Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

Monday, January 5, 2015

ஆண்டாள் பாடியருளிய திருப்பாவையின் காலம்





பன்னிரண்டு ஆழ்வார்களுள் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாரும், கோதை நாச்சியார் என்ற ஆண்டாளும் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 9 ஆம் நூற்றாண்டில் தந்தையும் மகளுமாக வாழ்ந்தவர்கள் என்று தெரிகிறது.  

பெரியாழ்வார் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் நந்தவனம் அமைத்து மலர் கொய்து மாலையாக்கி வடபெருங் கோயிலுடையானுக்குச் (திருமாலுக்கு) சாத்தும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். ஒரு நாள் பெரியாழ்வார் தம் நந்தவனத்தில் துளசி வனத்தினருகே அழகிய பெண் குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். இக்குழந்தையை கோதை என்னும் பெயர் சூட்டி தம் சொந்த மகளைப் போல வளர்த்தார்.  

தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மார்கழி மாதத்தை தனூர் மாதம் என்றும் கூறுவார். சூரியன் இம்மாதத்தில் ஒன்பதாவது ராசியான தனூர் ராசிக்கு நகர்கிறது. இந்த மாதம் முழுவதும் சூரியோதயம் தனூர் ராசியிலேயே நிகழ்கிறது. மார்கழி மாதத்தில், பெண்கள் நோற்கும் விரதங்களில் முக்கியமானது மார்கழி நோன்பாகும். மார்கழி மாதத்தில் நோற்பதால் "மார்கழி நோன்பு" என்றும், கன்னிப்பெண்கள் (பாவை), "பாவை" அமைத்து நோற்கப்படுவதாலும் "பாவை நோன்பு" என்றும் அழைக்கப்பெறுகின்றது. மார்கழி நோன்பு நோற்கும் மரபு, சங்க காலம் முதலே தமிழரிடம் இருந்துவருகிறது என்பதற்கான சான்றுகள் பரிபாடல், நற்றிணை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்னும் சங்ககால நூல்களில் காணப்படுகின்றன. 

பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப் பெறுவர் என்பது நம்பிக்கை. மணமாகாத பெண்கள் இந்த நோன்பு நோற்பர். சைவ வைணவ கன்னியர்கள் பொழுது புலர்வதற்கு முன் எழுந்து தமது தோழியர்களை அழைத்து ஆற்றங்கரை சென்று, சீதப் புனல்ஆடி அங்குள்ள  மணலினால் "பாவை" போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை தேவியாக ஆவகணம் செய்து பரமன் அடிபாடி பாடித் துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டுகின்றனர். இவ்வாறு மகளிர் ஆடும் விளையாட்டு ‘வண்டல் அயர்தல்’ எனப்படும். வைணவ கன்னியர்கள் ஒருமாத காலம் பால் நெய் போன்ற உணவுப்பொருட்களைத் தவிர்த்து நாவை அடக்கி நோன்பிருந்து,  தினமும் விடிகாலையில் 'குள்ளக் குளிரக் குடைந்து நீராடி', தங்களை மையிட்டு எழுதி அழகுபடுத்திக் கொள்ளாமல், கூந்தலில் மலரிட்டு முடியாமல், தீச்செயல் - தீச்சொற்களைத் தவிர்த்துக் கண்ணனையே வழிபட்டு நோன்பை முடிப்பர். மணிவாசகப் பெருமான் பாடியருளிய திருவெம்பாவையும், பூமாலை சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாகிய ஆண்டாள்  பாடிக்கொடுத்த திருப்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டவையாகும். 

ஆண்டாள் மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என்று ஒரு குறிக்கோளை மேற்கொண்டாள். ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை நோற்றாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோவில் கொண்ட பெருமாளிடம் சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள். அதுவே திருப்பாவை ஆயிற்று.

பாவை நோன்பு ஆரம்பிக்கும் காலம்,  "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்" என்று திருப்பாவை முதல் பாசுரத்திலேயே ஆண்டாள் சொல்கிறாள். மார்கழி மாதத்தின் மதி நிறைந்த நாளான திருவாதிரை நக்ஷத்திரத்தில் சந்திரன் பூரணம் அடையும் பௌர்ணமி நாள் ஆகும். திருவாதிரை ஒரு காலத்தில் சூரியராசியின் தொடக்கமாக இருந்ததாம். திருவெம்பாவை - திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில் இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.

பெரியாழ்வார் வடபெருங் கோயிலுடையானுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்தது பெருமானுக்கு உகந்தது அன்று என வருந்த, வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, "அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை (சூடிக் கொடுத்த சுடர்க்கொடி) சூடிக் களைந்த மாலையே வேண்டும்" எனவும் பணித்தார். கோதை திருவரங்கன் மேல் காதல் கொண்டு அவனையே மணக்க விரும்பிய நிலையில் கோதையை அரங்கனுக்கு மணம் செய்து கொடுத்ததால் பெரியாழ்வார் திருமாலுக்கு மாமனாராகும் பெருமையும்  பெற்றார்.  

 ‘ஒருமகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் 
திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான், பெருமகனாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை 
மருமகனைக் கண்டு மணாட்டுப் புறம் செய்யும்’

இந்தக் கோதையே பின்னாளில் 'ஆண்டாள்' என்னும் பெயர் பெற்றார்.  பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணி ஆண்டாள்.  நாலாயிர திவ்ய பிரபந்தம் பாசுரத் தொகுப்பகளுள் ஆண்டாள்  திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரத் தொகுப்புகளை இயற்றியவர். 

ஆண்டாளின் பிறப்பு மற்றும் அவர் வாழ்ந்த காலம் பற்றிய சரித்திர  ஆதாரங்கள் எதுவும் இல்லை. திருப்பாவை இயற்றிய காலம் பற்றிய சரித்திர ஆதாரங்கள் துல்லியமாகத் தெரியவில்லை.  நள  வருஷம், ஆடி மாதம் சுக்கில பட்சம், பூரம் நட்சத்திரத்துன் கூடிய சனிக்கிழமையன்று ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோவில் நந்தவனத்தில் துளசி செடி அருகில் குழந்தைப் பேறு இல்லாத பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கண்டெடுக்கப்பட்ட நாள் மற்றும் நேரம் ஆகிய இரண்டும் ஆண்டாளின் அவதாரத் திருநாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆடிப்பூரம் நாளன்று ஸ்ரீ வில்லிப்புத்தூர் மற்றும் பிற வைணவக் கோவில்களில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
எந்த நள வருஷத்தில் வரும் ஆடி மாத சுக்கில பட்சத்துதான் கூடிய பூரம் நட்சத்திரத்தை ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட நாளாக எடுத்துக்கொள்வது? ரித்திர ஆராய்சியாளர்கள் பல ஆதாரங்களை முன் வைக்கிறார்கள்.  

பெரியாழ்வார் ஆண்டாள் ஆகிய இருவரது வாழ்க்கைக் குறிப்புகள் ஏறத்தாழ பத்து மூலங்களில் இருக்கின்றன என்கிறார்கள். ஒன்று இவர்கள் இருவருமே தங்கள் பாசுரங்களில் காட்டுயுள்ள அகச் சான்றுகள்.  இந்த இருவரது வாழ்க்கைக் குறிப்புகள் பற்றிக் கூறும் நூல்கள் பல இருந்தாலும், இந்த நூல்களுள் காலத்தால் முற்பட்ட இரண்டு நூற்கள் குறிப்பிடத்தக்கன.  முதலாவது கருடவாகன பண்டிதர் கவிதை நடையில் இயற்றிய 'திவ்விய சூரி சரிதை'. இரண்டாவது பின்பழகிய பெருமாள் ஜீயர் மணிப்பிரவாள நடையான சமஸ்கிருதமும் தமிழும் கலந்த உரைநடையில் இயற்றிய 'குருபரம்பரை'.  இந்த நூல்கள் ஆண்டாள் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்ததாகத் தெரிவிக்கின்றன.  
முதலாவது ஆதாரம்  குருபாரம்பரை நூல்கள் ஆண்டாளை பன்னிரண்டு ஆழ்வார்களில் காலத்தால் மூத்தவர்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் ஆகிய மூவருடைய காலத்திற்குப் பிற்பட்டவராகக் குறிப்பிடுகின்றன. இவர்கள் மூவரும் சம காலத்தினர், அதாவது  கிபி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் எனவே இவர்கள் முதலாழ்வார்கள் என அழைக்கப்பட்டனர்.      

மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின்  முதல் பாசுரமான 'மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்' என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார். மார்கழி பதின்மூன்றாம் நாள் அன்று ஆண்டாள் இயற்றிய பதின்மூன்றாவது திருப்பாவைப் பாசுரம் கீழே தரப்பட்டுள்ளது. மார்கழி மாதம் பதின்மூன்றாம் நாளன்று அதிகாலை கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய பதின்மூன்றாவது திதியான திரியோதசி திதியுடன் கூடிய சுப வேளையில் ஆண்டாள் பாடி அருளிய பதின்மூன்றாவது திருப்பாவை பாசுரம் இது.

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

திருப்பாவை பதின்மூன்றாவது பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற ஒரு சொற்றொடார் வருகிறது. இந்த சொற்றொடரை வைத்துக்கொண்டு மகாவித்துவான் முகவை ராகவ ஐயங்கார் (1878-1960), ஆண்டாள் தமது திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரம் பாடி அருளிய நாளன்று நிலவிய வானவியல் அமைப்புகளை ஆழ்ந்து ஆராய்ந்து திருப்பாவையின் காலத்தை கி.பி. 885 அல்லது கி.பி. 886 என தோராயமாக நிர்ணயம் செய்துள்ளார். தமது ஆய்வு முடிவுகளை 'ஆழ்வார்கள் கால நிலை' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் வரும் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாழிகை) பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயம் வானில் கிழக்கு திசையில் விடிவெள்ளி என்னும் வெள்ளிக் கிரகம் தோன்றும் காலம். அதிகாலை சுபகாரியங்களுக்கு செல்பவர்கள் வெள்ளி எதிரில் செல்லக்கூடாது என்பது கிராமங்களில் நிலவும் சகுன நம்பிக்கை ஆகும். பளிச்சென்று கிழக்கில் தோன்றித் தெரியும் விடிவெள்ளியை அடையாளம் காண்பது மிகவும் எளிது.  வியாழன் என்னும் குரு கிரகம் மேற்கு வானில் மறைவது சாதாரணமாக நம் கண்களுக்கு  சரியாகத் தெரியாது. வியாழன் தன் சுற்றுவட்டப் பாதையில் பூமியின் அருகில் வரும்போது மட்டும் நாம் இதைக் காணலாம்.

டாக்டர் இராசமாணிக்கானார் தம் ஆய்வில் வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு நான்கு முறை நிகழ்ந்ததைக் கணக்கிட்டு கி.பி 600, கி.பி. 731, கி.பி. 885 மற்றும் கி.பி. 886 ஆகிய நான்கு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறார்.  கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் தனூர் ராசியிலும், சந்திரன் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிகள் இணையும் புள்ளியிலும் நிலை கொண்டிருந்துள்ளன (intersecting cusp). வெள்ளி என்னும் வீனஸ் கிரகம் விருச்சகம் (மூலம் நான்காம் பாதம்) மற்றும் தனூர் (பூராடம் முதல் பாதம்) ராசிகள் இணையும் புள்ளியிலும் (intersecting cusp), வியாழன் என்னும் குரு கிரகம் 180 டிகிரி நேரெதிரே  ரிஷப ராசியில் மிருகஷீரிஷம் இரண்டாம் பாதத்திலும் நிலைகொண்டிருந்துள்ளன.

 

'வைணவர்கள் வரலாறு' என்ற கட்டுரையில் டி.ஏ.கோபிநாத ராவ், பெரியாழ்வார் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப என்ற பாண்டிய அரசன் காலத்தில் வாழ்ந்தவர் (சமகாலத்தவர்) என்று குறிப்பிடுகிறார்.  சித்தன்னவாசல் கல்வெட்டுகளில் குறிப்பிடும் அவணிபசேகரரும் இந்த ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபனும் ஒருவரே என்பது டி.ஏ.கோபிநாத ராவின் முடிவு.

மு.ராகவ அய்யங்கார் 'ஆழ்வார்கள் கால நிலை' என்னும் தம் நூலில் இக்கருத்தை மறுக்கிறார்.  பெரியாழ்வாரும் பாண்டிய மன்னன் மாறவர்மன் ராஜசிம்மனும் (கி.பி. 730 - 765) (பராங்குசன் எனவும் தேர்மாறன் எனவும் முதலாம் இராசசிம்மன் எனவும் அழைக்கப்பட்டான். பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனின் தந்தை) சமகாலத்தவர்கள் என்று குறிப்பிடுகிறார். மாறவர்மனை வைணவத்திற்கு மாற்றியதே பெரியாழ்வார் தான் என்பது மு.ராகவ அய்யங்கார் முடிவு

பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 765 - 815) நெடுஞ்சடையன் என்ற அடைமொழியினையும் சடையவர்மன் என்ற பட்டத்தினையும் பெற்றவன். இவன் தீவிர வைணவனாவான்; கச்சிவாய் பேரூர் என்னும் இடத்தில் வைணவக் கோவில் ஒன்றை எழுப்புவித்துள்ளான். 

மதுரை குருவிக்காரன் சாலை அருகே வைகையாற்றில் / வைகைக் கரையில் 1961ல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு, தற்போது மதுரை மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது ந்திதொல்லியல் துறையைச் சேர்ந்த கே.ஜி.கிருஷ்ணன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது (எபிகிராபிகா இன்டிகா வால்யும் 38 பார்ட் 1, 1969, pp. 27 - 32). திரு.கே.ஜி.கிருஷ்ணன் கல்வெட்டின் 8 ஆம் வரியைப் படித்த போது 'கோ சேந்தன் மற்றைம்பது' என்று படித்துள்ளார். திரு.கிருஷ்ணன் பல சுவையான தகவல்களை முன் வைத்து இந்தக் கல்வெட்டை 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசாண்ட பாண்டிய மன்னன் சேந்தன் காலத்தது என்று முடிவு செய்கிறார்.   
 
டாக்டர்.இரா.நாகசுவாமி அவர்களும் இக்கல்வெட்டைப் படித்தபோது 'கோ சேந்தன் மாறனைம்பது' (கோ சேந்தன் மாறன் ஐம்பது) என்று படித்துள்ளார். அதாவது கோ சேந்தன் மாறனின் ஐம்பதாவது ஆட்சியாண்டு என்று பொருள் கொள்கிறார். 


கோ நெடுமாறன் மற்றும் ஸ்ரீ வல்லபன் என்னும் விருதுப் (பட்டப்) பெயர்களை ஒருங்கே  பெற்ற பாண்டியன் யார் என்ற கேள்விக்கு டாக்டர். இரா.நாகசுவாமி பொருத்தமான ஆதாரங்களுடன் விடையளிக்கிறார். பெரிய சின்னம்மனூர் மற்றும் தளவாய்புறம் செப்பேடுகள் பராந்தகன் நெடுஞ்சடையனை ஸ்ரீ வல்லபன் (அபிஷேகநாமா) என்று குறிப்பிடுகின்றன. ஆனால் கோ மாறன் என்ற பட்டப் பெயர் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை என்கிறார் நாகசுவாமி. எருக்கங்குடி (சாத்தூர், இராமநாதபுரம்) கல்வெட்டு ஒன்று கோ நெடுமாறன் மற்றும் ஸ்ரீ வல்லபன் என்னும் இரண்டு பட்டங்கள் தாங்கிய பாண்டியன் முதலாம் பராந்தக வரகுனன் மகன் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் (கி.பி. 815 - 862) என்று முடிவு செய்ய உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவன் மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான்.  புதுக்கோட்டை சித்தன்னவாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" என இவன் கல்வெட்டு  கூறுகிறது. இவனது படை குண்ணூர், சிங்களம், விழிஞம் ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பாண்டிய அரசர்கள் ஆட்சி செய்த ஆட்சியாண்டுகள் பற்றிய தெளிவு கிடைக்கின்றது. பாண்டியன் சேந்தன் மாறன் குறைந்த பட்சம் ஐம்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளான். இவனே பாண்டிக்கோவையின் பாட்டுடைத் தலைவன்ஆவான்.

ஞானசம்பந்தர் (640-656 A.D.) (மாமல்ல I, பாண்டியன் அரிகேசரி நெடுமாறன்  சம காலத்தவர்), அப்பர் (580-660 A.D.) (மஹேந்திரன், மாமல்ல மற்றும் பாண்டியன் அரிகேசரியின் சமகாலத்தவர்), பெரியாழ்வார் (800-885 A.D.) (பாண்டியன் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லப சமகாலத்தவர்), நம்மாழ்வார் (745 to 780 A.D.) போன்றோர் வாழ்ந்த காலம் பற்றிய தெளிவு கிடைக்கின்றது.

எனவே பெரியாழ்வார் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் என்று ஐயத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளலாம்.  பெரியாழ்வாரே பாண்டியன் கோ நெடுமாறன் தன் சமகாலத்வர் என்று மூன்று இடங்களில் குறிப்பிட்டுள்ளார்:
  1. பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குலபதி. (பெரியாழ்வார் திருமொழி 5-4-7) 
  2. கொன்னவில் சுடர் வெல் கோன் நெடுமாறன் (பெரியாழ்வார் திருமொழி 4-2-7 ) 
  3. குறுகாத மன்னரை கூடு கலக்கி (பெரியாழ்வார் திருமொழி 4-2-8)
குருபம்பரை நூலிலும் பாண்டியன் ஸ்ரீ வல்லபன் பெரியாழ்வாரின் சமகாலத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டாள் திருப்பாவை பாடி அருளிய காலம்

வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய அபூர்வ வானியல் நிகழ்வு கி.பி. 885 நவம்பர் 25 மற்றும் கி.பி. 886 டிசம்பர் 24 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெள்ளியும் வியாழனும் எதிரெதிரே தோன்றி மறையும் நிகழ்வு துல்லியமாக நிகழ்ந்துள்ளபடியால் இந்த தேதிகளில் ஒன்று மட்டும் ஆண்டாள் பாடி அருளிய திருப்பாவை 13 ஆம் பாசுரம் பாடிய நாளாக இருக்க வாய்ப்புள்ளது.

மேற்கோள்கள்
  1. A New Pandya Record and the Dates of Nayanmars and Alvars. Nagasamy, R. Tamil Arts Academy. http://tamilartsacademy.com/articles/article08.xml
  2. Dating of Thirruppavai from paasurams 1, 3 & 4 http://jayasreesaranathan.blogspot.in/2008/12/dating-of-thirruppavai-from-paasurams-3.html 
  3. Kings mentioned by Periyazhvar Non Random Thoughts. http://www.got-blogger.com/jayasreesaranathan/?p=1111
  4. 13 ஆவது நாள் - வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று https://groups.google.com/forum/#!topic/mintamil/MbUUgV2HAxc
  5. மார்கழி-13: ஆண்டாளும் அப்துல் கலாமும்! http://madhavipanthal.blogspot.in/2008/12/13.html
  6. செந்தில் குமார் பக்கங்கள் http://kpsendilkumar.wordpress.com/

Friday, December 5, 2014

எதிலப்பா நாயக்கர், தளி பாளையக்காரர்: ஆங்கிலேயத் தூதனைத் தூக்கிலிட்ட கல்வெட்டு

The tomb of the Englishman on which the early epitaph dating back to 1801 was discovered, in Coimbatore | Express
தளி பாளையப்பட்டில் உள்ள ஆங்கிலேயாதூதனின் சமாதி, தமிழ்க் கல்வெட்டு
பொதுவாக ஆங்கிலேயர்கள் நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்து தூக்கில் போடுவது வழக்கம். ஆனால் இந்திய அரசர்களின் யாரேனும் ஒருவர், ஒரு ஆங்கிலேயாரையாவது தூக்கில் போட்டிருக்கிறார்களா? ஆமாம் கொங்கு நாட்டில் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு பாளையப்பட்டு கிராமத்தில் இந்த சம்பவம் 1801 ஆம் ஆண்டு நிகழ்ந்திருக்கிறது.
 
டாக்டர் எஸ்.ரவி பிரபலமான தொல்லியல் அறிஞர், சிறந்த கல்வெட்டாய்வாளர். இவர் உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பாளையப்பட்டு கிராமத்தில் இருந்த ஒரு தமிழ்க் கல்வெட்டைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.  இப்பகுதியில் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இப்பகுதியின் பாளையக்காரகளால் நிகழ்ந்த கிளர்ச்சி பற்றிப் பேசுகிறது. ஒரு ஆங்கிலேயத் தூதன் எதிலப்பா  நாயக்கர் எனும் தளி பாளையக்காரரால் தூக்கிலிடப்பட்டது பற்றிய சரித்திரம் இக்கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது.  இது பற்றி இப்பதிவில் விரிவாகக் காண்போம்

மதுரையில் 16 நூற்றாண்டில் இருந்து நாயக்கர் ஆட்சி மலர்ந்தது. பெரும்பான்மையான பாளையங்களில் தெலுங்கு மொழியை பேச கூடிய ராஜகம்பளம் அல்லது தொட்டிய நாயக்கர்கள் என்று சொல்லப்படும் கம்பளத்து சமுதாய மக்களே ஆண்டு உள்ளனர். இவர்கள் வடுகர் என்றும் தமிழ் நாட்டில் அழைக்கப்படுகிறார்கள். இவர்களது பூர்விகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். இப்பகுதி கம்பளம் என்றும் கம்பள நாடு என்றும் அறியப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டு வந்த பாளையக்காரர். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்.

எதிலப்பா நாயக்கர் தளி பாளையப்பட்டை ஆண்டு வந்த பாளையக்காரர். இவரும் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தில் பிறந்தவர். கட்டபொம்மனின் வம்சாவளியைச் சேர்ந்தவர். 

உடுமலைப்பேட்டையிலிருந்து 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தளி பழையப்பட்டு என்பது வீரபாண்டிய கட்டபொம்மனால் நிறுவப்பட்ட சண்டை பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இராணுவ முகாம். இது பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
எதிலப்பா நாயக்கர், 1797 – 1798 இல் நடந்த முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் இணைந்து  ஆலன்துரையின் ஆங்கிலேயப்படைக்கு எதிராகப் போராடியவர். பானர்மென் எனும் ஆங்கிலேயத் தளபதி செப்டம்பர் 5, 1799 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டார். கடும் போர் நடைபெற்று பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். என்றாலும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலை ஏற்பட்டபோது வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறவே செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.

1799 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட பிறகு பல பாளையக்காரர்கள் ஏதிலப்பா நாயக்கரின் தலைமையில் ஒன்றிணைந்தனர். இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போர் 1801 இல் நிகழ்வதற்கு இவர் தலைமையில் அமைந்த கூட்டணி காரணமாக அமைந்தது. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி படை வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை புத்துயிர் பெற்றது. ஊமைத்துரையைக் கைது செய்வதற்கு வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றார். பின்னர் இவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டு 24.05.1801 இல் கோட்டையைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர்.

ஆங்கிலேய அதிகாரிகள் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு உதவிய பாளையக்காரர்களின் பட்டியலைத் தயார் செய்தனர். எதிலப்பா நாயக்கர் தான் இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சிப் போருக்கு மூல காரணம் என்று தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், தூதர்களை நாயக்கரின் கோட்டைக்கு அனுப்பினர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது பற்றி அறிந்து கொதித்துப் போயிருந்த நாயக்கர், ஆன்ட்ரே கட்டி என்ற அந்த ஆங்கிலேய தலைமைத் தூதனைப் பிடித்து சாகும்வரை தூக்கில் தொங்கவிட்டாராம். சடலத்தை அங்கிருந்த தோட்டாத்தில் புதைத்து விட்டாராம்.  இந்தச் சம்பவம் நடந்தது  வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு. இந்த ஆங்கிலேய தூதனின் சமாதியில் உள்ள தமிழ்க் கல்வெட்டு, தூதன் பெயர் ஆன்ட்ரே கட்டி என்றும் மரணித்த தேதி வியாழக்கிழமை, ஏப்ரல் 23, 1801 ஆம் ஆண்டு என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை நகரத்திலிருந்த
ஆங்கிறாய் கேத்தி பரங்கி
இருபத்தேழு வயதில்
தெய்வீகமாகி அடங்கின சமாது

 (Angirai Kethi, a twentyseven year old Englishman from Tanjore "attained divinity and buried here")

தேவராய நாயக்கர் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் இது. தூதனை தூக்கில் தொங்குவித்த மரம்கூட இந்தத் தோட்டத்தில் இருக்கிறதாம். இந்த சமாதி உள்ள தோட்டம் 'தூக்குமரத்தோட்டம்' என்று இந்த கிராமத்தவர்களால் அழைக்கப்படுகிறது. காலகாலமாய் கம்பளத்து நாயக்க மக்களிடம் பேச்சு வழக்கில் புளங்கி வந்த இக்கதை அரங்கசாமி கவுண்டரால் தொகுக்கப்பட்டு 'எதிலப்பன் வரலாறு' என்று நூல் வடிவம் பெற்றுள்ளது.

மேற்கோள்
  1. 19th century epitaph reveals new history. The New Indian Express.  05th August 2013
  2. The Kongu Chieftain who hanged a British Messenger. The New Sunday Express. 19 October 2014
  3. வீரபாண்டியகட்டபொம்மனின் 255 வது பிறந்த நாள். தமிழ் மீடியா, டிசம்பர் 05, 2014

Wednesday, December 3, 2014

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது: கிளுகிளுப்பான தமிழ் தூது இலக்கியம்



கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்ற இரண்டு நூற்கள் பதினேழாம் நூற்றாண்டில் தோன்றிய தூது இலக்கியங்களாகும்இந்த இரண்டு நூற்களையும் இயற்றியவர் சுப்ரதீபக் கவிராயர்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 17 ஆம்   நூற்றாண்டின் தொடக்க காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்கள் ஆட்சி மலர்ந்தது. நாயக்க மன்னர்கள் தஞ்சை, மதுரை போன்ற பகுதிகளை விஜயநகர அரசின் பிரதிநிதிகளாக ஆளத் தொடங்கினார்கள். இவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் சரியாக ஆதரிக்கவில்லை.

நாயக்க மன்னர்கள் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் போதிய ஆதரவு அளிக்காவிட்டாலும் பொதுமக்கள், ஜமீன்தார்கள் மற்றும் செல்வந்தர்களின் ஆதரவு போதிய அளவில் தமிழ் சிற்றிலக்கியங்களுக்கு  இருந்தது எனலாம். இப்படி சில ஜமீன்தார்கள் மற்றும் செல்வர்களின் ஆதரவில் 17 ஆம் நூற்றாண்டில் காதல், மடல், தூது, நொண்டிநாடகம் போன்ற காமச்சுவை ததும்பும் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டன. நிலக்கோட்டை (இன்று ஜமீன் என்று அறியப்படுகிறது) நாயக்க சிற்றரசரான கூளப்ப நாயக்கர்  விரலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியத்துக்கு ஆதரவு தந்துள்ளார்.
 
உயர்திணை மாந்தர்களான புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, தாய் மற்றும்
எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு முதலிய அஃறிணைப் பொருட்களைத் தூது செல்லும்படி ஏவிவிடுவது போன்று அமைக்கும் இலக்கியம் தூது இலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது. தலைவி தலைவனிடத்தேயும், தலைவன் தலைவியிடத்தேயும் அனுப்புகின்ற தூது அகத்தூது என்றும்; அரசன் பகைவரிடத்தேயும், புலவர் வள்ளலிடத்தேயும் அனுப்புகின்ற தூது புறத்தூது என்றும் வகைப்படுத்துகிறார்கள். தூது நூல்கள் கலிவெண்பா என்ற யாப்பில் இயற்றப்பட வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு அனுப்பும் பல அகத்தூதுகள் காதலால் கட்டுண்டு பின் பிரிவுத் துயரால் துன்புறும் தலைவன் மற்றும் தலைவியரிடையே நிகழ்ந்தன. ஒருவர்
தனது பிரிவுத்துயரை மற்றவருக்கு அறிவிக்க புலவர், பாணர், கூத்தர், அறிவர், பார்ப்பான், பாங்கன், விருந்தினர்,  இளையர், பாடினி, விறலியர், தோழி, பூவை, தாய் போன்ற மனிதர்களையும், எகினம், மயில், கிளி,   குயில், வண்டு அன்னம், மான், பூநெல் போன்ற பிற உயிரினங்களையும், மழை, மேகம், தென்றல் போன்ற அஃறிணைப் பொருட்களையும் தூதாக அனுப்பினார்கள். முதன்முதலில் கி.பி. 14ஆம் நூற்றாண்டில் நெஞ்சுவிடு தூது என்ற தமிழ் தூது இலக்கியம் தோன்றியது. தொடர்ந்து அன்னம் விடு தூது, காக்கை விடு தூது, கிள்ளை விடு தூது, மான் விடு தூது, மேகம் விடு தூது போன்று பல தூது இலக்கியங்கள் தோன்றின.

சில சங்க இலக்கியப் பாடல்களில் தலைவன் தலைவியரிடையே தூது அனுப்பும் செய்தி காணப்படுகிறது. பிற்காலத்தில் தோன்றிய சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் கடவுளர்களைத் தலைவனாகப் பாவித்து தூது அனுப்பும் செய்தி வருகிறது. தூது என்ற சிற்றிலக்கிய வகை தூது பற்றிய அடிப்படையில் அமைந்தது. பிரபந்தங்கள் என்னும் சிற்றிலக்கிய வகை வடமொழியில் உள்ளது. வடமொழியில் தூது இலக்கியம் சந்தேசம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதுமகாகவி காளிதாசன் இயற்றிய மேக சந்தேசம் (மேகத்தைத் தூது விடுவது) பிரபல தூது இலக்கியமாகும்.

கூளப்பநாயக்கன் காதல் மற்றும் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது 

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது  1728 இல் நிலக்கோட்டையை ஆண்ட 1728-ல் நிலக்கோட்டையை ஆண்ட கூளப்பநாயக்கன் என்னும் நாயக்க சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்ததுஇத்தலைப்பில் கவிஞர் கண்ணதாசனின் கிளுகிளுப்பான உரையுடன் இணைந்த கூளப்ப நாயக்கன் காதல் என்னும் நூல் வெளிவந்துள்ளது.

விறலிவிடு தூதில் பொதுவாகக் காணப்படும் கதை இதுதான்: உயர்குடிப் பிறந்த ஆண்மக்கள் காமம் துய்க்க தாசியை நாடுவதும், இதன் மூலம் பொருள் இழத்தலும் நாளடைவில் தாசியால் அவமதிக்கப்பட்டு அவளைவிட்டு வெளியேறுதலும் இறுதியில் விறலியைத் தூதுவிட்டு, குடும்பத்துடன் இணைந்து மனைவி மக்களுடன் இன்பமாக வாழ்தலும் ஆகும். எனவே விறலி விடு தூது இலக்கியங்கள் எல்லாம் கிளுகிளுப்பான சிற்றின்ப வருணனையுடன் கூடிய பாடல்களுடன் கதை சொல்லப்படுகிறது. இறுதியில் நல்லின்பம் பெற ஆண்மக்களுக்கு அறிவுறுத்துவது. என்றாலும்  புலவரின் நோக்கம் சிற்றின்பம் பற்றி விலாவரியாகச் சொல்வதுதான். 

விறலி விடு தூது இலக்கியங்களில் கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது விரகம், காமம், காதல், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து இயற்றப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாசிப் பெண்களின் ஆடையணிகளான  ரவிக்கை, பொற் சரிகை, கிண்ண முலைக் கச்சு, சந்திர காந்தக் கச்சு என்பது பற்றியெல்லாம் விலாவரியாக தெரியவருகிறது.

எனவே இதற்கு அந்தக்காலத்திலேயே பெரிய வாசகர் வட்டம் இருந்திருக்கிறது. சிற்றின்பப் பிரியர்களான சிற்றரசர்களும், பாளையக்காரர்களும் ஒன்றாகக் கூடி கேட்டுச் சுவைப்பார்களாம். காமம் பற்றிப் பேசினாலும் இவ்விலக்கியங்களில் வரலாறு, பண்பாடு, கலை மற்றும் அரசியல் பற்றிய அரிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. 

Thursday, November 27, 2014

அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 2: வீரப்பூர் பொன்னர் - சங்கர் கோவில் மாசித் திருவிழா

வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவில்
பொன்னர் சங்கர் கோவில்

பொன்னர் சங்கர் கோவில்

பொன்னர் சங்கர் சன்னதி

நெல்லிவாளநாடு வரைபடம்


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன கவலை? உங்களுக்கு பயம் எதற்கு?” என்று கூறி அருள்பாலிக்கும் காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் அமைந்து மிரட்டும் விழிகளுடன் விளங்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகியன உள்ளன. அருகே வீரமலை மீது பெரியக்காண்டியம்மன் தவம் செய்த இடமெனக் கூறப்படும் தவசு கம்பம் உள்ளது.

வீரமலையின் ஒரு பகுதியில் கூவனாம் பள்ளம், வீரப்போர் நடந்த இடமாகக் கருதப்படும் படுகளம் கோவில், அண்ணன்மார் சுவாமி கதையில் வெள்ளாங்குளம் என்று கூறப்படும் இனாம்குளத்தூர், வளநாடு அண்ணன்மார் கோட்டை கோவில், கன்னிமார் அம்மன் கோவில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள செல்லாண்டியம்மன் கோவில் என வீரப்பூரை, பொன்னர்- சங்கரை மையமாகக் கொண்ட கோவில்கள், முக்கிய இடங்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஏராளம் உள்ளன.

முன்பெல்லாம் (சுமார் 30 - 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோவில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர்ப் பந்தல் (நீர்மோரும் கிடைக்கும்) அமைத்து தரும காரியம் செய்து வந்தனர்.

அங்குள்ள பெரிய கோவிலில் (வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன் கோவிலை அங்கு இவ்வாறு சொல்வார்கள்) குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதாக மாறிவிட்டது. புறப்பட்டு வரும் வழியில் கூடுதலாக படுகளம் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு வருவதோடு முடிந்து விடுகிறது. ஆனால், மாசி மாதத் திருவிழாவின்போது வீட்டுக்கு ஒருவரேனும் சென்று நெய்விளக்குப் போட்டுவிட்டு வருவது வழக்கத்தில் உள்ளது.

அண்ணன்மார் சாமி கதை நடந்த இடமாக கருதப்படும் வீரப்பூரில் வருடம் தோறும் மாசி மாதம் நடைபெறும் திருவிழாவைக் காணக் கண்கோடி வேண்டும். பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் அந்த பத்து நாட்களும் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இலட்சக்கணக்கில் கூடும் மக்கள் கூட்டத்தால் இப்பகுதியே திமிலோகப்படுகிறது.

வீரப்பூர் கோவிலில் மாசித் திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். இதைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறுகிறது. கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடிவருவார்கள். முதல் நாள் வீரப்பூரில் பெரியக்காண்டியம்மன், பொன்னர் - சங்கர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 

பொன்னர் - சங்கர் கோட்டை எழுப்பி ஆட்சி புரிந்த நெல்லி வளநாட்டில் திருவிழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வேட்டுவர் படைகளை வீழ்த்துவதற்காக பொன்னர் - சங்கர் படுகளம் சாய்ந்த நிகழ்வைப் போற்றும் படுகளத் திருவிழா தொப்பம்பட்டியில் நடைபெறுகிறது.  தொப்பம்பட்டியில் படுகளம் சாய்ந்தவர்களை பொன்னர் - சங்கர் உடன்பிறந்த தங்கை அருக்கானித் தங்காள் புனித நீர் ஊற்றி உயிர்த்து எழுப்பும் நிகழ்வுடன் இந்தத் திருவிழா தொடங்குகிறது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வேடபரி திருவிழா எட்டாம் நாள் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் குதிரை வாகனத்தில் அமர்ந்து பொன்னர் முன்னே செல்கிறார். பெரியக்காண்டியம்மன் யானை வாகனத்தில்  எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் குதிரை மற்றும் யானை வாகனங்களைச் சுமந்து வருகிறார்கள். பொன்னர் - சங்கரின் தங்கை அருக்காணித் தங்காள் கையில் தீர்த்தக் குடத்துடன் வேடபரி நிகழ்வில் வலம் வருகிறாள்.

மாலை 5.30 மணியளவில் வீரப்பூருக்கும்-அணியாப்பூருக்கும் இடையே உள்ள இளைப்பாற்றி மண்டபத்தில் பெரியக்காண்டியம்மனும், அருக்காணித் தங்காளும் ஓய்வெடுக்க, குதிரை வாகனத்தில் அமர்ந்து அணியாப்பூர் செல்லும் பொன்னர் மாலை 6.30 மணியளவில் அம்பு போட்டு இளைப்பாற்றி மண்டபம் திரும்பவதுடன் வேடபரி திருவிழா நிறைவு பெறுகிறது. வேடபரித் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து, தேரோட்ட திருவிழா ஒன்பதாம் நாள் நடைபெறுகிறது. அன்றைய தினம் கோவில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. பத்தாம் நாள்  மஞ்சள் நீராட்டுடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது.

குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபடுபவர்கள்தான் மாசித் திருவிழாவிற்கு போய்வர வேண்டுமென்பதில்லை. நீங்கள்கூட வீரப்பூர் திருவிழாவிற்கு ஒருமுறை நீங்கள் போய் வந்தால் பின்னர் தொடர்ந்து வருடாவருடம் போய் வருவீர்கள்.


ஆய்வு மற்றும் தரவுகள்

ஒரு மக்கள் குழுவினரிடையே வழங்கி வரும் அல்லது வழங்கி வந்த பாடல்கள், கதைகள், பழைய மரபுக்கதைகள், தொன்மங்கள், பழமொழிகள், புதிர்கள், நகைப்புகள் முதலான இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. கொங்கு நாட்டுப் பகுதியில் பல நாட்டுப்புற இலக்கியங்கள் பல இடங்களில் மலர்ந்துள்ளன. அண்ணமார் சாமி கதை இவற்றுள் முன்னோடியானது. கிட்டத்தட்ட 400 - 450 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில்) கரூர் பகுதிகளில் வரலாற்றுக் கதைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகின்றது.

வாய்மொழி மரபு வழியே பல காலம் வழங்கி வந்த அண்ணமார் சாமி கதையையும், கதைநிகழ்ச்சிகளையும், சம்பவத் தொடர்களையும் பின்னால் எழுதப்பட்ட நூல்கள் சற்று செம்மைப்படுத்தின. அண்ணமார் சாமி கதை பற்றி பற்பல புத்தகங்கள் உள்ளன என்றாலும் பிச்சை பட்டரின் "அண்ணமார் சுவாமி கதை", பெரிய எழுத்து கதைப் புத்தகமாக பாதிப்பிக்கப்பட்ட  பி.ஏ. பழனிசாமி புலவரின் "பொன்னழகரென்னும் கள்ளழகர் அம்மானை," "வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்" மற்றும் எரிசினம்பட்டி இராமசாமியின்  "குன்றுடையான் வமிச வரலாறு" ஆகிய வரலாற்று நூல்களே உண்மையான கதையைக் கூறுவதாக நம்பப்படுகிறது. கவிஞர் சக்திக்கனல் (இயற்பெயர் கல்வெட்டுப்பாளையம் பெரியசாமி பழனிசாமி) அவர்கள் பதிப்பித்த பிச்சன் கவியின் “அண்ணன்மார் சாமி கதை” சிறு மரபில் (Little Tradition) தோன்றிய காப்பியம்.

அண்ணமார் சாமி கதையைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட மானுடவியல் அறிஞரான (Anthropologist) ப்ரெண்டா பெக்  (Brenda E.F. Beck) என்ற அமெரிக்க (from University of British Columbia), / கனடா நாட்டுப்  பெண்மணி (now living in Toronto) இது ஒரு நாட்டார் காப்பியம் என்று மதிப்பிடுகிறார்.  இவர் வீரப்பூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை அலைந்து திரிந்து தம் சொந்த செலவில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இவர் சேகரித்த ஆவணங்கள் 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே  இவ்வாய்வாளர் அண்ணன்மார் சாமி கதையை தமிழில் முதல் நாட்டார் காப்பியம் என்று  அடையாளப்படுத்தியுள்ள மதிப்பீடு மிகவும் பொருத்தமானதாகும்.

பொன்னர்- சங்கர் கதையை நாடகமாக (தெருக்கூத்து வடிவம் - பாடல், அதற்கான விளக்கமாக கொஞ்சம் வசனம்) நடித்துவரும் குழுக்கள் ஏராளம் உள்ளன. வீரப்பூர் திருவிழாக் காலங்களில் குறிப்பாக படுகளம் அன்றும் வேடபரித் திருநாளன்று இரவும் சுமார் நூறு நாடகக் குழுக்களேனும் ஆங்காங்கே மேடை போட்டு அண்ணன்மார் கதையை நாடகமாக நடித்து வரும் களமாக இன்றளவும் உள்ளது. குலதெய்வ வழிபாடு, வீரப்போர் நடந்த இடம் என்பதையெல்லாம் தாண்டி முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வளர்க்கும் இடமாகவும் வீரப்பூர் உள்ளதென்றால் அது மிகையல்ல.

படிப்பினை (Lessons Learned)

அண்ணன்மார் சுவாமி கதை அல்லது அண்ணன்மார் சாமி கதை கொங்கு நாட்டின் தேசிய இலக்கியமாகக் கருதப்படுகிறது (national literature of Kongu Nadu).
முற்பகுதிக் கதையோ இரு சகோதரர்களின் அண்ணன்மாரின் பெற்றோராகிய குன்னடையான் தாமரை நாச்சியார் ஆகியோருடைய துன்பம் நிறைந்த வாழ்க்கையையும், இவர்களுக்குப் ஒறம்பற பங்காளிகளே இடையூறாக விளங்கியதையும் சித்தரிக்கின்றது. பிற்பகுதிக் கதை கொங்கு வெள்ளாளர் தலைவர்களாகிய பொன்னரும் சங்கரும் வேட்டுவர் தலைவராகிய தலையூர்க் காளியுடன் வீரப்போர் புரிந்து மடிந்து போவதை விவரிக்கிறது.

கொங்கு நாட்டு வெள்ளாளர்களின் சமூக அமைப்பு, பண்பாடு, வெகுளித்தனம் (வெள்ளை உள்ளம்), உண்மைக்காக உயிர் கொடுக்கும் பண்பு போன்ற அம்சங்களை அண்ணன்மார் சாமி கதை தெளிவாக விளக்குகின்றது.

"சோளம் குத்திப் போட்டுக் கஞ்சி குடித்தல், ஒன்றும் அறியாதானை வெள்ளை மனத்தானை, ‘மங்கு மசையா’ எனல், முறைப்பெண்ணை மணப்பதில் மகிழ்ச்சி, குடி கெடுப்பானைக் கூழை எனல், கருவேல மரத்தில் கட்டி அடித்தல், சாட்டால் பொதியளத்தல், கொங்கணக் கம்பளியும் போட்டுக் கொப்பிகட்டிய கவையும் ஊன்றி நடத்தல், தமுக்கடித்துச் செய்தியை ஊரார்க்கு அறிவித்தல், அம்பலத்துக்கு ஆணும் அடிக்கிளைக்குப் பெண்ணும் என்ற  பழமொழி, ‘அருள்வரப் பெறுதலைச் சன்னத்தம்’ ஆதல் எனல், இணுங்குச் சோளம் குத்தல், மணியம் கணக்குப்பார்த்தல், அஞ்சுமணிக் கயிற்றால் அடித்தல், குடைசீத்தை முள்ளைக் கோழியின் காலில் கட்டுதல், செம்பூலாஞ்செடி வனத்தில் புலி வாழ்தல், புரவிக்குப் புலிநகச் சங்கிலி அணிவித்தல், பல்லி சொல் கேட்டல், தெய்வங்களுக்குப் பூசைபோடுதல், குதிரையைப்பலவாறு அலங்கரித்தல், கனவு கண்டு சொல்லுதல், உடன் பிறப்பை எண்ண ஓரானைப்பலம் வரும் எனல், பிரம்புக் கூடையில் சோறு இடல், பல்லாங்குழியாடுதல், மாவிலங்க மரத்தில் மரநாழி கடைதல், அதன் மேல் பொன்முலாம் பூசுதல், ஊணான் கொடி பிடுங்கிக் கட்டுதல், தேங்காய் உடைத்து சகுனம் காணுதல், தாம்பூலம் தரித்தல் எனப் பற்பல செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன."

பல லட்சம் மக்கள் வந்து செல்லும் இந்த வீரப்பூர் மண் வீரம் விளைந்த மண். பாசத்தைச் சொல்லும் புண்ணிய பூமி. நம்பிக்கையைப் போற்றி வளர்த்த மனிதர்கள் வாழ்ந்த தலம்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக சரித்திரத்தின் சாட்சி…!

மேற்கோள்கள்

  1. அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்.  (download from Scribd) http://www.scribd.com/doc/28974760/%E0%AE%85%E0%AE%A3-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0
  2. அண்ணன்மார் சுவாமி கதை. http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?pno=1&book_id=237
  3. அண்ணமார் சுவாமி வீரவரலாறு. https://www.facebook.com/truegodannamar
  4. அண்ணமார் கதை எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் தொகுப்பு) உடுக்கடிக்கதை - பூளவாடி பொன்னுசாமி http://annamarstory.blogspot.in/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html
  5. பொன்னர் - சங்கர் கதையில் புகையும் சர்ச்சை http://vettuvagoundersangam.blogspot.in/2011_04_01_archive.html
  6. எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு) - Annamar swami kathai (Pichai Pattan ) full download link http://www.esnips.com/web/Annamarswamikathai.
  7. Annanmar Story. Sathy R. Ponnuswamy. Kongu.Us 
Youtube
THF அண்ணன்மார் கதை (கொங்குநாடு) by Subashini Tremmel


Ponnar Sankar Story Premkumar Balasubramaniam

Wednesday, November 19, 2014

அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 1: கொங்கு நாட்டின் தேசிய இலக்கியம்

பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள், வீரப்பூர்
பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்
பொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்
நெல்லிவள நாடு வரைபடம்


'அண்ணன்மார் சுவாமி கதை' கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே ஊறுப்பட்ட செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதைப்பாடலாகும். புகழ்மிக்க இக்கதைபாடல்  ‘அண்ணன்மார் கதை’ மற்றும் ‘குன்னடையான் கதை’ என்ற பெயர்களில் அறியப்படுகின்றது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். வெள்ளாளக் கவுண்டர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது. காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப் பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயம். பழங்காலத்தில் விசயஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தை கவுண்டர்கள் ஆண்டதாக கொங்கு தேசராசாக்கள் என்னும் நூல் சொல்கிறது. விஜயநகர அரசு வம்சம் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முன்பிருந்தே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விஜய நகர அரசர்கள் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்தை பல்வேறு குறுநிலங்களாகப் பிரித்து அமைத்தார்கள். இந்த குறுநிலங்களின் பகுதிகளை கவுண்டர்களும் குறுநிலத் தலைவர்களாக இருந்து பரிபாலனம் செய்து வந்திருக்கின்றனர்.

இந்த கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல் (Heroic Ballad) இது.  பொன்னர் சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டை காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்றெல்லாம் அண்ணன்மார் சாமி கதை நமக்குச் சொல்கின்றது.

Monday, November 3, 2014

காரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம்: வெண்கலம் மற்றும் பித்தளை பற்றிய தமிழர்களின் உலோகக்கலை

கணிதக் கலையின் முக்கியத்துவம் கணக்கதிகாரம் என்ற நூலால் புலப்படும்.  காரி நாயனார்  என்ற புலவரால் கணக்கதிகாரம் என்னும் கணித நூல் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.  இவர் காவிரி பாயும் சோழநாட்டின் கொறுக்கையூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். மன்னர் வழி வந்த இவரின் தந்தை பெயர் புத்தன்.

"கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரி"

"பொன்னி நாட்டு பொருந்திய புகழோன்...
புத்தன் புதல்வன் கறியென்பவனே."

என்று இந்நூலின் சிறப்புப் பாயிரம் சொல்கிறது.

கணக்கதிகாரத்தில்  அப்படி என்னதான்  இருக்கிறது?

கணக்கதிகாரம் செய்யுட்கள் வெண்பா, கட்டளைக்கலித்துறை மற்றும் நூற்பாக்களால் ஆனது. இந்நூலில் ஆறு பிரிவுகளில் 64 வெண்பாக்களும், 45 புதிர் கணக்குகளும் உள்ளன: நிலம் வழி (23 பாக்கள்), பொன் வழி (20 பாக்கள்), நெல் வழி (06 பாக்கள்), அரிசி வழி (02 பாக்கள்), கால் வழி (03 பாக்கள்), கல் வழி (01 பாக்கள்), பொது வழி (05 பாக்கள்) என்ற ஆறுவழிக் கணக்குகளையும் புலவர் அறுபது செய்யுள்களால் உணர்த்தினார் என்பதை:

"ஆதிநிலம் பொன்னெல் லாரிசி யகலிடத்து
நீதிதருங் கால் கல்லே நேரிழையாய் - ஓதி
உறுவதுவாகச் சமைத்தேன் ஒன்றெழியா வண்ணம்
அறுபது காதைக்கே யடைத்து."

ஆறு வழிக் கணக்கு மட்டுமல்லாது வேறு பல கணக்குகளையும் இந்நூலில் நீங்கள் பார்க்கலாம். இக்கணக்குகள் கற்பவர்க்கு திகைப்பும், வியப்பும், நகைப்பும், நயப்பும் விளைவிக்கும் என்பது திண்ணம்.
Related Posts Plugin for WordPress, Blogger...