 |
Picture Courtesy: Radiocarbon Dating. Science Courseware |
தமிழகத்தில் நடந்த, அகழாய்வுகளில், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க அகழ்வாய்வுகள் மூலம் தமிழர்களின் நாகரிகம்,
சிந்து-சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதற்கான தரவுகள் கிடைத்துள்ளன.
இந்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டம் 2004 ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் (திருநெல்வேலி சமீபம்) மேற்கொண்ட அகழாய்வில் 2800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முதுமக்கள் தாழியில் அடைத்து புதைக்கப்பட்ட 12 மனித எலும்புக்கூடுகள் சற்றும் கலையாத நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புகள் தமிழ் நாட்டில் நிலவிய பண்டைய பெருங்கற்கால வரலாறு மற்றும் தமிழ் கலாசாரத்தை அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்க உதவும் என்று தொல்லியல் அறிஞர்கள் கருகின்றனர். பெருங்கற்கால நாகரிகமே தென்னிந்தியாவின் மிகவும் பழைமையான நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். என்றாலும் இவ்வகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் பெருங்கற்காலத்திற்கும் முந்தையது எனலாம். (தி இந்து (ஆங்கிலம்) ஏப்ரல் 3, 2005)
2010-ஆம் ஆண்டு நடந்த பொருந்தல் அகழாய்வில் (பழநி அருகில் உள்ள ஊர்) ஒரு கல்லறையைத்
தோண்டும்போது அங்கு இருந்த பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் கிடைத்திருக்கிறது -
முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைத்திருக்கிறது. தானியங்களை காலக்
கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவீன முறையான ஆக்ஸிலேட்டர் மாஸ்
ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கி.மு. 490 என்று
வந்தது. அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிட்டிக்கல் ஆய்வுக் கூடத்திற்கு
அனுப்பியபோது இந்தக் காலக் கணிப்பு வந்தது அதாவது இந்த நெல் கிறிஸ்து
பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு
முந்தையது.
கொடுமணல் ஆய்வில் 10 செ.மீ., ஆழத்தில் எடுத்த மாதிரியினை பீட் அனலிட்டிகல் சோதனைக்
கூடத்திற்கும் 20 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை அரிசோனா பல்கலைக்
கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகின்றனவா என்று
பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்தன. அதனால் இதன் காலம்
என்பது கி.மு. 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம். (புதுச்சேரி
மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிவரும்
பேராசிரியர் ராஜனுடன், ‘புதிய தலைமுறை’ ஆசிரியர் மாலன் நிகழ்த்திய
உரையாடலில் இருந்து...)
தொல்லியலாளர்கள் அகழ்வாயுவின் போது பூமியில் புதையுண்ட எலும்புக் கூடுகள், நெல், இரும்புப் பொருட்கள், மணிக்கற்கள், வளையல் துண்டுகள், மட்பாண்ட ஒடுகள், சுட்ட களிமண் பொம்மைகள் போன்ற பொருட்களை அகழ்ந்தெடுக்கிறார்கள். தொல்லியல் அறிஞர்கள் அகழ்ந்தெடுத்த தொன்மப் பொருட்களின் காலம் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்கிறார்கள்? என்னென்ன சோதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன? இச்சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன? இப்பதிவு ரேடியோ கார்பன் டேட்டிங் மற்றும் தொன்மப் பொருட்களின் காலம் மெய்ப்பிக்கப்படுவது பற்றியது.
இவ்வாறு புதையுண்ட கரிமத் தொல்பொருள்களின் (organic artifacts) வயதினை மெய்ப்பிக்கப் பயன்படுத்தப்படும் சோதனை ரேடியோ கார்பன் டேட்டிங் என்று அழைக்கப்படுகிறது. இம்முறையைப் பயன்படுத்தி கனிமத் தொல்பொருள்களின் (inorganic artifacts) வயதை நிர்ணயம் செய்ய இயலாது என்கிறார்கள். ஏன் முடியாது?