தமிழர்கள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாட்டில் மூன்று விதமான வழிபாடுகளைக் காண இயலும். ஊர்க் காவல் தெய்வ வழிபாடு, கிராம தெய்வம் அல்லது கிராம தேவதை வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகள் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபு எனலாம். குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர்.
பெண் தெய்வ வழிபாடுகள்
தன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகுந்த சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் மற்றும் கன்னித் தெய்வங்கள் ஆகிய பெண்தெய்வங்களே மிகுதி எனலாம். இறந்து போன கன்னிப்பெண்கள், பத்தினிப்பெண்கள், மானம் காப்பதற்காக உயிரைத் துறந்தவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாயினர். உதாரணம் - அங்காளம்மன், இசக்கி, உச்சிமாகாளி, எல்லையம்மன், கண்டியம்மன், காளியம்மன், சீலைக்காரியம்மன், சோலையம்மன், திரௌபதையம்மன், பேச்சியம்மன், பேராச்சி, மந்தையம்மன், முத்தாலம்மன், வீருசின்னம்மாள், நாச்சியம்மன், ராக்காச்சி, ஜக்கம்மா போன்றோர்.
காவல் தெய்வ வழிபாடுகள்
இது போல பல குடும்பங்கள் அல்லது சமூகம் அல்லது நாடு விளங்க தங்கள் இன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆண்கள், போரில் மாண்டவர்கள், தவறாகத் தண்டிக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் எனத் தெரிந்துகொண்டு மரியாதை செய்யப்படுபவர்கள் எல்லாம் காவல் தெய்வங்களாக ஊருக்கு வெளியே வைத்து வணங்கப்படுகிறார்கள். உதாரணம் - ஐயனார், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்கள். சில ஆண் தெய்வங்கள் பரவலாக வணங்கப்படுவதால் இவை சில முதன்மைத் தெய்வங்களாயின. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வணங்கப்படும் பல ஆண் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்களாயின.
மாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு
மாசி பெரியசாமி ஒரு துணைமை (கிராம) காவல் தெய்வம். இவருக்கு சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக் குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது. மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கானகம்பீரமாக காட்சியளிக்கிறார்.