வணக்கம் நண்பர்களே....
குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பற்றிய இந்தத் தொடர் கட்டுரை உங்களுக்கு சிறிதளவேனும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குகிறேன்.
ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி நிறையவே அக்கறை இருக்கும்; பல கேள்விகள் இருக்கும்; இது பற்றி விடை காண பல தேடல்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
நான் என் மூன்று பேத்திகளின் தாத்தா. தற்போது என் ஒன்றரை வயது பேத்தியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளேன்.
குழந்தைகளின் மூளை வளர்ச்சி என்பது கர்ப்பத்தில் இருக்கும் போதே துவங்கி விடுகிறது. குழந்தைக்கு மூன்று வயது முடியும்போது தொண்ணூறு சதவீத மூளை வளர்ச்சி முடிந்து விடுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இந்த முதல் மூன்று வருடங்களில், ஒரு குழந்தைக்கு பெற்றோர், வீட்டுச்சூழல் மற்றும் உறவினர்கள் மூலம் கிடைக்கும் அன்பு, அரவணைப்பு, சத்தான உணவு, கூடவே மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் மனரீதியான உந்துதல் மற்றும் ஊக்கப்படுத்துதல் எல்லாம் குழந்தையின் வாழ்நாள் முழுவதிற்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த காலங்களின் போது, குழந்தைகளின் கற்பனைத்திறன்கள் மற்றும் கூர்ந்து கவனிக்கும் திறன்கள் மேம்படுகின்றன. பச்சிளம் வயதில் கற்றல் தொடர்புடைய திறன்கள் விரைவாக மேம்படுகின்றன.
குழந்தை வளர்ச்சி மற்றும் பச்சிளம் பருவ கற்கும் தன்மை குறித்து ஒவ்வொரு குடும்பமும், சமூகமும் நிறையக் கொள்ளவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இது குறித்த தேடல்கள் நிச்சயம் பலன் தரும்.
சில புத்தகங்கள், பல வலைத்தளங்கள் இவை பற்றி எனக்கு பயனுள்ள ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தந்தன. என் குடும்ப உறுப்பினர்களும் இந்த ஆலோனைகளிலும் மற்றும் வழிகாட்டல்களிலும் ஆர்வம் காட்டினார்கள். நடைமுறையில் நாங்கள் பின்பற்றிய பல நடைமுறைகளையே பல நிபுணர்களும் பரிந்துரைதுள்ளார்கள் என்பதும் எங்களுக்கு வியப்பளித்தன. பல நேரடி அனுபவங்கள் எங்கள் பேத்தி மூலம் எங்களுக்குக் கிடைத்தன.
உங்களுக்கு எங்களுடைய தேடல்கள் பயன்படும் என நம்புவதால் இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டுரைகள் குறித்து தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இது குறித்து உங்கள் அறிவுரைகள், ஆலோசனைகள், கருத்துக்கள் யாவும் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.