Sunday, October 12, 2014

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக்'

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக்' 

தேவை ஒரு கேமெரா (Camera). டி.எஸ்.எல்.ஆர். (D.S.L.R) அல்லது எஸ்.எல்.ஆர். (S.L.R.) அல்லது மொபைல் கேமெரா (Mobile Camera) இவற்றில் எதேனும்  ஒன்று. கேமெரா இல்லாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள்  சென்னை ஃ போட்டோ வாக்கில் இணைந்து கொள்ளலாம். மாதத்தில் இரண்டு முறை - இரண்டாவது வாரம் மற்றும் நான்காவது வாரம். சென்னையில் ஏதாவது ஒரு இடம் தேர்வு செய்து தகவல்கள் -  ஃ போட்டோ வாக் தேதி, நேரம், சந்திக்கும் இடம், செல்ல வேண்டிய ரூட் (ரூட் மேப்புடன்)  ஃ பேஸ்புக் குரூப்பில் வெளியிடுவார்கள். இளைஞர்கள், இளைஞிகள், சீனியர் சிட்டிசன்ஸ் உட்பட அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து ஹாய் சொல்லி கைகுலுக்கிய பின்பு  சென்னை சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டு புகைப்படம் எடுப்பது வே(வா)டிக்கை.

இவ்வாறு நங்கள் சென்ற 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி  சென்று வந்த இடம் வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவன் கோவில். வேளச்சேரி பண்டைய சோழநாட்டின் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், கோட்டுர்புரம் வட்டத்தில் அமைந்திருந்ததாம். வேளச்சேரிக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு.

கட்டிடக்கலை

ஐந்து நிலை இராஜகோபுரம். சுவாமி சன்னதி: ஏகதள விமானம் கருங்கல் கட்டுமானம்; பாதபந்த அதிட்டானம், பாதச்சுவர், பிரஸ்தாரம், பூதவரி; செங்கல் கட்டுமானம் நாகர தளம், வேசர சிகரம். அம்மன் சன்னதி ஏகதள திராவிட விமானம்; கருங்கல் கட்டுமானம்; செங்கல் கட்டுமானம் திராவிட தளம் மற்றும் சிகரம்.
  
கோவிலில் இரண்டு பிரகாரங்கள். முதலாம் பிரகார கோஷ்ட சன்னதிகளில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை. தனி சன்னதிகளாக சண்டிகேஸ்வரர், லட்சுமி, வீணா சரஸ்வதி, பைரவர் மற்றும் தேவியருடன் சுப்பிரமணியர். இரண்டாம் பிரகாரத்த்தில் அமர்ந்த நிலையில் வீரபத்திரர். கொடிமரம் பலிபீடம்.

இங்குள்ள துவாரபாலர்களின் சிற்பங்கள் பல்லவ சிற்பங்களின் சாயலைப்பெற்றுள்ளதால் பல்லவ மன்னன் தந்தி வர்மன் தொடர்பு இருக்கலாமா என்று அறிஞர்கள்  யூகிக்கிறார்கள்.

கல்வெட்டுக்கள்

இக்கிராமம் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கொடையாகும். எனவே வேளச்சேரி ஒரு பிரம்மதேயம், ஒரு வரலாற்றுத் தீர்வு (Historic settlement) என்பது கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் ஆவணகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மதேய கிராமங்களின்  மகா சபை என்றழைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் உயர்குடி அந்தண நிலச்சுவான்தார்களால் நடத்தப்பட்டுள்ளது.  மகா சபைகளின் அன்றாட நடவடிக்கைகள், பதிவுகள், நிலக்கிரையங்கள், கொடைகள் யாவும் கோவில் கருவறை சுவர்களில் (வெளிப்புறம்) கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.  முதலாம் இராசராச சோழனின் தந்தை சுந்தர சோழன் தண்டீஸ்வரருக்கு 10-ம் நூற்றாண்டில்  எடுப்பித்த கோவில் என்று கருவறை சுவர்களில் உள்ள இக்கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இக்கிராமம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 - 1120) ஆட்சியாண்டுகளில் இவர் மனைவி பெயரால் தினச்சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக்கள்  இக்கோவிலில் ஒரு கிராம சபை திறம்பட உள்ளாட்சி நிர்வாகம் செய்த செய்தியினைத் தருகின்றன. இக்கிராமத்தில் இன்றும் வழிபாட்டிலிருக்கும் இரண்டு பழம்பெரும் சோழர்காலக் கோவில்களைக் காணலாம்.  முதலாவது, கண்டாராதித்த சோழன் (கி.பி. 949-957AD) ஆட்சி காலக் கல்வெட்டுக்களுடன் அமைந்த, தண்டீச்வரர் கோவில். மற்றொன்று செல்லியம்மன் கோவில். செல்லியம்மன் கோவில் ஏழு கன்னிமார்களுக்காக எடுப்பிக்கப்பட்டதாம். இவற்றுடன் மண்ணில் புதைந்திருந்த பல விஷ்ணு திருமேனிகள் இக்கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தவிர இக்கிராமத்தைச் சுற்றிலும் சில பழம்பெரும் வைணவ ஆலயங்கள் உள்ளன.


தலபுராணம்

நான்கு வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து சோமுகாசுரன் எனும் அரக்கன்  கடலுக்கு அடியில் கொண்டு சென்று சேற்றில் ஒளித்து வைத்தான்.   படைப்புத் தொழில் நின்று போகவே பிரம்மா மகா விஷ்ணுவிடம்  முறையிட்டார். விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சோமுகாசுரனை அழித்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். முனிவர்கள் வேள்வி நடத்தியதால் வேள்விச்சேரி என்ற பெயர் நாளடைவில் மருவி வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள்.

மார்க்கண்டேயன் குறைந்த ஆயுள், நிறைந்த ஞானத்துடன் பிறந்த குழந்தை. துவாரபயுகத்தில் பதினாறு வயதில் ஆயுள் முடியும் காலம் வரவே,  மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான், பாசக்கயிறை வீசினான். உடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டான். கயிறு லிங்கம் மீது பட்டவுடன் ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்ததுடன்  எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் பறித்தார். எமன் சிவத்தல யாத்திரையாக இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வேண்டவே அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து அவனது தண்டத்தையும் திருப்பி அளித்தார். எமன் கேட்டுக் கொண்டதற்கிணங்க  இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.
செல்லியம்மன்கோவில்
செல்லியம்மன் கோவில் தண்டீஸ்வரர் கோவிலிருந்து சற்று விலகி பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ளது. ஏழு கன்னிமார்களுக்காக எழுப்பப்பட்ட பழம்பெரும் (சிறிய) கோவில். கல்வெட்டுக்கள் உள்ளததாகச் சொன்னார்கள். திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
  
வேளச்சேரி தண்டீஸ்வாரார் ராஜகோபுரம்

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் கொடிமரம்

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் கல்வெட்டு


வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் முதலாம் பிரகாரம்

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் தட்சிணாமூர்த்தி

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் விஷ்ணு
வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் பிரம்மா

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் 63 நாயன்மார்கள்

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் எமன் தண்டம் பெற்ற கதை

வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் 4 வேதங்கள் வணங்கிய தலம்


வேளச்சேரி தண்டீஸ்வாரார் கோவில் எமதீர்த்தம்


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...