கருப்புப் பணம் என்றால் என்ன? அரசு இயங்க வரிப்பணம் அவசியம். இந்திய அரசு மக்களிடம் இருந்து வாங்கிய வரிப்பணத்தில் இயங்குகிறது. கருப்புப் பணம் (Black Money) என்பது இந்தியாவில் கருப்புச் சந்தைகளில் (Black Market) சட்டவிரோதமாகச் சம்பாதித்த பணம். இதற்கான வருமான வரி (Income Tax) மற்றும் இதர வரிகள் இதுவரை கட்டப்படவில்லை என்றால் அது கணக்கில் வராத பணம். இவ்வாறு வரியே கட்டாத பணத்தை, கருப்பு பணம் என்று சொல்கிறோம். எந்தெந்த தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதாவது தடை செய்யப்பட்ட தொழிலைச் செய்து சம்பாதித்த பணமும் கருப்பு பணமாகிறது.
வரி கட்டாமலும், முறைகேடாகவும் சம்பாதித்த கருப்புப் பணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புத் தொகையாக (deposits) வைத்துள்ளார்கள்.
அது சரி! இந்தியர்கள் வெளிநாட்டில் உள்ள வங்கிகளில் ஏன் வைப்புத் தொகையாக வைக்கிறார்கள்? வெளிநாடுகளில் குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. இங்கு வரியே கட்டாத கருப்புப் பணத்தைக் கூட வைப்புத் தொகையாக வைத்திருந்தாலும், இவர்களின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடாமல் இரகசியமாகவே வைத்திருப்பார்கள். எனவே சுவிட்சர்லாந்து கருப்புப் பணத்தைப் பதுக்க பாதுகாப்பான நாடு என்று உலக அளவில் உள்ள வரி ஏய்ப்பவர்கள் நம்புகிறார்கள்.