந்த மக்கள் வழிபடவே, அவர்களின் பக்தியினால் மகிழ்ந்த பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கல்லாத்துக் கோம்பு என்பது கொல்லி மலையின் அடிவாரத்தில் அமைந்த ஊர். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் அவரைத்தேடி கொல்லி மலைக்குச் போனார். கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைப் பார்த்த காமாட்சி தானும் அங்கு தங்குவதாகச் சொன்னார். பெரியண்ணனோ வேண்டாமென்று சொல்லி காமாட்சியை கல்லாத்துக் கோம்பையில் தங்கவைத்தார்.

அமாவாசை திருவிழா
 
மாசிக்குன்றுதான் கொல்லிமலைத் தொடரில் மிகவும் உயர்ந்த மலைப்பகுதி என்று தெரிந்தது. இக்குன்றுக் கோவிலுக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன. இம்மூன்று பாதைகளில் எந்தப்பாதையில் சென்றாலும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகுதான் கோவிலை அடைய இயலும். பாதை நெடுக முட்புதர்களும் பாறைக்கற்களும்,  நிறைந்ததுள்ள செங்குத்தான மலைப்பாதையில் சற்று சிரமப்பட்டே நடந்து சென்றோம். மாசி பெரியசாமி கோயில் மலை உச்சியை அடையும் போது சில்லென்று குளிர்ந்த காற்று நம் முகத்தில் வந்து அறைகிறது. களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது.

அமாவாசை நாட்களில் கோவில் களைகட்டுகிறது. கூட்டம் தள்ளிச் சாய்கிறது. அமாவாசையன்று காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வருகிறவர்கள் வரிசையில் நின்று பெரியசாமியை கும்பிட்டுவிட்டு வருவதற்கு காலை பத்து மணிக்கு மேலே ஆகிவிடுகிறதாம். அவ்வளவு கூட்டம் வருகிறது. சற்று தாமதமாக மதியம் போனால் சாமி கும்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

நேர்த்திக் கடன்கள்

பல நம்பிக்கைகள், வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் எல்லாம் கோவிலைச் சுற்றி இடைவிடாது நடக்கின்றன. 

தொட்டில் கட்டி பிள்ளை வரம் வேண்டினார்கள். கல்யாணப்பிராப்தி வேண்டி வேல் நட்டார்கள். வீடு கட்ட நினைப்பவர்கள் பலகைக்கற்களால் அடுக்கி கல்வீடு அமைத்தார்கள். நேர்த்திக் கடனாய் ஆட்டுக்கிடாய் வெட்டினார்கள். கோழியை உயிருடன் பிடித்து வேல்களில் குத்தி வைத்தார்கள். செத்து அழுகிப்போன கோழிகள் மூலம் ஒரு விதமான கெட்ட வாசம் வீசியது. இன்னும் பற்பல நேர்த்திக்கடன்கள்.

விபூதி மந்திரிப்பவர், அருள்வாக்கு சொல்லும் பூசாரி எல்லாம் கொடிமரத்தின் கீழே கும்பலாய்க் குந்தியிருந்தார்கள். சற்று தூரத்தில் இன்னொரு பூசாரி வேப்பங்குளையுடன் பேய்ப்பிடித்த பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தார். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல வேறொரு பூசாரி நீண்ட அரிவாள் மீது நின்றபடி கண்ணை மூடிக்கொண்டு ஆடியபடி அருள்வாக்கு சொன்னார்.

சந்தை

கோவில் அருகே ஒரு சந்தை. மலைவாழ் மக்கள் பாலாச்சுளைகள், அன்னாசி பழங்கள், நாட்டு மாதுளம் பழங்கள், கொய்யா பழங்கள், மலை வாழை பழங்கள் என்று எல்லாம் விற்றார்கள். நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் சூடாக குழிப்பணியாரம் தின்றார்கள்; முடவட்டுக்கால் கிழங்கு சூப் குடித்தார்கள்.

எவ்வாறு செல்வது?

நாமக்கல் கொல்லிமலைக்கு அருகில் உள்ள நகரம். நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு பஸ் வசதியுண்டு. பஸ் அறப்பள்ளீசுவரர் கோவில் வரை செல்லும். இறங்குமிடம் பூந்தோட்டம் என்றால் நான்கு கி.மீ நடக்க வேண்டும்; இறங்குமிடம் கிழக்குவளைவு என்றால் இரண்டு கி.மீ நடந்தால் போதும். ஆனால் பாதை மோசம். வழியில் ஒரு ஓடை வரும் பின்பு வழுக்குப் பாறை தாண்டினால் கோவில் தெரியும்.
இயற்கை காட்சிகள் நிறைந்த சூழல். மீதமான வெய்யில். சில்லென்ற காற்று. கிராமத்து மக்கள். கோவிலில் மாசி பெரியசாமியின் வரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இயற்கையை அனுபவிப்பதுகூட ஒரு வரம் தானே. 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...