Tuesday, August 4, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 6


குழந்தையின் வளர்ச்சியை ஐந்து பருவங்களாகப் பிரிக்கலாம்:

சிசுப் பருவம் என்பது -     0-1 ஆண்டுகள்
குறுநடைப் பருவம் என்பது -     1- 3 ஆண்டுகள்
பள்ளி முன் பருவம் என்பது     3-6 ஆண்டுகள்
பள்ளிப்பருவம் என்பது -     6- 10 ஆண்டுகள்
குமாரப் பருவம் என்பது -     10-20 ஆண்டுகள்


உடல் வளர்ச்சி

 

உடல் வளர்ச்சி, குழந்தை வளர்ச்சியின் ஒர் அடிப்படைக் கூறாக உள்ளது. வளர்ச்சி என்பது குழந்தையின் உடலில் உள்ள செல்கள் திசுக்களின் பெருக்கத்தால் ஏற்படும் உயரம் மற்றும் எடை பெருக்கத்தை குறிப்பதாகும். வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் இருந்தால்தான் அது ஆரோக்கியமான குழந்தை. உங்கள் குழந்தையின் உயரமும் எடையும் சரியான விகிதத்தில்தான் இருக்கின்றனவா என்பதை எப்படி அறிந்துகொள்வது? 


குழந்தை பிறக்கும்போது 48 செ.மீ. முதல் 50 செ.மீ. வரை உயரமும்  மற்றும் 3.3 கிலோகிராம் எடையும் இருக்கும். பிரசவத்திற்குப் பிறகு  ஒரு சிசு பிறந்தபோது உள்ள 3.3 கிலோகிராம் எடையிலிருந்து பொதுவாக 5 முதல் 10 சதவிகிதம் இழக்கிறது. இரண்டு  வாரத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காட்டும்.


மூன்று மாதம் (6.0 கிலோகிராம்) முதல் ஆறு மாதம் (7.8 கிலோகிராம்) நிறைவுற்ற ஒரு சிசு பிறந்த கால எடையைப்போல இரு மடங்கு எடை வளர்ச்சி பெறவேண்டும். ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரை சிசுவிடம் விரைவான வளர்ச்சி இருக்காது. ஒரு வயதிற்கும் இரண்டு வயதிற்கும் இடைப்பட்ட காலத்தில் குறுநடைப் பருவக் குழந்தை (10.2 - 12.3 கிலோகிராம்) வரை எடை வளர்ச்சி பெறவேண்டும். இரண்டு முதல் ஐந்து வயது வரை ஒவ்வொரு வருடத்திற்கும் முறையே (2.30 கிலோகிராம்) வரை  எடை வளர்ச்சி பெறவேண்டும். அதாவது இரண்டு வயதில் (12.3 கிலோகிராம்); மூன்று வயதில் (14.6 கிலோகிராம்); நான்கு வயதில் (16.7 கிலோகிராம்); ஐந்து வயதில் (18.7 கிலோகிராம்) வரை எடை வளர்ச்சி பெறவேண்டும்.


பொதுவாக இரண்டு வயது முதல் பத்து வயது குழந்தைகள் நிதானமான வேகத்தில் வளர்கிறார்கள். குமரப் பருவத்தில் மிக வேகமான எடை வளர்ச்சி தொடங்குகிறது. இது ஒன்பது வயது முதல் பதினைந்து வயது வரை நிகழ்கிறது.     

குழந்தையின் வளர்சியைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உயரத்தை ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். பிறந்தவுடன் குழந்தையின் உயரம் 50.5 செ.மீ. ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் குழந்தையின் உயரம் தோராயமாக 2.0 செ.மீ (அல்லது ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5.0 செ.மீ) அதிகரிக்கிறது.   இந்த உயரம் முதல் வருடத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். தொடர்ந்து இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும்.  இதன் பிறகு குறைவான குழந்தை வேகத்திலேயே வளர்கிறது. குழந்தையின் 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் முறையே 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் மட்டுமே உடலின் உயரம் அதிகரிக்கிறது.  பிறந்த குழந்தையின் தலை சுற்றளவு 34 செ.மீ ஆக இருக்கும்.  6 முதல் 9 மாதம் கழித்து இந்த தலை சுற்றளவைவிட மார்பின் சுற்றளவு அதிகரிக்கும்.

குழந்தை பிறந்து முதல் இரண்டு வயது வரை உண்டான  வளர்ச்சியானது அதனுடைய மூளையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஊட்டச்சத்து முக்கியமானது.

உயரம் மற்றும் எடை அட்டவணை
பல்வேறு வயதுகளில் ஆண் / பெண் குழந்தைகளின் சராசரி உயரம் மற்றும் எடை
 

 வயது
 ஆண்
 பெண்
வளர்ச்சி நிலைகள்
 எடை    உயரம்
(கி.கி)     (செ.மீ)
 எடை  உயரம்
(கி.கி)    (செ.மீ)
 பிறந்தநிலை
3.3
 50.5
3.2
49.9
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). கை, கால்களில் அசைவு இருக்கும்.  24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.
 3 மாதம்
6.0
 61.1
5.4
60.2
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). திடீரென ஒலி கேட்டால் குழந்தைகள் திரும்பிப் பார்க்கும். விளையாடுதல் சிறிது இருக்கும். அம்மாவின் முகமும், தொடு உணர்ச்சியும் புரியும்.
 6 மாதம்
 7.8
 67.8
7.2
 66.6
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). குழந்தைகள் கவிழ்ந்து படுக்க ஆரம்பிக்கும். எதையும் பிடிக்காமல் உட்கார ஆரம்பிக்கும். தான் பார்க்கும் முகங்கள் யார் என்று புரிய ஆரம்பிக்கும்.
 9 மாதம்
 9.2
72.3
  8.6
 71.1
சிசுப்  பருவம் (1 -12 மாதங்கள்). எதையாவது பிடித்துக் கொண்டு நிற்க ஆரம்பிக்கும்.
 1 வருடம்
 10.2
76.1
 9.5
 75.0
குறுநடைப் பருவம் (1 -3 வருடம்). எந்த வித உதவியும் இல்லாமல் நடக்க ஆரம்பிக்கும். பொருட்களை கையால் எடுக்க ஆரம்பிக்கும். சிறிய வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும். குடும்ப மனிதர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.
 2 வருடம்
12.3
 85.6
11.8
84.5
குறுநடைப் பருவம் (1 -3 வருடம்). மாடிப்படி ஏறுதல், ஓடுதல், காகிதத்தில் கோடுகள் வரைதல் போன்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கும்.
 3 வருடம்
14.6
 94.9
 14.1
93.9
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). வாக்கியங்கள் பேச ஆரம்பிக்கும். சிறிய பாடல்கள் பாட ஆரம்பிக்கும். மூன்று சக்கர வண்டி ஓட்ட ஆரம்பிக்கும்.
 4 வருடம்
16.7
 102.9
 16.0
 101.6
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து கூட்டாக விளையாட்டு. சுயமாக டாய்லட் செல்லும் திறன்
 5 வருடம்
18.7
109.9
 17.7
 108.4
முன் பள்ளிப் பருவம் (3 -6 வருடம்). படித்தல், வரைதல் போன்றவை ஆரம்பிக்கும். சிறிய, சிறிய பாடல்கள் மனப்பாடமாக சொல்ல ஆரம்பிக்கும். பள்ளி செல்ல விரும்ப ஆரம்பிக்கும்.
 6 வருடம்
20.7
116.1
 19.5
 114.6
பள்ளிப் பருவம் (6 -10 வருடம் ) வீடு மற்றும் பள்ளிகளில் நடைமுறைகளைப் பின்பற்றும் திறன்.
 7 வருடம்
22.9
121.7
21.8
 120.6
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). புரிதல் மற்றும் ஒழுங்குபடுத்தும் பண்பு
 8 வருடம்
25.3
127.0
 24.8
126.4
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). சாதனங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்று ஆராயும் பண்பு
 9 வருடம்
28.1
132.2
 28.5
 132.2
பள்ளிப் பருவம் (6 -10 வருடம்). தகுதி ஆற்றலை ஆராயும் பண்பு
 10 வருடம்
31.4
 137.5
 32.5
 138.3
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 13 வருடம்). அபரிதமான உடல் வளர்ச்சி. இரண்டாம் நிலை பாலியல் பண்புகள்
 11 வருடம்
 32.2
140.0
 33.7
 142.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 12 வருடம்
 37.0
147.0
 38.7
 148.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 13 வருடம்
40.9
 153.0
44.0
 150.0
ஆரம்ப கால குமாரப் பருவம் (10 - 14 வருடம்).
 14 வருடம்
47.0
160.0
48.0
 155.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்). சுதந்திரம் மற்றும் தனித்துவம்
 15 வருடம்
52.6
166.0
51.5
 161.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்).  சகாக்கள் மற்றும் எதிர் பலினத்தவருடன் உறவுமுறை
 16 வருடம்
 58.0
 171.0
53.0
 162.0
இடைப்பட்ட குமாரப் பருவம் (14 - 16 வருடம்).
சாதித்து ஆய்தல்
 17 வருடம்
 62.7
175.0
 54.0
163.0
பிற்கால குமாரப் பருவம் (16 - 18 வருடம்).  வயது வந்தவர்.தனித்துவமான.அடையாளம். பூரண உடல் வளர்ச்சி
 18 வருடம்
65.0
 177.0
 54.4
164.0
பிற்கால குமாரப் பருவம் (16 - 18 வருடம்).  வயது வந்தவர். சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள். பூரண உடல் வளர்ச்சி  
 
 (ஆதாரம்: ஊட்டச்சத்துத் தேவைகள் மற்றும் இந்தியர்களுக்குப்  பரிந்துரைக்கப்பட்ட உணவுத்திட்ட படித்தரம் ஐ.சி.எம்.ஆர் Source: Nutrient Requirements and Recommended Dietary Allowances for Indians, I.C.M.R. 1990.)

மேலே கொடுக்கப்பட்டுள்ள வளர்ச்சியின் அளவுகள் ஒவ்வொருவரின் எடை மற்றும் உயரத்துக்கும் ஓரளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம். பொதுவாக பெண் குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சிறுவயதில் அதிகமாக இருக்கும். ஆண் குழந்தைகளின் வளர்ச்சியானது பெண் குழந்தைகளோடு ஒப்பிடும் பொழுது சிறுவயதில் குறைவாகவும், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அதிகரிக்கவும் ஆரம்பிக்கும். 

குழந்தையின் உணவுத் தேவை

உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மிக முக்கியமானது. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆறு மாதம் கழித்து உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து 3 முதல் 5 வேளை வரை  சரிவிகித ஊட்டச்சத்து உணவு தேவை. சரிவிகித ஊட்டச்சத்து உணவு என்பது கலோரி, புரோட்டின், கொழுப்புச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் என்பனவாகும்.  உங்கள் குழந்தைக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு கொடுப்பதன் மூலம் முறையான வளர்ச்சி, அபிவிருத்தி, வயதுக்கேற்ற சரியான எடை எல்லாம் பெற முடியும்.  குழந்தைகள் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே சரியான உணவுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். சில நேரங்களில் உண்ண விரும்பாமல் போகலாம் அல்லது தேவையற்ற நொறுக்குத் தீனிகளை நிறைய திண்ண விரும்பலாம். உணவு அளிக்கும்போது அவர்கள்  உண்ணாமல்  போகும்போது தண்டிக்கவோ அல்லது முறையாக உண்ணுவதற்காகப் பாராட்டிப் பரிசளிக்கவோ வேண்டாம். அப்படி இதுவரை செய்திருந்தால் படிப்படியாக தவிர்த்து விடுங்கள். அவர்கள் விரும்பி உணவு உண்ணுவதற்கு மாற்று வழிகளைக் கண்டறியுங்கள்  அவர்கள் மகிழ்வுடனும், நிம்மதியாகவும் உணவு உண்ணத் தகுந்த சூழலை அமைத்துக் கொடுங்கள்.

உங்கள் குழந்தைகள் துருதுருவென்று இருப்பார்கள். இவர்கள் பசியென்று சொல்லாமல் போனாலும் சரிவிகித ஊட்டச்சத்து உணவினை முறையான இடைவெளி அமைத்துக்கொண்டு கொடுக்கவேண்டும். இந்த உணவு சுமார் 150 மி.லி. அளவில் இருந்து 250 மி.லி. அளவில் இருக்கலாம். இந்தப் பழக்கம் அவர்கள்  வளரவும் விளையாடவும் தேவையான சக்தியை வழங்கும். உங்கள் சத்துணவு ஆலோசகர்கள் உங்கள் குழந்தையின் வயது மற்றும் உருவளவுக்கேற்ப (body size) உட்கொள்ளத் (intake) தேவையான கலோரி அளவினை கணக்கிட்டுச் சொல்லுவார்கள்.  உங்கள் குழந்தையின் வயது மற்றும் எடையின் (கி.கிராமில்) அடிப்படையிலேயே அவர்களுக்குத் தேவையான கலோரி மற்றும் ப்ரோட்டின் அளவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. உங்கள் குழந்தையின் எடை பவுண்டில் இருந்தால் அதை கிலோகிராமில் மாற்றுவதற்கு அந்த எடையை 2.2 என்ற எண்ணால் வகுக்கவேண்டும்.

கலோரி தேவைகள்

பிறப்பு முதல் மூன்று வயது வரை:  ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 100 கலோரி
நான்கு வயது முதல் ஆறு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 90 கலோரி   
ஏழு வயது முதல் பதினோரு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் சுமார் 70 கலோரி   

புரோட்டின் தேவைகள்

பிறப்பு முதல் மூன்று வயது வரை:  ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.2 கிராம் 
நான்கு வயது முதல் ஆறு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.1 கிராம்
ஏழு வயது முதல் பதினோரு வயது வரை: ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 1.0 கிராம்

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள்: சரிவிகித ஊட்டச்சத்து உணவு உண்ணும்போது கூடுதல் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் தேவையில்லை. உங்கள் சத்துணவு ஆலோசகரிடம் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் பற்றி ஆலோசனை பெறுவது அவசியம்.

ஒரு வயதில் உங்கள் குழந்தை தானே தன் கையில் எடுத்து உண்ணுதல் நல்ல பழக்கம். சில நேரங்களில் பராக்குப் பார்த்துக்கொண்டு உணவில் கவனம் செலுத்தாமல் போகலாம். இதை சரி  செய்வது எப்படி?    உணவு அமைப்பு, நிறம், வடிவம் மற்றும் சுவை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி உணவைக் கவர்ச்சியாக மாற்ற வேண்டும்.

இரண்டு முதல் மூன்று வயதில் உங்கள் குழந்தை பலத்த விருப்பு வெறுப்புகளைக் காட்டலாம். இந்த நிலைமை வாராவாரம் மாறலாம். குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர். உடல் எடை மற்றும் வளர்ச்சிக் குறைபாடு இல்லாதவரை இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. பல்வேறு வகையான உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம். தானியம், பருப்பு, காய்கறிகள், பழங்கள் என்று பல்வேறு உணவு வகைகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நான்கு முதல் ஆறு வயதுள்ள குழந்தைகள் உணவு உண்ண மிகுந்த நேரம் எடுத்துக் கொள்வார்கள். விளையாட்டு மற்றும் பொம்மைகள் இவர்களை உணவில் கவனம் செலுத்தவிடாமல் செய்வதுண்டு. குறிப்பிட்ட உணவு வகையினை உண்ணாமலிருந்தால் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். சில வாரங்கள் கழித்து இந்த உணவு வகையினை திரும்பப் பரிமாறுங்கள். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பது நல்ல மாற்றம் தரும்.

ஏழு முதல் பதினோரு வயதுள்ள குழந்தைகள் அவர்கள் பசிக்கேற்ப உண்ணுவார்கள். இந்தப் பழக்கம் இவர்களது முறையான எடை மற்றும் சக்தி அளவினைப் பராமரிக்க உதவும். முறையான உணவுப் பழக்க வழக்கங்களைப் பாராட்டுங்கள். முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களைத் தற்போது கண்டுகொள்ளாதீர்கள்.

உணவுக் குழு தேர்வு செய்யும் முறை (Food Group Choices)


இரண்டு வயது வரை முழமையான பால் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்த டெய்ரி பொருட்கள் எல்லாம் புகட்டினால் உங்கள் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வலுவாக்கும்.

இரண்டு வயதிற்குப் பிறகு நிறைவான கொழுப்பினைச் சமன் செய்ய (saturated fat intake) இரண்டு சதவிகிதம் பால் மற்றும் டெய்ரிப் பொருட்களை மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வைட்டமின் 'சி' நிறைந்த உணவினைத்  தரவேண்டும். கேரட், பீட்ரூட், குடைமிளகாய் போன்ற காய்கறிகளிலும் ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிகாய், எலுமிச்சை, தக்காளி, பப்பாளி, முலாம்பழம், கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பழவகைகளிலும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது  . இது போல வைட்டமின் 'ஏ' நிறைந்த உணவினையும் தரவேண்டும். முட்டை மஞ்சள் கரு,  கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஸ்பினாச், மற்றும் சில கீரைகள், முட்டைகோஸ், பரங்கிக்காய், முருங்கைக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற காய்கறிகளிலும் மாம்பழம், கேரட், ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி போன்ற பழவகைகளிலும் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது.

 

ஆறு மாதம் முதல் ஒரு வயது வரை மசித்த உணவையும் ஒரு வயதுக்கு மேல், கையால் பிசைந்த உணவையும் ஊட்டலாம்.  குழைய வெந்த அரிசி சாதம், பருப்பு, நன்கு வேகவைத்த காய்கறிகள், கிழங்குகள், பச்சைக்கீரைகள் மற்றும் சிறிதளவு நெய் கலந்து மசித்த / பிசைந்த   உணவு மிகவும் நல்லது. உங்கள் குழந்தை வளர்ந்து ஓடியாடி விளையாடும் வயதுக்கு வந்த பின்னால் சரிவிகித சமச்சீர் உணவு கொடுப்பது மிக மிக அவசியம். குழந்தையின் ஆதார அடிப்படை வளர்ச்சி என்பது நீங்கள் அளிக்கும் சரிவிகித உணவில் மட்டுமே  உள்ளது.  உங்கள் குழந்தைக்கு  தினசரி உணவில் என்னென்ன சத்துக்கள் தேவை?  கார்போஹைட்ரேட் - 65%, புரதம் - 25 முதல் 30%, நார்ச்சத்து 2 முதல் 3%  வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் இதர கனிமச் சத்துக்களும் சேர்த்துக்கொண்டால் அதுவே சரிவிகித வளர்ச்சியைத் தரும்.

குழந்தையின்  வளர்சிக்குப்  புரதம் இன்றியமையாதது. புரதம் பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளிலும் இறைச்சியிலும் மிகுந்துள்ளது. பால் மட்டுமே தேவையான புரதத்தைத் தரவல்லதல்ல. சிறுதனியங்களான ராகி, கம்பு, திணை, சாமை, வரகு, போன்றவை நார்ச்சத்து மிகுந்த உணவாகும். சுக்குப்பொடி, ஏலக்காய் சேர்த்து சிறுதானியத்தில் செய்த பால் கஞ்சி மிகவும் நல்லது. தினமும் ஏதேனும் ஒரு பழத்தை உண்ணுமாறு பழக்குதல் நல்லது.


அடுத்து, உங்கள்  குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு மட்டுமே போதுமானதா?  சரிவிகித ஊட்டச்சத்து உணவு தேவைதான் என்றாலும் நல்ல சூழலிலும் மனநிலையிலும் உங்கள் குழந்தை வளர்வது மிக அவசியமானது. நல்ல சூழலும் மனநிலையும் எவ்வாறு ஏற்படுத்துவது? இதற்கு என்னென்ன தேவை? விளையாட்டு  நல்ல சூழலையும் மனநிலையும் தரவல்லது. சரிவிகித ஊட்டச்சத்துணவைக் அளித்தாலும்  ஒரு குழந்தை போதிய வளர்ச்சியடையவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? இதற்கு மரபியலும்  காரணமாக இருக்கலாம். பாசமும் மகிழ்ச்சியும் மிகுந்த உங்கள் குடும்ப  சூழலில், உங்கள் வளரும்போது அதன் வளர்ச்சிக்கு அத்யாவசியமான ஹார்மோன் சுரப்பிகள் தூண்டப்பட்டு குழந்தை நன்றாக வளரும். உங்கள் குழந்தையின் உடல் எடையை தேவைக்கேற்ப அதிகரிக்கவோ, குறைத்துக் கொள்ளவோ முடியும். உங்கள் குழந்தையின் உயரத்தை விருப்பம்போல் கூட்டவோ, குறைக்கவோ இயலாது. காரணம் உங்கள் குழந்தையின்  உயரம் பெரும்பாலும் உங்கள் குடும்ப மரபியலையொட்டியே அமைகிறது. என்றாலும், உங்கள் குழந்தையின் உயரத்தை ஓரளவு அதிகரிப்பதற்கு  சில உடற்பயிற்சிகள் உதவலாம்.

குழந்தைக்கு ஐந்து வயதுக்குள் குறிப்பிட்ட வளர்ச்சி அடையாமல் போனால், அதன் பிறகு அக்குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைக் அதிகரிப்பது என்பது மிக மிகக் கடினமாகும்.

குழந்தையின் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் வளர்ச்சியும் இன்றியமையாதது. இவற்றையும்  முறையாகக் கண்காணித்து வருவது மிகவும் அவசியமாகும். குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு வளர்ச்சியைக் அளவிட  சில விதிமுறைகள் (formulas) உள்ளன.  பெற்றோர் இந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி அளவிடும் கலையை  சுகாதார நலப் பணியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...