Sunday, December 11, 2016

நெருங்காதே நீரிழிவே! 2 டாக்டர் விஜயராகவன், சுஜாதா தேசிகன்

desikandr-vijayaraghavan
டாக்டர் இந்த வாரம் இன்னொரு கேள்வி. அப்பா, அம்மா இருவருக்கும் நீரிழிவு இருந்தால் பிள்ளைகளுக்கும் டயபட்டீஸ் வந்துவிடுமா?”
நல்ல கேள்வி. மரபியலில் “Epigenetics‘ (எபிஜெனடிக்ஸ்) என்று சொல்லுவாங்க.”
அப்படின்னா?”
காலங்காலமா மாறிவரும் சுற்றுச்சூழல், பழக்க வழக்கங்களால் நம் மரபணுக்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு, தலைமுறை தலைமுறையாகப் பிள்ளை, பேரன், பேத்திகளுக்கு மரபுவழியாகப் பரவுகிறதா என்ற ஆராச்சி.”
சுவாரசியமான விஷயம். அப்ப நம் ஜீன்கள் மாறிவிடுமா?”
ஜீன்கள், அதாவது மரபணுக்கள் மாறுவதில்லை. மாறுவதற்குப் பல ஆயிரம் வருஷங்கள் ஆகும். ஆனால் நம் செல்லுக்குள் அதாவது உயிரணுக்களுக்குள் மரபணுக்களை மாற்ற சில சமாசாரங்கள் இருக்கு. இதுதான் ‘எபிஜெனடிக்ஸ்’.
அப்பா சொத்து பிள்ளைக்கு என்பதுபோல அப்பன் புகைத்தது, குடித்தது, கண்டபடி சாப்பிட்டது, கவலைப்பட்டது எல்லாம் எபிஜீன்களின் வழியாகப் பிள்ளைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் வந்து சேர்கிறது.”
அதனால்தான் நம் அப்பா அம்மாவுக்கு டயபடீஸ் என்றால் நமக்கும் வருகிறதா?”
அப்படியில்ல. அப்பா செஞ்ச அதே தப்பை பிள்ளையும் செய்தால் சுலபமாக வரும். செய்யாத வரை வராது. உதாரணமா பத்து வருஷத்துக்கு முன்னாடி நாலாயிரம் பேர்ல ஒருத்தருக்கு டயபடீஸ். இப்ப நாலு பேருல ஒருத்தருக்கு ‘பிரிடயபடீஸ்’ இல்ல டயபடீஸ் இல்லேனா உடல் பருமனுடன் இருக்காங்க.”
அதாவது நம் உடல் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி மாதிரி. எபிஜீன்கள் தோட்டாக்கள் மாதிரி. ‘லைப் ஸ்டைல்’ சரியாக இல்லை என்றால் நம்மை நாமே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதற்குச் சமம்!”
நல்ல உதாரணம். பெற்றோருக்கு டயபடீஸ் என்றால் நமக்கும் வரும்னு அவசியமில்ல. டயபடீஸ் வேணுமா வேண்டாமான்னு நாமதான் முடிவு பண்ணணும்.”
அப்ப நாம சாப்பிடற மருந்து, மாத்திரைங்க நம்ம குழந்தைகள பாதிக்குமா?”
நிச்சயம். இதில் என்ன கொடுமைனா பல ரசாயனக் காப்புரிமை பெற்ற நவீன மருந்துகள் நீரிழிவு எபிஜெனிடிக் தூண்டுதல்களைச் செய்யல்படுத்த முடியும். டயபடீஸ் மட்டும் இல்லை, ஆட்டோ இம் யூன் குறைபாடுகள், மறதி, அல்சைமர், புற்றுநோய் என்று ஒரு பெரிய லிஸ்டே போடலாம்.”
கேட்கவே பயமா இருக்கு! நம் உடல் ஏன் குண்டாகிறது? உடல் பருமனுக்கும் டயபடீஸுக் கும் என்ன சம்பந்தம்?”
இருக்கு. அதிக இன்சுலின் சுரப்பதால் ‘பை ஒன் கெட் ஒன் ஆஃபர்’ மாதிரி உடல் பருமன், டைப்-2 டயபடீஸ் ரெண்டும் ஜோடியாக வரும். இந்த ஜோடிக்குப் பெயர் – டயபசிட்டி.”
தாத்தா அப்பா காலத்து கறுப்பு வெள்ளை குரூப் ஃபோட்டோவை கவனிச்சா உங்களுக்கே புரியும். அதில கிட்டத்தட்ட எல்லாரும் ஒல்லியா இருப்பாங்க. இன்னிக்கு நாலாங்கிளாஸ் கலர் போட்டோல எட்டு பேர் நிற்க வேண்டிய இடத்துல நாலு பசங்கதான்.”
இது எப்ப டாக்டர் ஆரம்பிச்சது?”
இன்னிக்கு நேத்தைக்கு இல்ல, கடந்த இருவது வருடமாக உடல் பருமன் பரவிவருகிறது. ஒபிசிட்டி என்பது ‘எபிடமிக்’.”90ல 15% ஆக இருந்த உடல் பருமன் 2010ல 40% என்று எகிறிடுத்து அமெரிக்கால.”
இந்தியால…?”
ஒலிம்பிக்ஸ் மாதிரி மூணாவது இடத்துல இருக்கு. 1980 முதல் 2013 வரை 50 பர்சென்ட் குண்டாயிட்டாங்க; நம்ம சென்னையில 70 பர்சென்ட்டுன்னு புள்ளிவிவரம் சொல்லுது.”
ஆனா இப்ப நிறைய பேர் வாக்கிங் போறாங்களே?”
பனகல் பூங்கால கட்சி ஊர்வலம் மாதிரி சாரை சாரையாய் நடந்தா உடல் இளைக்காது. நடந்தா ஒல்லியாகலாம் என்பது ஒருவிதமான மூட நம்பிக்கை.”
ஆச்சர்யமா இருக்கு. அப்ப உடற்பயிற்சி தேவையே இல்லையா?”
நன்மைகள் இருக்கு. ஆனா அதனால்தான் உடல் இளைக்கும் என்பது கட்டுக்கதை. இங்கிலாந்தை எடுத்துக்கிட்டா 1997 முதல் 2008 வரை உடற்பயிற்சி 32 சதவிகிதம் அதிகமாச்சு. கூடவே உடல் பருமனும் 10 சதவிகிதம் கூடியது. இங்கிலாந்துல மட்டுமில்லை, அமெரிக்கவில் 20 பர்சென்ட் உயர்ந்தது. மத்த நாடுகளிலும் இதே நிலைமைதான்.
மக்களோட ஒரே குறிக்கோள் உடம்பைக் குறைச்சு ஒல்லியாவதுதான். இன்னொரு விஷயம், நெதர்லாந்து, இத்தாலியில உடற்பயிற்சி செயறவங்க கம்மி. அங்கே ஒபிசிட்டியும் குறைவு. அதனால எக்ஸர்சைஸுக்கும் உடல் பருமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
ஆனா இன்றும் பூரி மசால் மாதிரி, உடற்பயிற்சியும் டயட்டையும்தானே பரிந்துரைக்கிறாங்க?”
யெஸ். உடற்பயிற்சி நல்லதுதான். பல் தேய்ப்பது மாதிரி. ஆனா முன்ன சொன்னா மாதிரி உடம்பை குறைக்கப் பயன்படாது. இப்ப இருக்கிற சில டாக்டர்களே குண்டா இருக்காங்க.”
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ அது போல உடல் பருமனுக்கு எதுதான் பிரச்னை டாக்டர்?”
கடந்த 20 வருஷத்தில் என்ன என்ன மாறுதல்கள்? யோசிச்சுப் பாருங்க. அடிக்கடி இடைவெளி இல்லாம விதவிதமா வாயில் ஏதாவது போட்டுக்கொண்டே இருக்கோம். நாம சாப்பிடும் சாப்பாட்டில்தான் கார்பரேட் கம்பெனிங்க லாபம் பார்க்குறாங்க.”
விவரமா சொல்லுங்க டாக்டர்?”
பிரேக்ஃபாஸ்ட் என்ற காலை உணவை எட்டரைக்குள்ள சாப்பிடாட்டி தெய்வ குத்தம் போலாகி ரொம்ப நாள் ஆச்சு. கேல்சியம் கிடைக்க குழந்தை போல நிறைய பால் குடிக்க வைக்கிறாங்க. ‘லோ-கேலரி’, ‘லோ-ஃபேட்’, ‘0%’ , ‘டயட்’ கொட்டை எழுத்துகளைக்கொண்டு மூளைச் சலவை செஞ்சுட்டாங்க. சின்னப் பசங்கள ‘நீ சூப்பர் மேன் மாதிரி ஆகலாம்’ன்னு கலர் கலரா குடிக்கவைக்கிறாங்க.”
கரெக்ட் டாக்டர், இப்ப நாம கடையில வாங்கிச் சாப்பிடற பல பாக்கெட் தின்பண்டங்க நம் தாத்தா, பாட்டி கேள்விப்படாதது!”
கூடவே நீண்ட நாள் ‘ஷெல்ப் லைஃபை’ கூட்ட, சுத்திகரிக்க, பதப்படுத்த வாயில் நுழையாத எதை எதையோ சேர்க்கறாங்க.”
இதனாலதான் இன்னிக்கு வீட்டுக்கு ஒருத்தர் அமெரிக்கால இருக்கா மாதிரி வீட்டுக்கு ஒருத்தர் டயபட்டிக்.80% டயபடீஸ் உள்ளவங்க குண்டாவும் இருக்காங்க.”
ஏழு வினாடிக்கு ஒருத்தர் டயபட்டீஸ்னால இறக்கிறாங்க. உயிர் இழப்புக்குக் காரணம்? துப்பாக்கியால தானே சுட்டுக் கொள்கிறார்!”
ஒரு புஸ்தகத்தில படிச்சேன் மனுஷங்க மட்டும்தான் குண்டாகுறாங்க, மிருகங்கள் வெயிட்போடுவதில்லை என்று.”
உண்மைதான். பொதுவாக யானை, நாய், மாடு, கோழி என்று எதுவும் வெயிட் போடாது. ஆனால் வீட்டில அல்லது பண்ணையில் இருந்தா குண்டாகி விடும். இயற்கை உணவை அதற்குக் கொடுக்காம, நாம் சாப்பிடுவதுபோல அவற்றுக்கும் சாப்பிடக் கொடுப்பதால்தான்.”
காட்டு யானை, கடலில் திமிங்கிலம் எல்லாம் ஒரு நாளைக்கு 50 கிலோ சாப்பிட்டும் வெயிட் போடுவதில்லை. அதன் குட்டிகளும் அப்படியே. ஆனா நம் குழந்தைங்க இன்று குண்டாகவே பிறக்கிறது. ஏன் டாக்டர்?”
நம்ம சாப்பாடு மூலம் ஏற்படும் ஹார்மோன் இன்பேலன்ஸ்தான். இன்னொரு விஷயம். வீட்டு எலியைவிட ஆராய்ச்சிக்கூடத்தில உள்ள எலிங்க குண்டாக இருக்கும். அவற்றுக்கும் நமக்கு வரக்கூடிய எல்லா நோய்களும், டயபடீஸ் உட்பட வருகிறது.”
எதனால் குண்டாகிறது?”
பல காரணங்கள் உண்டு. முக்கியமா ஆராய்ச்சிக்கு உட்பட்ட பிராணிகள் குண்டாவதற்கு ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு மற்றும் வளர்சிதை மாற்றம் தான் காரணம்.
1930 முதல் 1960 வரை ஆராய்ச்சிக் கூடத்தில எலிகளை குண்டாக்குவதற்கு ஹைப்போத்தாலமஸ் (Hypothalamus)என்ற மூளை அடிப்பகுதியில சின்ன ஊசியைக் குத்திவைக்கும் முறையைக் கடைப்பிடிச்சாங்க. ஹார்மோன்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் இடம் அதுதான்.”
குண்டாக இருப்பதனால நிறைய சாப்பிடுறாங்களா? இல்ல நிறைய சாப்பிட்டு அதனால குண்டாகிறாங்களா?”
டயபடீஸ், உடல் பருமன் இரண்டுக்கும் இன்சுலின் என்ற ஹார்மோன்தான் முக்கிய காரணம். அதை அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.”
-நன்றி கல்கி
Source: Balhanuman November 3, 2016 
https://balhanuman.wordpress.com/2016/11/03/2%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE/

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...