கதகளி.. மோகினி ஆட்டம், தெய்யம், துள்ளல் பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். கூடியாட்டம் என்றால் அதுவரை என்னவென்றே தெரியாது. இது சக்திபத்ரா எழுதிய ஆச்சர்யசூடாமணி என்ற நாட்டிய நாடகத்தைத் தழுவியது என்று தெரிந்தது. ஜடாயு வாதம் நாட்டிய நாடகம் பைங்குளம் ராம சாக்கியர் ஸ்மாரகா கலாபீடம் சார்பில் அரங்கேற்றப்படுகிறது. ராம சாக்கியரின் மைத்துனர் பைங்குளம் நாராயண சாக்கியார் ஒரு சிறந்த நாட்டிய நாடகக் கலைஞர்.
மாலை ஆறு மணி அளவில் நாட்டிய நாடகம் தொடங்கும் முன் பைங்குளம் நாராயண சாக்கியார் கூடியாட்டம் என்ற சாக்கியக் கூத்து பற்றியும் ஜடாயுவதம் நாட்டிய நாடகம் பற்றியும் மலையாளம் கலந்த ஆங்கிலத்தில் ஒரு சிற்றுறை நிகழ்த்தினார். பலருக்கு இது மிகவும் உபயோகமாயிருந்திருக்கும். மலையாளிகளே கூடியாட்டம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருந்தார்கள். நாராயண சாக்கியார் 'இந்த சமஸ்கிருத நாட்டிய நாடக வடிவம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது' என்றார். இந்திய நாட்டிய நாடக அரங்கம் குறித்த சாஸ்திரிய விதிமுறைகள் பற்றியெல்லாம் பழம்பெரும் நாடகக்கலை எழுத்தாளர் 'பாஷா' என்ற நாட்டிய சாஸ்திர நூலை இயற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தக் கூடியாட்டம் சமஸ்கிருத நாட்டிய நாடகம் பாஷா நாட்டிய சாஸ்திர விதிகளின் படியே எழுதி நடிக்கப்படுகின்றன என்கிறார் நாராயண சாக்கியார் .
கூடியாட்டம் என்பது 1. நாட்டியம் (நடிப்பு மற்றும் முகபாவனை), 2. நிருத்தம்
அல்லது ஆட்டம், 3. கீதம் அல்லது பாட்டு மற்றும் 4. வாத்தியம்
(தோற்கருவிகள் மூலம் இசைக்கப்படும் இசை) ஆகிய எல்லாம் சேர்ந்த கலவையாகும்.