Saturday, July 11, 2015

உங்கள் குழந்தையைத் தெரிந்துகொள்ளுங்கள் - 4




இது தான் என் படம். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொளகொளன்னு இருக்குல்லையா?  இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?  முதலில் முன் மூளை, நடு மூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோமா?  

front brain mid brain க்கான பட முடிவு


உங்கள் கபாலத்தில் நெற்றி எலும்புகளுக்குள் ஸெரிப்ரம் என்னும் பெருமூளை பத்திரமாக உள்ளது. இதனை முன் மூளை என்று வைத்துக்கொள்வோம்.  பெரு மூளையில் (Cerebrum) மடிப்பு மடிப்பாக ஆறு அடுக்குகள் உள்ளது.  ஸெரிப்ரல் கார்டக்ஸ் என்பது சாம்பல் நிற வெளிப்புற அடுக்கு. ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்பது ஸெரிப்ரத்தின்   கண்ணாடி பிம்பம் போன்ற இரண்டு அரைக்கோளங்கள்உங்கள் முன் மூளை பகுதியில் ஸெரிப்ரம் தவிர தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் நரம்பு முடிவுகள் என்று எல்லாம் இரட்டை இரட்டையாக இருக்கின்றன. நடு மூளை என்பது முதுகுத் தண்டுவடத்திலிருந்து வரும் மூளைத் தண்டின் மேற்பகுதி. நடுமூளைக்குக் கீழ்ப்பகுதியில் பின் மூளை அமைந்துள்ளது. லிம்பிக் சிஸ்டம் பல முக்கிய மூளை பாகங்களின் தொகுதி. பின் மூளையில் சிறுமூளை என்னும் ஸெரிபெல்லம் (Cerebellum), முகுளம் என்னும் மெடுலா, ஆப்ளாங்கேட்டா (Medulla Oblongata) எல்லாம் இருக்கிறது.

ஸெரிப்ரம் (Cerebrum) பெருமூளை
 

உங்களுடைய மண்டை ஓட்டுப் பெட்டியின் மேற்புறத்தையும், பின்புறத்தையும் ஒருங்கே அடைத்துக்கொண்டு அமைந்துள்ள ஸெரிபரல் கார்டெக்ஸ் என்னும் இப்பகுதியே என்னுடைய அங்கத்தில் (மூளையின்) மிகப் பெரிய பகுதி எனலாம். எனது மொத்த எடையில் என்பது சதவிகிதம் பெருமூளையில்தான் இருக்கிறது. பெருந்திரளான இப்பகுதி கொளகொளவென்று ஜெல்லி போன்று இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா! 

ஸெரிபரல் கார்டெக்ஸ் என்னும் பெரு மூளை ஆறு அடுக்குகளுடன் அமைந்துள்ளது. ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள நரம்பு ஸெல்களை 10,000 மைல்கள் நீளம் வரைகூட நீட்டலாமாம்.   பெரு மூளையின் வெளிப்பகுதி சாம்பல் நிறம் கொண்டதாகவும், மடிப்புகள் மிகுந்தும், ஆழமான மேடு பள்ளங்களுடன் தோற்றமளிக்கிறது. ஆழமான பள்ளங்கள் பிளவுகள் (fissures) என்றும் அழமற்ற பகுதிகள் சல்கிகள் (sulci - singular sulcus) என்றும் பெயர்.  மேடான பகுதிக்கு கைரி (gyri - singular gyrus)  என்று பெயர். ஸெரிபரல் கார்டெக்ஸை கிரே மேட்டர் (சாம்பல் நிற வஸ்து) என்றும் குறிப்பிடுகிறார்கள். கட்டளைகள் உருவாகும் இடம் இது.




முன் புறமிருந்து பின் பகுதிக்குச் ஒரு பெரிய சல்கஸ்,  ஸெரிப்ரல் கார்டெக்ஸை (Cerebral cortex) இரண்டு அரைக்கோளங்களாகப்  பிரிக்கின்றன. கண்ணாடி பிம்பம் போன்று தோன்றும் இந்த இரண்டு அரைக்கோளங்களுக்கு  பெருமூளை அரைக்கோளங்கள் (Cerebral Hemispheres) (ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர்) என்று பெயர்.  பெருமூளை அரைக்கோளங்கள் வலது அரைக்கோளம் (Right Hemisphere) இடது அரைக்கோளம் (Left Hemisphere) என்று பிரிக்கப்பட்டு அளவில் மட்டுமல்லாது என்னுடைய (மூளையின்) செயல்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எண்ணம், சிந்தனை, பேச்சு, தசைகளை இயக்கும் திறன் எல்லாம் ஸெரிபரம் என்னும் பெருமூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தப் பகுதிதான் உங்கள் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். 



வலது அரைக்கோளத்திலிருந்து இடது அரைக்கோளத்திற்கும், இடது அரைக்கோளத்திலிருந்து வலது அரைக்கோளத்திற்கும் சில மெல்லிய நரம்புகள் கடந்து செல்லும். காரணம் சற்று புதிரானதுதான் என்கிறார்கள்.

கார்பஸ் கலோசம் (corpus callosum) (இலத்தீனில் பெரிய பொருள் (large body) என்று அர்த்தம்) என்பது 200 மில்லியன் அக்சான்ஸ் (axons) என்னும் நரம்பு நார்களாலான தடிமனான கயிறு.  இக்கயிறு பெருமூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இணைக்கிறது.  இந்த 10 செ .மீ. 'C' வடிவ நரம்பு நார் (nerve fibers) கயிறு அறைக்கோளங்களிலிருந்து வெளிப்படும் மின் அலைகளைக் (electric signals) கடத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொள்கின்றன. வொய்ட் மேட்டர் என்னும் வெள்ளை வஸ்து மிகுந்து காணப்படும் பகுதி கார்பஸ் கலோசம் ஆகும். 

மரப்பட்டையைப் போன்று வலுவான அரைக்கோளங்களின் மேற்பகுதியை லாமினேடெட் கார்டெக்ஸ் என்று அழைக்கிறார்கள். இதனுடைய தடிமன் ஒரு அங்குலத்தில் பதில் ஒரு பகுதி மட்டும்தான்.  இப்பகுதியில் மட்டும் 800 கோடி நரம்புச் ஸெல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. மடிப்புகளை விரித்தால் இரண்டு மீட்டர் பரப்பளவுள்ள லாமினேடெட் கார்டெக்ஸை ஒரு பெரிய மேசை விரிப்புடன் ஒப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு  ஸெரிப்ரல் ஹெமிஸ்பியரும் (அரைக் கோளமும்) நான்கு மடல்களாக உடற்கூறு வல்லுநர்களால் பிரித்தறியப்படுகின்றன. இம்மடல்கள் முறையே 1. முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe) என்று இப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு பெயரிடப்பட்டுள்ளன. உடற்கூரியலாளர்கள் பெருமூளையில் மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர்.




முன் மடல் (frontal lobe)

முன் மடல் (frontal lobe) முன் மூளையில் உள்ளது.  நெற்றிக்குப் பின்னல் உள்ள முன் மடல் பகுதிக்கு  pre-frontal கார்டெக்ஸ்  என்று பெயர். நிர்வாக கட்டுப்பாட்டு மையம் (Executive control center) என்றழைக்கப்படும் இப்பகுதியில் பகுத்தறிதல் மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது; இங்கே  சிந்தனை (thought) மற்றும் திட்டமிடல் (planning) எல்லாம் நடக்கின்றன. மேம்பட்ட சிந்தனை (advanced thinking), வழிநடத்தும் திறன் (leadership skill) மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் (problem solving skill) போன்றவற்றைக் கண்காணிக்கவும், மிகுதியான மனவெழுச்சிகளை (emotion) கட்டுப்படுத்தவும் இப்பகுதியால் முடியும்.  இப்பகுதியில் தான் உங்கள் சுய-விருப்பப்-பகுதி (self-will-area) என்னும் ஆளுமை (personality) உள்ளது. இப்பகுதி மெதுவாகவே முதிர்ச்சி (mature) அடைகிறது. 

பக்க மடல் (temporal lobe)

காதுகளுக்கு மேல் அமைந்துள்ள பக்க மடல் (temporal lobe) பகுதியில் சப்தம் (sound), இசை (music), முகமறிதல் (face recognition) மற்றும் பொருளறிதல் (object recognition),   நீண்டகால நினைவுத் திறன்கள் (long term memory), எல்லாம் கண்காணிக்கப்படுகின்றன.   பேச்சு மையம்கூட (speech center)  இங்கே இடப்பகுதியில்தான் அமைந்துள்ளது. 

பிடரி மடல் (occipital lobe)

ஒரு ஜோடி பிடரி மடல் (occipital lobe) பின் பகுதியில் அமைந்து பார்வை செயலாக்கங்களைக் (visual processing) கண்காணிக்கின்றன.   

சுவர் மடல் (parietal lobe)

சுவர் மடல் (parietal lobe) பகுதியில் இடம் சார்ந்த நோக்குநிலை (spatial orientation), கணக்கீடு (calculation), சில வகை அடையாளம் காணல் (certain types of recognition) எல்லாம் கண்காணிக்கப்படுகின்றன (monitored).   

உங்களுடைய  ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், தோல் என்பவற்றிலிருந்து வருகின்ற நரம்புகள் நேரடியகவோ தண்டுவடத்தினூடாகவோ பெருமூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

செரிபெல்லம் (Cerebellum) - Wikipedia

செரிபெல்லம் (Cerebellum)

சிறு மூளை. என்னும் ஸெரிபெல்லம் (Cerebellum) என்னுடைய மற்றொரு பாகமாகும். இலத்தீன் மொழியில்  ஸெரிபெல்லம் என்றால் சிறு மூளை (liitle brain) என்று அர்த்தமாம். இரட்டை அரைக்கோளங்களுடன் அமைந்த ஸெரிபெல்லம், மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் ஸெரிப்ரத்துக்குப் பின்னால்  சற்று கீழே, மூளைத் தண்டின் (brain stem) மேல்பகுதியில் அமைந்துள்ள சிறுமூளையை நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் எடை உங்களுடைய மொத்த மூளையின் எடையில்  வெறும் பதினோரு சதவிகிதம் (11%) மட்டுமே. எனினும் உங்கள் மொத்த மூளையில்  அடங்கியுள்ள ந்யூரானில் ஐம்பது சதவிகிதம் (50%) சிறு மூளையிலேயே அடங்கியுள்ளது. சிறு மூளையின் மேற்பரப்பில், கிடைவாக்கில் வரிவரியாக  பல மேடுபள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த மேடுபள்ளங்கள் மூளையின் மற்ற பகுதிகளிலிருந்து சிறுமூளையை தோற்றத்தில் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

ஸெரிபெல்லம் தசை இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த உறுப்பு உங்கள் உடலின் சமநிலை (balance), இருக்கும் நிலை (posture) குறித்து உங்கள் தசைகளில் தேவையான மாற்றங்களைச் சீரமைக்க (adjustments) உதவுகிறது. உங்கள் இயக்க தசைகளின் அசைவுகளை ஒத்திசைத்து (muscle groups acting together) ஒருங்கிணைப்பதால்தான் (coordination) உங்களால் படுக்கவோ (lay down), உட்காரவோ (sit), நடக்கவோ (walk), ஓடவோ (run) முடிகிறது. யோகாசனம் (yogasana) போன்ற ஆசனங்களைத் திறம்படச் செய்வதற்கு உங்களுடைய உடலின் அசையும் தசைகள் சிறு மூளையால் மட்டுமே இயக்கப்படுகின்றது.  கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க தங்கள் உடலை வாகாக வளைத்து, கால்களை மடக்கி, கைகள் மற்றும்  கண்களையெல்லாம் ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே சிக்சர் ஷாட் அடிப்பது சாத்தியமாகிறது. பட்டர் ஃப்ளை ஸ்டைல் நீச்சல் அடிப்பது, ஹை ஜம்ப் தாண்டுவது  போன்ற விளையாட்டுகளுக்கான மோட்டார் லேர்னிங் என்னும் பயிற்சி மூலமாகவே விளையாட்டு வீரர்கள் தசை இயக்கங்களை ஒருங்கிணைக்கிரார்கள். இது போல ஒரு நடனமாடும் பெண் தகுந்த பயிற்சிக்குப்பின் உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது நிகழ்த்தும் 'அடவையும்' 'முக பாவனை'   மூலம் நவரசங்களையும் அபிநயம் செய்கிறார்.  டைப் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற தனியியங்கு இயக்கங்களை (automated movements) ஸெரிபெல்லம் தன் நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்கிறது. ஸெரிபெல்லம் பாதிப்படைந்த நபருடைய இயக்கங்கள் மந்தமடைவதுடன் சுருங்கிவிடுவதுமுண்டு. இவர்களால் பந்தைக் கேட்ச் பிடிக்கவோ, பேனா பிடித்து எழுதவோ முடியாது.  

இயக்க சக்தி (மோட்டார்) பற்றிய கட்டளைகள் (commands) சிறு  மூளையிலிருந்து தொடங்கவில்லை (initiated) என்றாலும் இக்கட்டளைகள் சிறு மூளையில் தகவமைப்புக்கேற்ப (adaptive) துல்லியமாய்த் (accurate) திருத்தி அமைக்கப்படுகின்றன (modified).

ஸெரிபெல்லம் அறியும் ஆற்றல் செயலாக்கங்களுக்கு (Cognitive processing) துணைபுரியும் அமைப்பு (support structure) என்பதை சமீபகாலத்தில் ஆய்வாளர்கள் தெளிவாக உணர்ந்துள்ளர்கள். உங்களுடைய மொழித் திறன் (language skill) மேம்படவும் உங்கள் மோட்டார் கண்ட்ரோல் உதவுகிறது. உங்கள் வாய் (mouth), நாக்கு (tongue), தொண்டை (nasal), உதடு (lips), பற்கள் (teeth) போன்ற உறுப்புகளை (organs) முறையாக ஒத்திசைத்து (muscle groups acting together) ஒருங்கிணைப்பதன் (coordination) மூலம் உங்களுடைய உச்சரிப்பு (pronunciation) திருத்தமாக அமைகிறது. 
மூளைத் தண்டு

மூளைத் தண்டு என்னுடைய முக்கிய பாகமாகும். ஊர்ந்து செல்லும் ஜந்துக்களின் மூளை (reptilian brain) என்றும் இதனைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் ஊர்வனவற்றின் மூளையைப் போலவே இப்பகுதி அமைந்துள்ளது. மூளைக்குச் செல்லும் 12 நரம்புகளில் 11 நரம்புகள் மூளைத் தண்டிலேயே முடிவடைந்து விடுகின்றன. மிகமுக்கிய செயல்பாடுகளான இதயத் துடிப்பு, சுவாசம், உகந்த உடல் வெப்பம், செரிமானம் ஆகிய எல்லாம் இப்பகுதியில்தான் கண்காணிக்கப்பட்டுக்  கட்டுப்படுத்தப்படுகின்றன. என்னை விழிப்பாக வைத்திருக்க உதவும் ரெட்டிகுலார் ஆக்டிவேட்டிங் சிஸ்டம் (reticular activating system) என்னும் நுண்வலையியக்குவிப்பு மையம் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது.

லிம்பிக் சிஸ்டம்

‘லிம்பிக் சிஸ்டம்’ என்பது ஒரு மினி மூளை. பல முக்கிய மூளை பாகங்களின் தொகுதி. இந்தத் தொகுதி மூளைத்தண்டுக்கு மேலே அல்லது ஸெரிப்ரத்துக்கு சற்று கீழே அமைந்துள்ளது.  ‘தலாமஸ்’ ‘ஹைப்போ தலாமஸ்’ பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி. (Pineal Gland) , ஹிப்போகேம்பஸ் மற்றும் அமிக்டலா ஆகியவை லிம்பிக் சிஸ்டம் தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகள். உடலையும் மனதையும் இணங்க வைப்பதே இந்த உறுப்புகள்தான். உணர்வுபூர்வமான நடவடிக்கைகளைக்  கட்டுப்படுத்தும் பகுதி இது. இந்த உறுப்பு ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளுக்கு இந்த லிம்பிக் சிஸ்டம்  இயல்பாக இணங்கி செயல்படாது.

தலாமஸ்: தலாமஸ் ஒரு வடிகட்டும் மையம். என்னிடம் வரும் தகவல்கள் இங்குதான் வடிகட்டப்பட்டு பின்பு மேற்புற ஸெரிப்ரல் கார்டெக்ஸுக்கு அனுப்பப்படுகின்றன.

ஹைப்போ தலாமஸ்: உங்கள் உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்” - 24 மணி நேர விழிப்பு - உறக்க  நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதி இது. இந்த உயிரியல் கடிகாரமானது, செரிமானம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகிய உடலியக்க நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் வெப்ப நிலை அதிகரித்தால் ஹைப்போ தலாமஸ் வியர்வையைப் பெரமளவில் சுரக்கச் செய்த அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது. செக்ஸ் உணர்ச்சிகளுக்கு ஹைப்போ தலாமஸ் தான் காரணம். 
 
பிட்யூட்டரி சுரப்பி: ஹைப்போ தலாமஸுக்கு அருகில், சிறிய பட்டாணி சைஸில், பிட்யூட்டரி சுரப்பி இருக்கிறது. ஏழு 7 ஆதார சக்கரங்களில் (சுரப்பிகளில்)  சகஸ்ரார சக்கரம் பிட்யூட்டரி சுரப்பியுடன் தொடர்புடையது.  இது நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி என்றும் குறிப்பிடுகிறார்கள். அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம்.
இது உங்கள் உடலின் சமநிலையை பாதுகாக்க உதவுகிறது.

பினியல் சுரப்பி பினியல் சுரப்பி. (Pineal Gland) ஏழு 7 ஆதார சக்கரங்களில் (சுரப்பிகளில்)  ஆக்ஞா சக்கரம் (நெற்றி சக்கரம்) பினியல் சுரப்பியுடன் தொடர்புடையது. நெற்றிக்கண் என்னும் மூன்றாவது கண்ணை குண்டலினி தியானம் மூலம் தூண்டலாம். இவ்வாறு  தூண்டுவதன் மூலம் சுரக்கும் எண்டார்பின் என்ற ஹார்மோன் எல்லா உறுப்புகளையும் சமநிலைப்படுத்துகின்றது.

ஹிப்போகேம்பஸ்: ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதிதான் உங்கள் நினைனவகப் பெட்டி என்கிறார்கள். தாற்காலிக நினைவில் இருந்து நீண்டகால நினைவுக்குத் தகவல்களை மாற்றும் வேலையில் ஹிப்போகாம்பஸ் துடிப்பாகப் பங்கேற்கிறது. வேண்டியபோது தகவல்களை அங்கிருந்து மீட்டுத் தருவதும் இப்பகுதிதான்.

அமிக்டலா: அமிக்டலா(Amygdala) . உணர்வு பூர்வமான நினைவுகளைப் பதிய வைத்துக் கொள்வது அமிக்டலாதான்.  உங்களிடம் அன்பு, ஆத்திரம், அகங்காரம், கனிவு, கோபம், பயம், துக்கம், சோகம், வெறுப்பு போன்ற  எல்லாவிதமான உணர்வுகளும் உற்பத்தியாகும் மையம்தான் இந்த அமிக்டலா. குறிப்பாக பயத்துக்கு காரணமாக உள்ள பகுதி.

முகுளம் ( மெடுல்லா ஆப்லாங்கேட்டா) 


முகுளம் என்னும் மெடுல்லா ஆப்லாங்கேட்டாவை (medulla oblongata) மூளைத் தண்டில் (brain stem) சிறு மூளைக்கு (cerebellum) சற்று முன்னால் எளிதில் கண்டுகொள்ளலாம். கூம்பு வடிவத்தில் (cone shaped) அமைந்த இந்த உறுப்பு ந்யூரோணல் (neuronal) என்னும்  பெருந்திரளான நரம்புத் திசுக்களால் (nerve cells) உண்டாக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பே உங்களுடைய உடலில் இச்சை இன்றி செயற்பாடும் தசைகளின் இயக்கங்களைக் (autonomic (involuntary) functions) கட்டுப்படுத்தும் பகுதி: (எ.கா: இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், நுரையீரல் சுவாசம், கல்லீரல்). முதுகுத் தண்டு (spinal cord) மற்றும் தலாமஸ் (thalamus) என்னும் மூளை நரம்பு முடிச்சு போன்ற உறுப்புகளுக்கு மூளையிலிருந்து முகுளத்தின் வழியாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. சீரான மூச்சு, இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், செரிமானம், தும்மல், வழுங்குதல் ஆகிய எல்லாம் முகுளத்தின்  செயல்பாடுகளால் மட்டுமே நிகழ்கின்றன. 

நடு மூளை (மெஸ் என்செபலான்)

மெஸ் என்செபலான் என்னும் நடு மூளை உறுப்பு முன் மூளைக்கும் பின் மூளைக்கும் இடையே மூளைத் தண்டில் மேடை போன்று அமைந்துள்ளதைத்  தெளிவாகக் கண்டுகொள்ளலாம். இது டேக்டம் (tectum) மற்றும் டெக்மெண்டம் (tegmentum) என்ற இரு உறுப்புகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. டெக்டத்தில் ஒரு ஜோடி கொல்லிகுலி (colliculi) என்னும் மேடான அமைப்பு காணப்படுகின்றது. தாழ்ந்த கொல்லிகுலி (inferior colliculi) என்னும் உறுப்பு கேட்டல் செயல்பாடுகளையும் உயர்ந்த கொல்லிகுலி (superior colliculi) என்னும் உறுப்பு பார்த்தல் செயல்பாடுகளையும் நடத்துகின்றன. மூளைத் தண்டில்  உள்ள மெஸ் என்செபலான் உறுப்பின் அடியில் டெக்மெண்டம் காணப்படுகிறது. இது போல டெக்மேன்டத்தில் மூன்று உறுப்புகள் உள்ளன: 1. பீரியக்யூடக்டல் கிரே (the periaqueductal gray), 2. சப்ஸ்டான்ஷிய நைக்ரா (the substantia nigra) மற்றும் 3. சிவப்பு ந்யூக்ளியஸ் (the red nucleus). இந்த உறுப்புகள் சில இச்சை இன்றி செயற்பாடும் தசைகளின் இயக்கங்களைக் (autonomic (involuntary) functions) கட்டுப்படுத்துகிறது. சில உடலில் இயக்கும் சக்தி (மோட்டார்) செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. நம் விழிப்புணர்வு மற்றும் கவனம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது.  மெஸ் என்செபலான் பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலை தூண்டிவிடும் செயல்பாடுகளையும் வலது மற்றும் இடது செரிபரல் ஹெமிஸ்பியர்களிடையே  தகவல் பரிமாற்றம் தொடர்பான செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றது.

பேராசிரியர் டாக்டர் மகோடோ ஷிகிடா (Professor Dr. Makoto Shichida) என்னும் ஜப்பானிய பேராசிரியர் நாம் நம் குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் (the way we understand our children), குழந்தைகளின் மூளைத் திறன்கள் (brain capabilities) எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் குழந்தைகளின் கற்றல் பாணிகள் (learning styles) என்னென்ன என்ற பொருளில் ஆய்வு செய்த முடிவுகள் உலகம் தழுவிய கல்விப்புரட்சி செய்துள்ளன.  மிட் பிரைன் அல்லது இன்டர் பிரைன் என்பது உணர்வுகளின் கட்டுப்பட்டுக் கோபுரம் என்கிறார். இதனை முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் மேம்பட்ட நுண்ணறித் திறனையும் , நினைவுத் திறனையும்  நம் குழந்தைகள் பெற இயலும் என்பது இவரின் 40 வருட ஆய்வு முடிவுகள்.

உங்களுடைய மூளையில் ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000  கிலோ மீட்டர் ந்யூரான் செல்கள் இருக்கின்றனவாம்! மொத்தத்தில் நம் மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன என்கிறார்கள். நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்களுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன ஓட்டம் நடைபெறுகிறது.  இந்த நியூரான்கள் பேச்சு, பார்வை, கேள்வி மற்றும் உடலின் உணரும் தன்மை மூலம் பல செய்திகளை  கெமிக்கல் சிக்னல் சமிக்கைகளாக மூளைக்கு  கொண்டு செல்கிறது.   நம்முடைய மூளையின் சூட்சமமான நரம்பு மண்டலத்தின் (Subtle Nerve System) இயக்கத்தை நாம் நவீன மருத்துவவியல் மற்றும் பயோமெடிக்கல் கதிர்வீச்சு கம்ப்யூட்டர்  கருவிகள் உதவியுடன் மூளையின் அலை வீச்சுக்களிலிருந்து (Brain Wave Activity) அலைகளின் அதிர்வெண்ணையும் (Frequency) , கதிர்வீச்சையும் (Amplitude) கணக்கிட்டு மூளையில் எந்த எந்த இடங்களிலிருந்து என்னென்ன விதமான நடவடிக்கைகள் நிகழ்கின்றன என்று அனுதினமும் துல்லியமாக தெரிந்துகொள்கிறோம். அதனை ஆங்கிலத்தில் ‡ Nuero feed back  என்று சொல்கிறார்கள்.
 


ந்யூரான்கள்

உங்கள் உணர்வுநிலை மற்றும் சிந்தனை உருவாக்கத்திற்காக சற்றேறக்குறைய நூறு பில்லியன் ந்யூரான்கள் துல்லியமாக தொடர்ந்து வேலை செய்கின்றன.  இந்த ந்யூரான்களின் எண்ணிக்கை, அமேசான் காடுகளிலுள்ள மொத்த மரங்களுடைய எண்ணிக்கைக்குச் சமம் என்கிறார்கள்.

ஒவ்வொரு ந்யூரானிலும் உயிரணு அறை (cell body or soma), ஆக்சான் (Axon) என்னும்  வடக்கயிறு மற்றும் சிறு நரம்பு இழைகள் (dendrites) எல்லாம் அடங்கியுள்ளன. என்னால் தகவல்கள் எப்படி செலுத்தப்படுகிறது என்று தெரிந்துகொள்ள ஆசையா? ந்யூரான்கள் வியத்தகு திறனுடன் எலெக்ட்ரோகெமிக்கல் சமிக்கைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துகின்றன. ஒருமுனை ந்யூரான்கள்   (புலன்கள் சார்ந்த ந்யூரான்கள்) உடலிலிருந்து மையநரம்பு மண்டலத்திற்கு தகவல் பரிமாற்றம் செய்கின்றன; இருமுனை ந்யூரான்கள் (இடையேயான ந்யூரான்கள்) என் (மூளை) பாகங்களை இணைக்கும் நரம்புத் திசுசுக்களிடையே தகவல் பரிமாற்றம் செய்கின்றன; மற்றும் பல்முனை ந்யூரான்கள் (இயக்கும் சக்தி (மோட்டார்) ந்யூரான்கள்) மைய நரம்பு மண்டலத்திலிருந்து உடலின் பாகங்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்கின்றன.

க்ரே மேட்டர் நமது மைய நரம்பியல் மண்டலத்தில் ஒரு பகுதி . ந்யூரோணல் செல்களையும், ந்யூரோபில்களையும்  (சிறு நரம்பு இழைகளாலும் (டென்ட்ரைட்) மையிலீன் உறையால் மூடப்படாத நீண்ட நார் போன்ற ஆக்ஸான்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது) கிண்ணக்குழி (கிளையல்)  நரம்பு செல்களையும் தந்துகிகளையும் ஒருங்கிணைத்து உருவான பாகம். 

வொயிட் மேட்டர் நமது மைய நரம்பியல் மண்டலத்தில் ஒரு பகுதி . மையிலீன் உறையால் மூடப்பட்ட நீண்ட நார் போன்ற ஆக்ஸான்களைக் கொண்டுள்ளது.  க்ரே மேட்டர், சிந்தனை உற்பத்தியாகிற இடம். வொயிட் மேட்டர், அதை மற்ற உறுப்புகளுக்கு கடத்திச் செல்வது. அந்த க்ரே மேட்டரில் ஏற்படும் பாதிப்பே அல்சைமர் நோய்க்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதாவது, சிந்திப்பதில் ஏற்படும் சிக்கல். இதனை மூளை தேய்தல், ஞாபக மறதி நோய் என்றும் கூறலாம். இந்தக் கிரே மேட்டரையும் வொய்ட் மேட்டரையும் தான் 'மண்டையில் மசாலா' என்று சொல்கிறார்கள் போலும்.  

Reference

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம். அறிவியல் இதழ்: The secret life of the BRAIN

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...