கணிதக் கலையின் முக்கியத்துவம் கணக்கதிகாரம் என்ற நூலால் புலப்படும். காரி நாயனார் என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் காவிரி பாயும் சோழநாட்டின் கொறுக்கையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மன்னர் வழி வந்த இவரின் தந்தை பெயர் புத்தன்.
"கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி"
"பொன்னி நாட்டு பொருந்திய புகழோன்...
புத்தன் புதல்வன் கறியென்பவனே."
என்று இந்நூலின் சிறப்புப் பாயிரம் சொல்கிறது.
கணக்கதிகாரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
கணக்கதிகாரம் செய்யுட்கள் வெண்பா, கட்டளைக்கலித்துறை மற்றும் நூற்பாக்களால் ஆனது. இந்நூலில் ஆறு பிரிவுகளில் 64 வெண்பாக்களும், 45 புதிர் கணக்குகளும் உள்ளன: நிலம் வழி (23 பாக்கள்), பொன் வழி (20 பாக்கள்), நெல் வழி (06 பாக்கள்), அரிசி வழி (02 பாக்கள்), கால் வழி (03 பாக்கள்), கல் வழி (01 பாக்கள்), பொது வழி (05 பாக்கள்) என்ற ஆறுவழிக் கணக்குகளையும் புலவர் அறுபது செய்யுள்களால் உணர்த்தினார் என்பதை:
"ஆதிநிலம் பொன்னெல் லாரிசி யகலிடத்து
நீதிதருங் கால் கல்லே நேரிழையாய் - ஓதி
உறுவதுவாகச் சமைத்தேன் ஒன்றெழியா வண்ணம்
அறுபது காதைக்கே யடைத்து."
ஆறு வழிக் கணக்கு மட்டுமல்லாது வேறு பல கணக்குகளையும் இந்நூலில் நீங்கள் பார்க்கலாம். இக்கணக்குகள் கற்பவர்க்கு திகைப்பும், வியப்பும், நகைப்பும், நயப்பும் விளைவிக்கும் என்பது திண்ணம்.